10 நாட்களுக்குள் விரிவான பதில் அளிப்பதாக ராகுல் உறுதி!

– பெண்கள் பாலியல்  வன்கொடுமை குறித்து கருத்து

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை எனும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டார்.

அப்போது காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த ஜனவரி 30-ம் தேதி பேசிய அவர், ”நாட்டில் பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கத் தயங்குகிறார்கள்” என்று பேசினார்.

ராகுல்காந்தி பேசி 45 நாட்கள் ஆன நிலையில், பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக தன்னை அணுகிய பெண்களின் விவரங்களை ராகுல் தருமாறு கோரி டெல்லி காவல்துறையினர் கடந்த 16-ம் தேதி நோட்டீஸ் அனுப்பினர்.

அதைத் தொடர்ந்து டெல்லி காவல்துறை சிறப்பு ஆணையர் சாகர் பிரீத் ஹூடா தலைமையிலான குழு நேற்று காலை ராகுலிடம் வாக்குமூலம் பெற அவரது வீட்டிற்கு வந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு குவிந்தனர். ராகுலிடம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் முழக்கமிட்டதால் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், முதற்கட்ட அறிக்கையை காவல்துறையினரிடம் ராகுல் வழங்கியதாகவும், 10 நாட்களுக்குள் விரிவான பதில் அளிப்பதாக உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

Comments (0)
Add Comment