திரைப்படங்களில் அரசியல் பற்றியும், அரசியல்வாதிகள் பற்றியும் பேசுவதில் ஒரு பெருஞ்சிக்கல் உண்டு.
சாதாரண மக்கள் நாளும் கடந்துவரும் நிகழ்வுகளைச் சொல்வதோடு, மிகச்சில பேருக்கே தெரிந்த அதன் பின்னணியைச் சூசகமாகப் பேச வேண்டும். ஏதேனும் ஒன்றை மட்டும் பின்தொடர்ந்தால், அப்படைப்பு சுவாரஸ்யத்தை இழக்கும்.
‘அந்த தடையை அலேக்காக தாண்டுகிறேன் பாருங்கள்’ என்று ’செங்களம்’ வெப்சீரிஸை தந்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
சுந்தரபாண்டியன் தொடங்கி இது கதிர்வேலன் காதல், சத்திரியன், கொம்பு வச்ச சிங்கம்டா படங்களைத் தந்தவர் இவர்.
ஜீ5 தளத்தில் வெளியாகியிருக்கும் ‘செங்களம்’, உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான அரசியல் களத்தைக் காட்டுகிறதா?
மெல்லச் சூடேறும் கதை!
விருதுநகர் வட்டாரத்தில் தொடர்ச்சியாக அரசியல்வாதிகள் கொல்லப்படுகின்றனர்.
ராயர் (கலையரசன்) மற்றும் அவரது சகோதரர்கள் (டேனியல் ஆனே போப், லகுபரன்) மூவரும் சேர்ந்து கொலைகளைச் செய்துவிட்டு, முள்காட்டினுள் பதுங்கியிருக்கின்றனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயராம் (அர்ஜெய்) தலைமையில் ஒரு போலீஸ் படை அவர்களைத் தேடுகிறது.
அவரைக் கடத்திச் செல்கின்றனர் ராயர் சகோதரர்கள். இதனால், போலீஸ் தரப்பு உக்கிரமாகிறது.
ஒருபக்கம் ராயர் சகோதரர்கள் எவ்வாறு கொலை செய்கின்றனர், போலீசார் அவர்களை நெருங்க எப்படியெல்லாம் முயற்சிக்கின்றனர் என்பது திரையில் விரிகிறது.
அதேநேரத்தில், பிளாஷ்பேக்கில் அதன் பின்னே இருக்கும் அரசியல் காரணங்கள் மெதுமெதுவாகச் சொல்லப்படுகின்றன.
விருதுநகர் நகராட்சித் தலைவர் பதவியைப் பரம்பரையாகக் கையில் வைத்திருக்கிறது சிவஞானத்தின் (சரத் லோகித்சவா) குடும்பம்.
சிவஞானத்தின் மகன் ராஜமாணிக்கம் (பவன்) தலைவர் பதவி வகிக்கும் நிலையில், கவுன்சிலர்கள் அனைவரும் அவரது கட்டுக்குள் இருக்கின்றனர். தங்களுக்கிருக்கும் செல்வாக்கைத் தக்கவைக்க, அக்குடும்பம் ஒரு கட்சியையும் நடத்துகிறது.
ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் அக்குடும்பத்தை எதிர்க்க முடியாமல் தடுமாறுகின்றன. இந்த சூழலில், சூர்யகலா (வாணி போஜன்) எனும் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார் ராஜமாணிக்கம்.
சகோதரி மரகதம் (பூஜா வைத்தியநாதன்) அதனை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டாலும், சகோதரர் நடேசனுக்கு (பிரேம்குமார்) அத்திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.
ஒருகட்டத்தில், ‘எந்நேரமும் அரசியல் என்றிருக்கும் அண்ணனுக்கு இன்னொரு திருமணம் எதற்கு’ என்று நடேசன் கேள்வியெழுப்புகிறார்; அதையடுத்து, ராஜமாணிக்கத்தையும் சூர்யகலாவையும் கொடைக்கானலில் தேனிலவு கொண்டாட அனுப்பி வைக்கிறார் சிவஞானம்.
செல்லும் வழியில், அவர்களது கார் மீது ஒரு லாரி மோதுகிறது; ராஜமாணிக்கம் மரணமடைகிறார். இதையடுத்து, அடுத்த நகராட்சித் தலைவர் யார் என்ற கேள்வி பூதாகரமாகிறது.
கவுன்சிலர்கள் என்னதான் விசுவாசமாய் இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், தன் குடும்பத்தினருக்கு மட்டுமே அப்பதவி சொந்தமாக வேண்டுமென்று நினைக்கிறார் சிவஞானம். அதனால், சூர்யகலாவை அந்த இடத்தில் வைத்து அழகு பார்க்கலாமா என்று யோசிக்கிறார்.
அது மரகதத்திற்கும் அவரது கணவருக்கும் எரிச்சலைத் தருகிறது. நடேசனோ அந்த விவகாரத்தில் ஆர்வம் காட்ட விரும்பாதவராக இருக்கிறார்.
தன் கணவரைத் தெய்வமாக மக்கள் போற்றியதைக் கண்ட சூர்யகலாவுக்குத் தானும் அது போன்ற மரியாதையை அனுபவிக்க வேண்டுமென்று விரும்புகிறார்.
அரசியல் பற்றி எதுவும் தெரியாத பெற்றோர், உறவினர்களை விட, அது பற்றிய ஞானம் கொண்ட தனது பள்ளி, கல்லூரித் தோழியான நாச்சியாரை (ஷாலி நிவேகாஸ்) உடன் வைத்துக்கொள்ள விரும்புகிறார்.
நாச்சியாரின் தாயும் சகோதரர் ராயரும் அதற்கு ஒப்புக்கொள்கின்றனர். சூர்யகலா உடன் நாச்சியாரை அனுப்பி வைக்கின்றனர். அவர்களுக்குத் துணையாக இருக்கும் வகையில், ராயரும் செல்கிறார்.
சூர்யகலாவுக்குப் பக்கபலமாக இருக்கும் நாச்சியாரின் வரவு சிவஞானத்தையே மிரள வைக்கிறது.
ஒருபக்கம் சிவஞானம், இன்னொரு பக்கம் பெரிய அரசியல் கட்சிகள், இரு தரப்பையும் எதிர்த்து நாச்சியார் குடும்பத்தினரின் துணையுடன் சூர்யகலா நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றினாரா? அப்படிக் கைப்பற்றினார் என்றால், நாச்சியாரின் சகோதரர்கள் ஏன் தொடர் கொலைகளைச் செய்ய வேண்டும்? இக்கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘செங்களம்’.
ராயர் சகோதரர்கள் செய்யும் கொலைகளுக்கும் விருதுநகர் நகராட்சித் தலைவர் பதவி யாரைச் சென்றடைந்தது என்பதுதான் கதையின் மையம். அதனைச் சொல்ல நிறையவே நேரம் எடுத்துக்கொள்வதால், மெல்லச் சூடேறும் அரசியல் களமாக விளங்குகிறது ‘செங்களம்’.
அபாரமான தேர்வு!
‘செங்களம்’ தொடரின் சிறப்பம்சமே நடிகர் நடிகைகளின் தேர்வு தான். வாணி போஜன், கலையரசன், சரத் லோகித்சவா, பிரேம்குமார், வேல.ராமமூர்த்தி, முத்துகுமார், பக்ஸ் என்று பிரதான பாத்திரங்களாக வருபவர்களைத் தாண்டி சிறு பாத்திரங்களில் நடித்தவர்களும் நம்மை ஈர்க்கின்றனர்.
‘ஓ மை கடவுளே’ உட்பட மிகச்சில படங்களில் நல்ல நடிப்பைத் தந்திருந்தாலும், வாணி போஜனுக்கு ‘செங்களம்’ மிகச்சிறப்பான அடையாளமாக அமைந்துள்ளது.
துணை பாத்திரம் போன்று தெரிந்தாலும், அவரது ‘அண்டர்பிளே’ நடிப்பு அபாரம்.
ராயராக வரும் கலையரசனும் சரி, சிவஞானமாக வரும் சரத் லோகித்சவாவும் சரி, ஏற்கனவே பல படங்களில் நாம் பார்த்த நடிப்பையே வெளிப்படுத்துகின்றனர்.
ஆனாலும், மிகச்சிறந்த கலைஞர்களாக அவர்கள் இருப்பதால் அதனை ரசிக்க முடிகிறது.
எம்.எல்.ஏவாக வரும் வேல.ராமமூர்த்தி, மா.செ.வாக வரும் முத்துக்குமார், நடேசனாக வரும் பிரேம்குமார் இருப்பு ரொம்பவே செறிவான ஒரு கதையைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
வாணி போஜன் கணவராக வரும் பவன் குமார் சிறிது நேரமே வந்தாலும் அலட்டலான நடிப்பைத் தந்திருக்கிறார். விஜி சந்திரசேகரின் நடிப்பும் அப்படியே.
பவன் சகோதரியாக வரும் பூஜா வைத்தியநாதன், அவரது கணவராக வரும் கமலேஷ், எம்.எல்.ஏவின் உதவியாளராக வரும் பக்ஸ், இன்ஸ்பெக்டராக வரும் அர்ஜெய், நகராட்சி துணைத்தலைவராக வரும் கஜராஜ் உட்படப் பலரும் இக்கதையில் ஈர்க்கின்றனர்.
பெரிய முக்கியத்துவமில்லாதபோதும், கலையரசனின் சகோதரர்களாக டேனியலும் லகுபரனும் துணை பாத்திரங்களாகவே இப்படைப்பு முழுக்க வந்து போயிருக்கின்றனர்.
கலையரசனின் மனைவியாக வரும் மானசா ராதாகிருஷ்ணன் மலையாளத்தில் பல படங்களில் நடித்தவர்; தமிழில் இதுவே அவருக்கு அறிமுகம். அழகுச்சிலையாக வந்து போகும் அவருக்குத் திரையில் போதுமான காட்சிகள் இல்லை.
’செங்களம்’ பார்த்து முடித்தபிறகு, நம் மனதில் நிறைவது ஷாலி நிவேகாஸ் ஏற்ற ‘நாச்சியார்’ பாத்திரம்தான்.
திரைப்பட ரசிகர்களுக்கு அவர் புதுமுகமாகத் தெரிவதும், யூடியூப் பிரியர்களுக்கு அவரது இருப்பு உற்சாகம் தருவதும் ‘செங்கள’த்தின் சிறப்பு.
பெரிய விழிகளையும் விறைப்பான உடல்மொழியையும் மெல்ல மெல்ல மாற்றியிருப்பதுதான் ஷாலியின் இருப்புக்குக் கிடைத்த வெற்றி.
ஷாலி உட்படப் பல நடிகர் நடிகைகளிடம் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் வே வாங்கிய விதமே இதனை ‘அபாரம்’ என்று சொல்ல வைத்திருக்கிறது.
சீரியலை விட ஒருபடி மேலானதாக, சினிமாவை விட ஒரு படி கீழிருக்கும் வகையில் அமைந்திருக்கிறது வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு.
இப்படியொரு கேமிரா பார்வைதான் கதையை யதார்த்தமாக உணர வழி வகுக்கும் என்று ‘செங்களம்’ குழு எண்ணியிருக்கலாம். ஆனால், அது ‘காட்சி விருந்து’ ஆக மாறுவதற்குத் தடையாகியிருக்கிறது.
பிஜு டான்பாஸ்கோவின் படத்தொகுப்பில் பல காட்சிகள் நீண்டு நெளிந்து சீரியல் அனுபவத்தைத் தருகின்றன. கொஞ்சம் நெருக்கி நறுக்கியிருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
கலை இயக்குனர் முத்துவின் பணியானது தேர்தல் அரசியலில் இருப்பவர்களின் வாழ்வைத் திரையில் காட்ட உதவியிருக்கிறது. தரண்குமாரின் பின்னணி இசை முக்கியமான திருப்பங்களில் விறுவிறுப்பூட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திரைப்படத்திற்கும் வெப்சீரிஸுக்குமான வித்தியாசத்தை உணர்ந்து, ஒவ்வொரு எபிசோடிலும் பார்வையாளர்களுக்கு ஏதேனும் ஒரு ஆச்சர்யத்தைத் தர வேண்டுமென்று மெனக்கெட்டிருக்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்.
‘அரசியல் ஒரு புதிர்’ என்ற வாசகத்தை நினைவில் கொள்ளும் வகையில் காட்சிகளை அவர் வடிவமைத்திருப்பது, பல இடங்களில் வரும் தொய்வை மீறி அடுத்தடுத்த எபிசோடுகளை காண வகை செய்கிறது.
பிரபாகரனின் தைரியம்!
வாணி போஜன் மற்றும் ஷாலி ஏற்ற பாத்திரங்களை மிகத்தெளிவாக வடிவமைத்ததே ‘செங்களம்’ கதையின் மாபெரும் பலம்.
அந்த காரணத்தினாலேயே, இதர பாத்திரங்களனைத்தும் சிற்சில வித்தியாசங்களோடு இருப்பதை நம்மால் ரசிக்க முடிகிறது.
மாவட்டச் செயலாளரின் அல்லக்கையாக இருக்கும் ஒருவர், டீக்கடை பையனை அறைக்குள் போகச் சொல்லி அவரது மனநிலையை உணர முயற்சிக்கும் காட்சி ஒன்று இதில் உள்ளது; அக்காட்சி மிகச்சாதாரணமானது.
ஆனால், அதன் வழியே மிக எளிதாகத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் தொண்டர்களும் எப்படிப்பட்டவர்கள் என்பதை நமக்குக் கடத்திவிடுகிறார் இயக்குனர்.
தொடர்ச்சியாக வெப்சீரிஸ் பார்க்கும் ஒரு ரசிகரால், இக்கதையின் போக்கை எளிதாகத் தீர்மானித்துவிட முடியும்.
அதற்கு வாய்ப்பு தராமல் நிறைய கிளைக்கதைகளையும் அவற்றில் சில முடிச்சுகளையும் நிரப்பி வைத்திருக்கிறார் பிரபாகரன்.
அதுதான், வேகத்தைக் கூட்டியும் குறைத்தும் பயணிக்கும் ஒரு வாகனத்தில் ஏறிய ‘எபெக்டை’ கடத்துகிறது.
எட்டு எபிசோடுகள் வரை உடனடியாகப் பார்க்க உதவும் இந்த உத்தி, 9வது எபிசோடில் முழுக்கவே நீர்த்துப்போகிறது.
தினசரிகளையும் பத்திரிகைகளையும் வாசிக்கும் வழக்கமுள்ள ஒரு மனிதரால், நாட்டு அரசியலை உற்றுக் கவனிக்கும் ஒருவரால் இதில் வரும் திருப்பங்களை எளிதாக ஊகித்துவிட முடியும்.
உண்மையைச் சொன்னால், அந்த திருப்பம் தெரிந்துவிடக் கூடாது என்றே வாணி போஜன், ஷாலி சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காட்டாமல் 7வது எபிசோடு வரை இழுத்தடித்திருக்கிறார் இயக்குனர் பிரபாகரன்.
அந்த விஷயத்தில் மட்டும் நேர்த்தியைக் கூட்டியிருந்தால், குறைவான எபிசோடுகளில் செறிவாக நகரும் ஒரு படைப்பை உருவாக்கிய பெருமை கிடைத்திருக்கும்.
அனைத்துக்கும் மேலே ‘செங்களம்’ பார்க்கும் ரசிகர் ஒவ்வொருவருக்கும் வாணி போஜன், ஷாலி நடித்துள்ள பாத்திரங்கள் நிச்சயமாக ஜெயலலிதா, சசிகலாவின் அரசியல் பயணத்தை நினைவூட்டும்.
‘உடன்பிறவா சகோதரி’ உள்ளிட்ட வார்த்தைகள் வசனங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதும் கூட அப்படியொரு எண்ணத்தை உருவாக்குவதற்கான உத்தி தானோ என்று கருத வேண்டியிருக்கிறது.
அதுவே, இப்படைப்பை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் விஷயமாகவும் விளங்குகிறது.
ஏற்கனவே அரசியல் திரைப்படங்கள், சீரிஸ்கள் பார்த்தவர்களுக்கு ‘செங்களம்’ புதிய விஷயம் எதையும் காட்டாது; ஆனாலும், அவர்களும் பார்க்கும்படியாக சுவாரஸ்யமாக கதை சொல்லியிருப்பதே இதன் வெற்றி!
– உதய் பாடகலிங்கம்