கனவு மட்டும் காண்பவர்களால் வெற்றி பெற முடியாது!

ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்: 1

ஒரு நிறுவனத்தில் டிரைவர் வேலைக்காக ஐந்து பேரை இன்டர்வியூவிற்கு அழைத்திருந்தார்கள்.

அவர்கள் ஐந்து பேரும் வந்தவுடன், அந்த நிறுவனத்தின் ரிசப்ஷனிஸ்ட் அவர்களை அழைத்து, “இன்டர்வியூ தொடங்க அரை மணி நேரம் தாமதமாகும். அதுவரை எதிரில் உள்ள டீக்கடைக்குச் சென்று தேநீர் அருந்திவிட்டு மெதுவாக வாருங்கள்” என்று சொல்லி டீ கூப்பனையும் கையில் கொடுத்தார்.

அவர்கள் எதிரில் உள்ள டீக்கடைக்குச் சென்று விட்டு திரும்பி வந்தனர்.

அப்போது ரிசப்ஷன் பகுதிக்குள் நுழைந்த அந்த நிறுவனத்தின் எச்.ஆர். மேனேஜர், அந்த ஐவரில் ஒருவரை மட்டும் இருக்கச் சொல்லிவிட்டு பிறரைப் பார்த்து, “நீங்கள் வீட்டிற்குப் போகலாம்” என்றார்.

வந்தவர்கள், “இண்டர்வியூ?” என்று கேட்டனர்.

“இண்டர்வியூ முடிந்து விட்டது. நீங்கள் நான்கு பேரும் டீக்கடையில் சிகரெட் பிடித்தீர்கள். செல்போனில் பேசிக் கொண்டே இருந்தீர்கள். ஆனால் இவர் ஒருவர்தான் புகை பிடிக்காதவர்; செல்போனையும் பயன்படுத்தாதவர். அதனால் இவருக்கே இந்த வேலை” என்றார் அந்த மேலாளர்.

ஆம்! இண்டர்வியூவில் தேர்வுகளைப் போன்று, நமது வாழ்க்கையிலும் சவால்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற விரும்பினால், என்ன செய்ய வேண்டும்?

முதலில் அப்படி வெற்றி பெறுவதாகக் கனவு காண வேண்டும் என்று தன்னம்பிக்கை புத்தகங்கள் சொல்கின்றன.

கனவு காண்பதால் மட்டும் நாம் வெற்றியை அடைந்து விட முடியுமா? ஒருபோதும் முடியாது.

அண்மையில் ஒரு மார்க்கெட்டிங் அதிகாரி வீட்டிற்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அவர் தாம் முகம் பார்க்கும் கண்ணாடியில் ரிலையன்ஸ் அம்பானி, ரத்தன் டாட்டா ஆகிய இருவரது படங்களையும் ஒட்டி வைத்திருந்தார்.

அதற்குக் கீழே, “இவர்களைப் போல் இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரராவதுதான் எனது கனவு” என்று எழுதி வைத்திருந்தார்.

“இந்தப் போஸ்டரை எவ்வளவு நாட்களாக ஒட்டி வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “கடந்த பத்து ஆண்டுகளாக” என்றார்.

“இந்தப் பத்து ஆண்டுகளில் உங்கள் வாழ்க்கைத் தரம் ஏதாவது உயர்திருக்கிறதா?”

“இல்லை அப்படியேதான் இருக்கிறது.”

இரண்டாவது சம்பவம்.

கல்லூரி முடித்து வேலைக்கு விண்ணப்பித்திருந்த ஒரு மாணவனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவன் பர்சில் யாருடைய போட்டோவை வைத்திருக்கிறான் என்று கேட்டார் நிறுவன மேலாளர்.

“சச்சின் டெண்டுல்கர்”

“எதற்காக?”

“அவரைப் போல் ஆக வேண்டுமென்ற உந்துதலால்”

“ஏன் ஆகவில்லை?”

“விளையாட்டை விட படிப்பு உயர்ந்தது என்று எல்லோரும் திரும்பத் திரும்பச் சொன்னார்கள். அதனால் எனது கனவு கனவாகவே போய்விட்டது.”

விக்ரம், விஜய், அஜீத், ஏ.ஆர். ரகுமான், விஸ்வநாத் ஆனந்த, சானியா மிர்சா, எம்.எஸ். தோனி, விராத் கோஹ்லி… என இவர்களைப் போன்று ஆகவேண்டும் என்று கனவு காண்பவர்களெல்லாம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்…

வெறும் கனவு கண்டால் மட்டும் வெற்றியாளராக அல்லது சாதனையாளராக அல்லது கோடீஸ்வரராக ஆகிவிட முடியாது.

அப்படியானால், அதற்கு என்ன தேவை?

பொறுத்திருங்கள். அடுத்த இதழில் பேசுவோம்.

(தொடரும்…)

ராம்குமார் சிங்காரத்தில் ‘பணமுதிர்ச்சோலை’ நூலிலிருந்து…

https://ramkumarsingaram.com

Comments (0)
Add Comment