ஆரோக்கியம் முக்கியம் நண்பர்களே…!

ஊடகவியலாளர் சிஎம். தாஸ் எழுதிய பதிவு.

திடீரென உடல்நலக் குறைவால் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. அதுவும் மாரடைப்பால் ஏற்படும் மரணங்கள்தான் பெரும்பான்மை.

ஊடகங்களில் பணிபுரியும் நண்பர்கள் உடல்நலத்தை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்பது பற்றி அவர் அக்கறையுடன் எழுதியுள்ள குறிப்புகள் இதோ.

திடீரென சில உயிரிழப்புகள் ஆரோக்கியம் குறித்த அலாரத்தை அடிக்கிறது. உண்மையில் மருத்துவமனை வாழ்க்கை மிகக் கொடூரம்.

மன நிம்மதி, நம்முடைய மொத்த சேமிப்பு என அனைத்தையும் ஒரு சேர வாரி விழுங்கும்.

அது உடல் ரீதியாக நம்மை கஷ்டப்படுத்தும் என்பது மட்டுமல்ல நம்மை சார்ந்தவர்களை மிக அதிகமாக கஷ்டப்படுத்தும்.

என் அப்பா மருத்துவமனையில் இருந்தபோதே வாழ்க்கையில் சில விஷயங்களை நான் கடைபிடிக்க முடிவெடுத்தேன்.

அதை நூறு சதவீதம் இன்னும் செயல்படுத்தவில்லை. ஆனால், பாதியை கடைப்பிடிக்கிறேன் போகப்போக மற்றதையும் செயல்படுத்த முயற்சி எடுத்து வருகிறேன்.

மன அழுத்தம்

உடல்நலப் பிரச்சனைக்கு மிக முக்கிய காரணம் மன அழுத்தம். முடிந்தவரை அதில் சிக்காதீர்கள். சூழ்நிலை நம்மை சிக்க வைத்தாலும் அதை மனதளவில் சமாளிக்க பழகுங்கள். வேலைபளு என்பதை அனுமதிக்கவே அனுமதிக்காதீர்கள்.

உங்களைக் கொல்லும் மன அழுத்தம் தரும் ஒரு வேலையில் நீங்கள் இருப்பதை உணர்ந்தால் அதை விட்டாலும் பரவாயில்லை. வேறு வேலை தேடுங்கள்.

வேலை நேரத்தில் பளு என்பது சாதாரணம். அதனை நாம் நம் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். அதன் கட்டுப்பாட்டுக்குள் செல்லக்கூடாது.

அந்த புள்ளியை சரியாக கவனிக்கவில்லை என்றால், நாம் காலிதான். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். அலுவலகத்தில் உங்களது நாற்காலிக்கு எப்போதும் இன்னொருவர் உண்டு.

சாப்பாடு

நாம் இப்போது சமைக்கும் உணவை நம்மைப் போல ஒரு மனிதர் தான் சாப்பிட போகிறார் என்கிற அடிப்படை மனிதாபிமானம் கொஞ்சம் கூட இல்லாமல் சமையல் செய்யும் ஹோட்டல்கள் சென்னை மாதிரியான நகரங்களில் மிகமிக அதிகம்.

கெட்டுவிட்டது என தெரிந்தும் அதை காசாக மாற்ற முடியுமா என யோசிக்கும் ஓனர்கள் மிக அதிகம்.

முடிந்தவரை ஹோட்டல் உணவை தவிருங்கள். மாதத்திற்கு இரண்டு முறை ஜாலியாக வெளியே சென்று நண்பர்களுடன் சாப்பிடலாம்.

அதிலேயும் குவாலிட்டி மிக முக்கியம். மற்றபடி மூன்று வேலையும் ஹோட்டல் என இருப்பவர் என்றால் தயவு செய்து எந்த காரணமும் சொல்லாமல் சமையலை தொடங்குங்கள்.

வாரத்திற்கு இரண்டு வேளை ஹோட்டல் என்பது அதிகம். சமைத்து சாப்பிடுங்கள். குறிப்பாக பேச்சிலர்கள். அதிகபட்சம் 10 ஆயிரம் செலவு செய்தால் அடுப்பு பாத்திரம் என அனைத்தையும் வாங்கி விடலாம்.

இன்றைய வீட்டுச் சாப்பாடு தான் பத்து வருடம் கழித்து நம் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும். சமைக்கத் தெரியாது, நேரம் இல்லை, ரூமில் வசதி இல்லை எந்த காரணமும் சொல்லாமல் சமையலை 100% உறுதிப்படுத்த வேண்டும்.

நேரத்துக்கு சாப்பாடு

என்னை மாதிரியான மீடியா ஆட்கள் சொதப்புவது இங்கேதான். நானும்தான். எப்படி பிஸியாக இருந்தாலும் சரியான நேரத்திற்கு சாப்பிடுவதை உறுதி செய்யவும்.

ஒரு பிரச்சனை வந்தவுடன் இனி இப்படி தான் செய்ய வேண்டும் என டாக்டர் எழுதிக் கொடுத்தவுடன் அதை நாம் பாலோ செய்வதில் பயன் ஏதும் இல்லை.

தண்ணீர்

பர பர வேலை, ஏசி அறை நம்மை தண்ணீர் குடிக்கவே மறக்கடிக்கும். தண்ணீரை குடித்துக் கொண்டே இருங்கள் என்பது இல்லை. ஆனால் கண்டிப்பாக தேவைப்படும் தண்ணீர் குடிங்க.

தூக்கம்

இரவு ஒன்றரை மணி என்பது இப்போதெல்லாம் மிக சாதாரணம். தினமும் இரண்டு மணிக்கு தூங்கும் கூட்டம் அதிகம். உணவை விட தூக்கம் மிக மிக முக்கியம்.

உங்கள் வேலைக்கு ஏற்ப தூக்கத்தை நெறிப்படுத்துங்கள். இரவு 11:30 என்பதே அதிகபட்ச நேரம். தூக்கம் வந்தா தானே என்கிற காரணம் சொல்கிறார்கள்.

முதலில் செல்போன் நெட்டை குறிப்பிட்ட நேரத்தில் ஆப் செய்யுங்கள். ஒரு மாதம் விட்டத்தைப் பார்த்துக் கொண்டே படுத்துக் கொள்ளுங்கள்.

தானாக உங்கள் தூங்கும் நேரம் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நைட்டு தூங்கல அதனால பகல்ல தூங்கி விடுகிறேன் என்பதெல்லாம் சரியல்ல. இரவு தூக்கம் மட்டுமே ஆரோக்கியம்

அடிப்படை உடற்பயிற்சி

அவ்வப்போது நான் தொடங்கினாலும் அதிகம் சொதப்புவது இங்கே தான்.
ஜிம்முக்கு செல்ல வேண்டாம், 10 கிலோ மீட்டர் ஓட வேண்டாம், அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு மூன்று கிலோ மீட்டர் வாக்கிங்.

காலை எழுந்ததும் பேசிக் உடற்பயிற்சி. மூச்சுப் பயிற்சி, யோகா ஏதோ ஒன்று. சாப்பாடு போல இனி கட்டாயப்படுத்திக் கொள்ளுங்கள். 

செக்கப்

வருடத்திற்கு ஒரு முறை ஃபுல் பாடி செக்கப் செய்து கொள்ளுங்கள். உங்கள் உடம்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் அம்மா அப்பாவுக்கும் கூட.

மிகப்பெரிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இதனை ஏற்பாடு ஏற்பாடு செய்தால் நல்லது. அப்படி இல்லை என்றாலும் நம் உடலை நாம் தானே கவனித்துக் கொள்ள வேண்டும்.

புகை, மது வேண்டாம்:

இதில் எந்தக் கதை இருந்தாலும் தவிர்ப்பது மிக நல்லது. என்னால் புகை பிடிக்காமல் இருக்கவே முடியாது என சொல்பவர்கள் தயவு செய்து யாருமே இல்லாத இடத்தில் ஓரமாக நின்று புகைத்து சந்தோஷப்படுங்கள். சம்பந்தம் இல்லாமல் மற்றவர்களை சாவடிக்காதீர்கள்.

– தாஸ்.

Comments (0)
Add Comment