‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்’ எனும் பாடல் எம்ஜிஆர் ரசிகர்களிடையே பிரபலம்.
‘நினைத்தவன் முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளையொட்டி அப்பாடல் அமைந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அதனை ரசித்துச் சிலாகிப்பார்கள்.
அப்படி, அந்த பாடல் வரிகளுக்கு நான் ரசிகன் எனும் சொல்லும்விதமாக ஒரு படத்தைத் தர முயன்றிருக்கிறார் மாறன்.
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, பிரசன்னா, வசுந்தரா, ஸ்ரீகாந்த், பூமிகா, சதீஷ், மாரிமுத்து நடிப்பில் ‘கண்ணை நம்பாதே’ படம் தந்திருக்கிறார்.
அடுத்தடுத்து திருப்பங்கள்!
’விண்ணைத் தாண்டி வருவாயா’ பாணியில், ஒரு வீட்டுக்கு வாடகைதாரராகச் சென்று அந்த வீட்டு உரிமையாளரின் மகள் திவ்யாவைக் (ஆத்மிகா) காதலிக்கிறார் அருண் (உதயநிதி ஸ்டாலின்).
வீட்டு உரிமையாளருக்கு (ஞானசம்பந்தன்) விஷயம் தெரியவர, ஒரே நாளில் வீட்டைக் காலி செய்ய வேண்டுமென்கிறார்.
அங்குமிங்கும் அலைந்து திரிந்து, ஒரு வீட்டுக்குக் குடிபோகிறார் அருண். அந்த வீட்டில், ஏற்கனவே சோமு (பிரசன்னா) என்பவர் குடியிருக்கிறார்.
அன்றிரவு, ‘மது அருந்தலாமா’ என்று சோமு கேட்க, ‘எனது நண்பர் குடிப்பார்’ என்று ஜெகனை (சதீஷ்) அழைத்து வருகிறார் அருண். அந்த நேரத்தில், திவ்யாவின் அழைப்பு வர மொபைலை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறார்.
அப்போது, அருணின் கண்ணெதிரே ஒரு விபத்து நடக்கிறது. காரில் இருக்கும் பெண்ணால் சரிவர கார் ஓட்ட முடிவதில்லை.
வேறு வழியில்லாமல், அருண் கார் ஓட்டிச் சென்று அவரை ‘ட்ராப்’ செய்கிறார். ‘காரை எடுத்துக்கிட்டு போங்க, காலையில கொண்டு வந்தா போதும்’ என்கிறார் அந்த பெண் (பூமிகா). அருணுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
பாரில் இருந்து திரும்பும் வழியில் ஜெகனிடமும் சோமுவிடமும் இதனைச் சொல்லியவாறே வருகிறார்.
ஜெகன் இறங்கிக்கொள்ள, சோமுவும் அருணும் வீடு திரும்புகின்றனர்.
நள்ளிரவில் தூக்கம் வராமல் தவிக்கும் சோமு, அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்றால் என்னவென்று நினைக்கிறார்.
அதேபோல, அருணின் அறையில் இருக்கும் கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.
அந்த வீட்டில் அந்த பெண்மணி தனியாக இருக்கிறார். அவரிடம் சோமு அத்துமீற முயற்சிக்கிறார்.
அந்த களேபரத்தில், அந்த பெண் பேச்சு மூச்சற்று கீழே விழுகிறார். அவசர அவசரமாக சோமு அங்கிருந்து வெளியேறுகிறார்.
அடுத்த நாள் காலையில் காரை எடுக்க முயற்சிக்கும்போது, அதில் அந்த பெண்ணின் பிணம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார் அருண்.
கார் இங்கிருக்கும்போது பிணம் மட்டும் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியைத் தேடி அவர் பயணிப்பதே மொத்தக் கதையாக மாறுகிறது. அதில் அடுத்தடுத்து பல திருப்பங்கள்.
அவற்றில் பல ’இதெல்லாம் தெரிஞ்ச கதைதானே பாஸ்’ எனும் விதமாக இருப்பதுதான் பலவீனம்.
என்னமா கதை சொல்றாங்க!
ஒரு சாதாரண நகர்ப்புற இளைஞன் பாத்திரத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். ‘மனிதன்’ படத்திற்குப் பிறகு, குறிப்பிட்டுச் சொல்லும்படியான படங்களில் நடிக்க வேண்டுமென்று அவர் மெனக்கெட்ட காலத்தில் ‘கமிட்’ ஆன படம் இது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
எந்திரத்தனமாக வசனம் பேசாமல், திரையில் தனது இருப்பு அபத்தமாகத் தெரியாமல் கவனம் காத்திருக்கிறார்.
ஆத்மிகாவுக்கு இதில் பெரிய வேடமில்லை; ஆனால், நல்ல வேடம் கிடைத்தால் நடிப்பேன் என்கிற பதில் அவரது பாவனைகளில் தெரிகிறது.
‘அஞ்சாதே’, ‘முரண்’ படம் பார்த்தவர்களுக்கு, இதில் பிரசன்னாவின் நடிப்பு பெரிதாகத் தெரியாது. அதற்கேற்ப, அவரும் ‘ஜஸ்ட் லைக் தட்’ வந்து போயிருக்கிறார்.
அதேபோல, ஸ்ரீகாந்த் மற்றும் பூமிகாவின் வேடங்களும் சொல்லத்தக்க அளவில் அமையவில்லை.
முன்பாதியில் வரும் சுபிக்ஷா, பின்பாதியில் வரும் வசுந்தரா இருவரும் இரண்டொரு காட்சிகளில் கவனம் ஈர்க்கின்றனர்.
சதீஷ், மாரிமுத்து, ஞானசம்பந்தன், சென்றாயன், பழ.கருப்பையா, கராத்தே கார்த்தி உள்ளிட்டோரும் இக்கதையில் வந்து போயிருக்கின்றனர்.
ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு, இரவு நேரத்தை கேமிராவில் விழுங்கியிருக்கிறது. ஷான் லோகேஷின் படத்தொகுப்பு, அடுத்தடுத்து வெவ்வேறு திருப்பங்கள் வருவதை நியாயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
சித்து குமாரின் பின்னணி இசை ஆங்காங்கே சுவாரஸ்யப்படுத்துகிறது.
மிகச்செறிவான உள்ளடக்கம் கொண்ட காட்சிகள், அவை இரவில் நிகழ்வதாக வடிவமைக்கப்பட்ட விதம் போன்றவை இப்படம் நான்காண்டுகளுக்கும் மேலாகத் தயாரிப்பில் இருந்ததை மறக்கடிக்கிறது.
அதற்கான பாராட்டுகள் இயக்குனர் மாறனை மட்டுமே சாரும். ‘என்னமா கதை சொல்றாங்க’ என்ற வகையில் பல பாத்திரங்கள், அவற்றின் குணாதிசயங்கள், அதனால் நிகழும் மாற்றங்கள் என்று முதல் பாதி சுவாரஸ்யப்படுத்துகிறது. ஆனால், இரண்டாம் பாதி திரைக்கதை அதற்கேற்றவாறு இல்லை.
பொய்த்துப்போன எதிர்பார்ப்பு!
முதல் படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தில் திடுக்கிடும் திருப்பங்களை மீறி, ரசிகர்கள் எதிர்பாராத வகையில் சுவாரஸ்யங்களை அள்ளித் தந்தார் மாறன்.
இதிலும் அதேவித முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்; ஆனால், வெற்றிதான் கிட்டவில்லை.
பூமிகாவை பார்த்ததும் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்வதுதான் திருப்பங்களின் தொடக்கமாகத் தென்படுகிறது.
ஆனால், மொத்தப் படத்தையும் பார்த்தபிறகு அவர் பிரசன்னாவைச் சந்திப்பதுதான் தொடக்கம் என்று பிடிபடுகிறது.
திரைக்கதையில் அதனை அடிக்கோடிட்டுக் காட்டவில்லை; அதேபோல, யார் வில்லன் என்ற குழப்பம் உதயநிதியின் பாத்திரத்தைப் போல நம்மையும் தொற்றுகிறது.
உதயநிதியின் நண்பராக வரும் சதீஷ், காணாமல்போகும் சுபிக்ஷா, பின்தொடரும் மர்ம நபராக வரும் கராத்தே கார்த்தி, நாயகனிடம் கோபத்தைக் கொட்டிய ஞானசம்பந்தன், இன்ஸ்பெக்டராக வரும் மாரிமுத்துவின் மகன் பாத்திரம் போன்ற பல மனிதர்களின் பின்னணி இக்கதையில் விளக்கப்படவில்லை.
கண்டிப்பாக அதைச் செய்திருந்தால் த்ரில்லர் கதைக்கான நியாயம் வலுப்பட்டிருக்கும். அதைவிட்டு, வெறுமனே பிரசன்னா, உதயநிதியின் பின்னே திரிகிறது திரைக்கதை.
முடிவு இதுதான் என்று யோசித்துவிட்டு மொத்தக் கதையையும் வடிவமைத்தாலும், நான்காண்டு காலமாக நடந்த படப்பிடிப்பு அத்தனையிலும் குழப்பத்தை உண்டுபண்ணியிருக்கிறது.
உதயநிதி மற்றும் பிற கலைஞர்களின் தோற்றத்தைக் கண்டு திகைக்காத அளவுக்குப் படம்பிடித்தது மாறனின் திறமைதான்.
ஆனால், ஒரு சாதாரண ரசிகன் படத்தைப் பார்த்துவிட்டு வெளிவருகையில் உணரும் திருப்தியைத் தரத் தவறியிருக்கிறார்.
முந்தைய படம் பார்த்துவிட்டு தியேட்டருக்கு வந்தவர்களின் எதிர்பார்ப்பினைப் பொய்த்துப் போகச் செய்திருக்கிறார்.
சம்பந்தப்பட்டவர்களின் கடின உழைப்பையும் மீறித் திரையில் கதை சொல்லப்படுவதை வைத்தே ஒரு படத்தின் வெற்றி அமையும். அந்த வகையில், கண்ணை நம்பாதே நம்மை ஏமாற்றியிருக்கிறது.
-உதய் பாடகலிங்கம்