படங்களைப் பொறுத்தவரை, பெரும் உழைப்பைக் கொட்டப்பட்டிருப்பது காட்சியாக்கத்தில் தெரிந்தால் போதும்; முக்கால்வாசி வெற்றி உறுதியாகிவிடும்.
அப்படியொரு பேருழைப்பை மட்டுமே நம்பிக் களமிறங்கும் இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன்.
பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் உட்பட அவர் இயக்கிய படங்களின் பட்ஜெட் என்னவாக இருந்தாலும், அதில் நிரம்பியிருக்கும் உழைப்பு அசாத்தியமானதாக இருக்கும்.
அந்த வரிசையில், கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்த ‘விடுதலை’ படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியிருக்கிறது.
எல்ரெட் குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன், இளவரசு உட்படப் பலர் நடித்துள்ளனர்.
விடுதலை பாகம் 1லும் வழக்கம் போல தனது குழுவினரின் பேருழைப்பினால் நம்மை பிரமிக்க வைக்கிறாரா வெற்றிமாறன்?
துடிப்புமிக்க இளைஞன்!
தமிழ்நாட்டின் மலைப்பாங்கான மாவட்டமொன்றில் வெளிநாட்டு நிறுவனமொன்று சுரங்கம் அமைக்கத் திட்டமிடுகிறது; அரசும் அதற்கு அனுமதியளிக்கிறது.
ஆனால், அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அத்திடம் பாதிக்கும் என்று மக்கள் படை எனும் இயக்கம் கிளர்ச்சியில் ஈடுபடுகிறது.
அதன் தொடர்ச்சியாக, பயணிகள் செல்லும் ரயில் ஒன்று பாலத்தின் மீது செல்லும்போது வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படுகிறது.
அதில் 30க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர்; பலர் படுகாயமடைகின்றனர். அந்த சதியின் பின்னணியில், மக்கள் படையின் தலைவர் வாத்தியார் பெருமாளும் அவரது சகாக்களும் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது; அவர்களைப் பிடிக்க ஒரு தனிப்படை முகாம் அமைக்கப்படுகிறது.
கான்ஸ்டபிள் பணியில் புதிதாகச் சேர்ந்த குமரேசன் (சூரி), அந்த முகாமுக்கு மாற்றலாகி வருகிறார்.
‘காவல் துறை என்பது மக்களுக்குச் சேவையாற்றுவதற்கானது’ என்ற எண்ணத்துடன் பணியாற்றும் அவர், தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவர். ஆனால், மலைவாழ் மக்களுக்குச் செய்யும் உதவிகள் தனிப்படை தலைமை அதிகாரிக்கு (சேத்தன்) எரிச்சலூட்டுகிறது.
அதன் விளைவாக, வேலையை விட்டு ஓடிப்போகும் அளவுக்கு குமரேசனுக்குப் பணியிடத்தில் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.
அப்போது, அருகிலுள்ள மலைக்கிராமத்தைச் சேர்ந்த தமிழரசியின் (பவானிஸ்ரீ) அன்பு மட்டுமே குமரேசனுக்கு ஆறுதல் தருகிறது. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அவர்களது பழக்கம் காதலாக மாறுகிறது.
குமரேசன் நல்லவன் என்றபோதும், தமிழரசியின் பாட்டி அந்த காதலை ஏற்பதாக இல்லை. ‘போலீஸ்காரர்களால் நம் குடும்பம் பட்ட கஷ்டங்களும் அவமானங்களும் போதாதா’ என்று தமிழரசியிடம் வாதிடுகிறார்.
இந்த நிலையில், மக்கள் படையைச் சேர்ந்த முக்கியப் பிரமுகரின் குடும்பத்தினர் அந்த மலைக்கிராமத்தில் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.
அதற்கான விசாரணை என்ற போர்வையில், தமிழரசி உட்பட அனைவரையும் கைது செய்கின்றனர் போலீசார். அத்தனை பேரும் வார்த்தைகளால் விவரிக்க இயலாத சித்திரவதைகளுக்கு ஆளாகின்றனர்.
நிர்வாணப்படுத்தப்படுவது உட்படப் பல்வேறு கொடுமைகள் பெண்களுக்கு இழைக்கப்படுகின்றன.
அதனைக் காணப் பொறுக்காமல், ‘வாத்தியார் பெருமாள் இருக்கும் இடம் தனக்குத் தெரியும்’ என்று மேலதிகாரிகளிடம் சொல்கிறார் குமரேசன்.
குமரேசன் சொல்வதைக் கேட்டு, பெருமாள் இருக்குமிடத்திற்கு போலீஸ் படை சென்றதா? போலீசாரிடம் பெருமாள் பிடிபட்டாரா என்று சொல்கிறது ‘விடுதலை’ பாகம் 1.
அடுத்த பாகத்தைக் காணும் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் சில ஷாட்கள் காட்டப்படுவதோடு படம் முடிவடைகிறது.
கீழ்நிலைக் காவலராகப் பணியாற்றும் குமரேசன் எனும் துடிப்புமிக்க இளைஞன் தன் தாய்க்கு கடிதம் எழுதுவது போன்று மொத்தக் கதையும் ஆங்காங்கே வாய்ஸ் ஓவரில் சொல்லப்படுகிறது.
குமரேசனின் அறியாமையையும் அளப்பரிய மனிதநேயத்தையும் காணும் எவரும், அப்பாத்திரமாகத் தாமே மாறியது போல உணர்வதே இப்படத்தின் வெற்றி.
அசத்தல் சூரி!
நகைச்சுவை நடிகனாக ரசிகர்களை மகிழ்வித்த சூரி, இதில் கதை நாயகனாகத் தோன்றியிருக்கிறார். குமரேசன் எனும் கான்ஸ்டபிளாகவே படம் முழுக்க வலம் வருகிறார்.
சோர்வும் களைப்பும் அயர்ச்சியும் வழியும் முகத்தில் காதலை வெளிப்படுத்தும்போது, அவரது நடிப்பு அசத்தல் ரகம் ஆக மாறுகிறது.
பிளாஷ்பேக் மோதல், கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி உட்பட நான்கைந்து இடங்களில் மட்டுமே விஜய் சேதுபதியின் இருப்பு அமைந்திருக்கிறது.
ஆனால், அவர் தோன்றுமிடங்களில் எல்லாம் ரசிகர்களின் கைத்தட்டல் கேட்கிறது.
அமைச்சராக வரும் இளவரசு, தனிப்படை முகாம் அதிகாரியாக வரும் சேத்தன், பொறுப்பாளராக வரும் மூணாறு ரமேஷ், இயக்குனர் தமிழ், சரவண சுப்பையா உட்படப் பலர் இதில் வருகின்றனர்.
அவர்களை எல்லாம் தாண்டி, ஆங்கிலத்தோடு கலந்து ஆங்காங்கே தமிழ் பேசும் தலைமைச்செயலாளர் சுப்பிரமணியமாக வரும் ராஜிவ் மேனன் நம்மை அசரடிக்கிறார்.
முதன்மையான பாத்திரங்கள் ஒரு டஜன் இருக்குமென்றால், பல காட்சிகளில் ஓரிரு வசனம் பேசி நடித்தவர்கள் என்று இரண்டு டஜன் கலைஞர்களாவது முகம் காட்டியிருப்பார்கள்.
அது போதாதென்று அடிப்பவர்களாகவும் அடி வாங்குபவர்களாகவும் தோன்றியவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருக்கும்.
இவர்களை எல்லாம் பொம்மைகள் போலக் கையாண்ட வகையில் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
ஒளிப்பதிவில் வெவ்வேறு சாதனங்களை வேல்ராஜ் பயன்படுத்தியிருப்பது திரையில் தெளிவாகத் தெரிகிறது.
சில சோதனை முயற்சிகள் ‘சோதனை’களாகவே அமைந்த காரணத்தால் உருவங்கள் மங்கலாகத் தெரிகின்றன.
அதையும் மீறி, கதை நடக்கும் களத்தை அழகுறக் காட்டாமல் ஒரு பாத்திரமாகவே தென்பட வைத்தமைக்கு பாராட்டுகள்!
கதை பரபரப்பாக நகர்ந்தாலும், ஒவ்வொரு பிரேமையும் சீர்மையுடன் கோர்க்க வேண்டுமென்பதில் மெனக்கெட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர்.
இந்திய அளவில் கவனிப்பு பெறும் வகையில் இப்படம் வரவேற்பைப் பெற்றால், அதில் இவரது உழைப்பும் முக்கியப் பங்கு வகிக்கும்.
ஜாக்கியின் கலை வடிவமைப்பு, ஸ்டன் சிவா மற்றும் பீட்டர் ஹெய்ன் குழுவினரின் சண்டைக்காட்சிகள், ஒலிக்கலவை மற்றும் விஎஃப்எக்ஸ் உட்படப் பல தரப்பிலும் கொட்டப்பட்ட பேருழைப்பே ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றியுள்ளது.
முழுப்படத்தையும் பார்த்து முடித்துவிட்டு, தனது இசையை ஒரு பாத்திரமாக மாற்றும் வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார் இளையராஜா.
டைட்டில் இசையில் ’கேப்டன் பிரபாகரன்’ பார்க்கும் உணர்வை ஏற்படுத்துபவர், கிளைமேக்ஸ் சண்டைக் காட்சிக்கு முந்தைய காட்சிகளில் வன்முறையை அழகுபடக் காண்பிக்கத் துணை நிற்கிறாரோ என்று சந்தேகப்பட வைக்கிறார்.
நமது புரிதல் தவறு என்பதை உணர்த்துகிறது அதற்கடுத்த சில நொடிகளில் பின்தொடரும் பின்னணி இசை. அதன்பிறகு, கிளைமேக்ஸ் மோதல் முழுக்க கேமிராவோடு சேர்ந்து இசையும் பயணிக்கிறது.
’அருட்பெருஞ்சோதி’ பாடல் நம் காதுகள் உணரும் முன்பே முடிந்துவிடுகிறது. ’காட்டுமல்லி’, ‘உன்னோட நடந்தா’ பாடல்கள் முழுதாக ஒலித்து அந்த குறையைத் தீர்க்கின்றன.
நிதானத்திலும் அவசரம்!
‘அசுரன்’ படத்தில் வரும் பிளாஷ்பேக் காட்சிகள் வெற்றிமாறன் அவசர அவசரமாகப் படமாக்கினாரோ என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால், ‘விடுதலை’ படமாக்கப்படுவதற்கே இரண்டரை ஆண்டுகள் பிடித்திருக்கிறது.
படப்பிடிப்பு நடந்த நாட்கள் குறைவுதான் என்றாலும், அதற்கான முன், பின் தயாரிப்புப் பணிகள் நிகழ்ந்த காலம் அதிகம்.
அதையும் மீறி, திரையில் சில ‘அவுட் ஆஃப் போகஸ்’ காட்சிகள், தரநிலை குறைவான பிம்பங்கள் தென்படுகின்றன.
பாடல் காட்சிகளில் சூரியின் கைபடும் தாவரங்கள் வனத்தில் வளர்பவையா என்ற சந்தேகம் எழுகிறது.
அதையெல்லாம் விட, கவுதம் மேனன் ஏற்ற பாத்திரத்தின் பெயர் சுனில் மேனன் என்று வசனங்களில் குறிப்பிடப்படுகிறது.
ஆனால், அவரது காக்கி உடையில் மீதிருக்கும் பட்டையில் சுனில் மேனன், சுனில் சர்மா என்ற இரு பெயர்கள் மாறி மாறி வருகின்றன. அதனை மங்கலாக்கிக் காட்டினால், அனேக யூகங்களுக்கு வழி வகுக்கும் என்று அந்த தவறை அப்படியே விட்டிருக்கின்றனர் இயக்குனர் குழுவினர்.
கண்டிப்பாக, நிதானத்திலும் அவசரம் எனும் வகையில் அது அமையப் பெற்றிருக்காது என நம்பலாம்!
தமிழ் தேசியமோ, பொதுவுடைமைச் சித்தாந்தமோ, சமூக நீதியோ பேசும் வசனங்கள் ‘விடுதலை பாகம் 1’இல் இல்லை.
ஆனால், ஏழை மக்கள் படும் வேதனைகள், அதிகாரபீடத்தின் கீழ் நசுக்கப்படும் அவலங்கள் இப்படத்தில் சொல்லப்படுகின்றன.
‘என்னோட அப்பா, அம்மாவுக்கு இந்த மாதிரி நடந்திருந்தா எந்த போலீஸ்காரனையும் மன்னிச்சிருக்க மாட்டேன்’ என்பது போன்ற பல வசனங்கள், காட்சிகள் காவல் துறையின் அத்துமீறல்களை அப்பட்டமாகச் சொல்கின்றன; அதைச் சமன் செய்வது போல சூரியின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் வரும் ரயில் பெட்டி தடம்புரளலும், கிளைமேக்ஸில் வரும் துப்பாக்கி மோதலும் திரையில் பிரமாண்டத்தைக் காட்டுகின்றன; ‘அன்று சிந்திய ரத்தம்’ என்று வரலாற்றில் மறைக்கப்பட்ட வலிகளைச் சொல்கிறது. அந்த ரணத்தை உணர்கையில், சட்டென்று படம் முடிந்துவிடுகிறது.
அது மட்டுமே இப்படத்தின் பெருங்குறை, மற்றபடி, கருத்துரீதியாக எதிர்ப்பவர்களுக்கு பிடி கொடுக்காமல் நழுவியிருக்கிறார் வெற்றி மாறன் என்றே சொல்ல வேண்டும்!
– உதய் பாடகலிங்கம்