பிலிப்பைன்ஸின் ஜம்போங்கா துறைமுகத்தில் இருந்து ஜோலோ தீவுக்கு, பயணிகள் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுச் சென்றது. அதில், 250-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
பலுக் தீவு அருகே சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் திடீரென தீப்பற்றியுள்ளது.
கப்பலில் வைக்கப்பட்டிருந்த பொருட்களில் இருந்து வெடிக்கும் சத்தம் கேட்ட பிறகே, உறங்கிக் கொண்டிருந்த பலருக்கும் தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, கப்பலில் பயணித்தவர்கள் தப்பிக்கக் கடலில் குதித்துள்ளனர். தகவலறிந்து வந்த கடலோர காவல் படையினர் மற்றும் அப்பகுதி மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
கடலோர காவல் படை கப்பலில் இருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் உடல் கருகியும் இடிபாடுகளில் சிக்கியும் 6 குழந்தைகள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர்.
இதில், 18 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல் போன மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.