– இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை
சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்களால் ரமலான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதற்காக ரமலான் மாதத்தில் 30 நாட்களும் அதிகாலை முதல் சூரியன் மறையும் வரை பகலில் நோன்பிருந்து இரவில் தாராவீஹ் என்ற சிறப்புத் தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபடுவார்கள்.
இன்று வளைகுடா நாடுகளில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, ரமலான் நோன்பு தொடங்கியது. தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்தார்.
இதையொட்டி முஸ்லிம்கள் அனைவரும் ரமலான் நோன்பு கடைபிடிக்கத் தொடங்கினர்.
ரமலான் நோன்பு தொடங்கியதையொட்டி உலகபுகழ் பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உட்பட நாகை மாவட்டத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் நோன்பைக் கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்புக் காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும் வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது சிறப்பு.
நாகூரில் தொழுகை மேற்கொண்ட இஸ்லாமியர்கள் பேசும்போது, “இந்த காலத்தில் அதிக நேரம் இறை வழிபாட்டில் ஈடுபடும் இஸ்லாமியர்கள் சாதி, மத பேதமின்றி உலகில் அனைவரும் சுபிட்சமாக வாழவும் மீண்டும் கொரோனா அச்சம் தொற்றியுள்ள நிலையில் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் நோய் நொடி இல்லாமல் வாழ பிரார்த்தனை மேற்கொள்வோம்” என தெரிவித்தனர்.