– முனைவர் துரை. ரவிக்குமார் எம்.பி.
சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்த சோஷலிச அரசுகள் வீழ்ச்சியடைந்ததையொட்டி, ‘கம்யூனிசம் என்பது இனி வெறும் கனவுதானா?’, ‘மார்க்சியம் என்பது காலாவதியாகிப் போன தத்துவமா?’ என்ற கேள்விகள் 1980-களின் பிற்பகுதியில் தீவிரமான விவாதங்களை எழுப்பிக்கொண்டிருந்த நேரம்.
மார்க்சியத்தின் மீது பற்றும் நம்பிக்கையும் கொண்ட தோழர்கள் அதைப் பற்றி விவாதிப்பதென முடிவெடுத்து 18.03.1990 அன்று பாண்டிச்சேரியில் எனது வீட்டில் கூடினோம்.
கோவை ஞானி, எஸ்.என்.நாகராசன், கல்யாணி, அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி உள்ளிட்ட தோழர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் தொகுக்கப்பட்டு அதே ஆண்டின் இறுதியில் நானும் அ.மார்க்ஸ், பொ.வேல்சாமி ஆகியோரும் இணைந்து ஆரம்பித்த நிறப்பிரிகை இதழில் வெளியிடப்பட்டன.
அந்தக் கூட்டம் நடந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், ‘மார்க்ஸியம் தோற்காது, தோற்கக் கூடாது’ என்று அப்போது இருந்த தவிப்பு இன்னும் என்னை விட்டு அகலவில்லை.
அல்தூஸரிலிருந்து, அந்தோனியோ நெக்ரி வரை எத்தனைபேரை வாசித்தாலும் மார்க்ஸ் ஒருவரைத்தான் ‘எனது ஆசான்’ என என்னால் உணர முடிகிறது.
எனக்கு மட்டுமல்ல, கார்ல் மார்க்ஸை ஈடுபாட்டோடு வாசித்த எவரொருவருக்கும் இருக்கக்கூடிய மனநிலைதான் அது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் 1818 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்த ஒருவர் எப்படி உலகின் ஏதோவொரு மூலையில் இருக்கும் ஒருவருக்கு ஆசானாக இருக்க முடியும் என வியப்பு தோன்றலாம். அதுதான் மார்க்சியத்தின் ஆற்றல்.
அவர் ஐரோப்பிய நாடுகளைப் பற்றி மட்டும் எழுதவில்லை, இந்தியாவைப் பற்றியும் எழுதியிருக்கிறார்.
அவற்றைப் படித்தால் இந்தியாவில் பிறந்தவர்களைவிட இந்தியாவைப் பற்றிய கார்ல் மார்க்ஸின் புரிதல் சிறப்பாக இருப்பதை உணரலாம்.
1853க்கும் 1858க்கும் இடையில் கார்ல் மார்க்ஸ் நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன் பத்திரிகைக்கு இந்தியா குறித்து முப்பத்துமூன்று கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1857இல் நடந்த சிப்பாய் கலகம் பற்றி உடனடியாகவே இரண்டு கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
அவர் தனது இறுதிக் காலத்தில் இந்தியாவைப் பற்றி எழுதி வைத்திருந்த குறிப்புகள் பின்னர் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளன.
1664 முதல் 1858 வரையிலான இந்திய வரலாறு குறித்து அவர் அந்தக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார்.
இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்களுக்கும் பிரெஞ்ச்காரர்களுக்கும் இடையே நடந்த போர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளில் இடையிடையே வரலாற்றுப் புதினத்தைப்போல சுவாரசியமான தகவல்கள் நிறைந்துள்ளன.
தென்னிந்தியாவில் தமிழ் உட்பட ஐந்து மொழிகள் பேசப்பட்டதையும், தமிழ் அரசே தொன்மையானது எனவும் எழுதியுள்ளார்.
பாண்டிய, சோழ, சேர அரசுகள் குறித்தும், மாலிக்காபூரின் படையெடுப்பு, அவர் அடித்த கொள்ளைகள், கன்னியாகுமரியில் அவரால் கட்டப்பட்ட மசூதி குறித்த செய்திகளும் மார்க்ஸின் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
கோட்பாட்டை அனுபவங்களோடு இணைத்து அதை எளிதாகப் புரிய வைப்பது மார்க்ஸின் அணுகுமுறை. உலகம் குறித்து அவர் உருவாக்கும் சித்திரிப்பு முதலில் எல்லோருக்கும் தென்படும் தோற்றத்தைக் காட்டும்.
அதன் பின்னர் அந்தத் தோற்றத்தின் அடிநாதமாகவுள்ள மனித வாழ்வின் அடிப்படை அம்சங்களை நோக்கி வாசகர்களை இட்டுச்செல்லும். அதன் நடைமுறை ரீதியிலான முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்தும்.
ஒரு தத்துவமாக மார்க்சியத்தை வாசிக்கும்போது நாம் அதன் அடிநாதமாக உள்ள அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறோம். அதை நமது அனுபவங்களோடு பொருத்திப் பார்க்கிறோம்.
இலக்கியமும் தத்துவமும் ஒருசேரக் கலந்து எழுதப்பட்ட அவரது படைப்புக்குள் நம்மைப் பறிகொடுக்கிறோம்.
இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எழுதியது மட்டுமின்றி அவரைப் பற்றி இந்தியாவிலும் எண்ணற்ற நூல்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் அம்பேத்கர் எழுதிய ‘புத்தரா கார்ல் மார்க்ஸா?’ என்ற கட்டுரை கவனத்துக்குரியது.
நீலமும், சிவப்பும் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் தளத்தில் வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில், அம்பேத்கரின் வழியைப் பின்பற்றி ஆங்காங்கே தலித்துகள் பௌத்த மதத்தைத் தழுவிக்கொண்டிருக்கும் சூழலில் அதைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.
புத்தரின் தத்துவத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த காலத்தில் அம்பேத்கரால் எழுதப்பட்ட அந்த கட்டுரை அவரது மறைவுக்குப் பின்னரே அச்சிடப்பட்டது.
பௌத்தத்தைத் தழுவியதற்குப் பிறகு 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அம்பேத்கர் காத்மண்டுவில் நடந்த பௌத்த மாநாட்டில் பங்கேற்றார்.
’பௌத்தமும் அகிம்சையும்’ என்ற தலைப்பில் பேசுவதற்குத்தான் அவரை அழைத்திருந்தனர்.
ஆனால் அங்கு அவர் பேச எழுந்ததும் கூட்டத்தில் இருந்தவர்கள் ‘புத்தரும் கார்ல் மார்க்ஸும்’ என்ற தலைப்பில் பேசுங்கள் என ஆரவாரித்தனர். அதனால் அந்தத் தலைப்பில் அவர் பேசத் தொடங்கினார்.
“பௌத்த நாடுகளில் இருக்கும் இளைஞர்களில் பலர் கார்ல் மார்க்ஸை தேவதூதராகப் பார்க்கிறார்கள்” எனக் கவலை தெரிவித்த அம்பேத்கர் அங்கு ஆற்றிய உரையின் பொழிப்பை தனஞ்சய் கீர் தனது நூலில் (பக்கம் 508) தந்திருக்கிறார்.
அந்த உரை ‘புத்தரா கார்ல் மார்க்ஸா?’ என்ற கட்டுரையின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.
“புத்தர், கார்ல் மார்க்ஸ் ஆகிய இருவரையும் கற்று அவர்கள் இருவரது கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டவன்” எனத் தன்னை அக்கட்டுரையில் அம்பேத்கர் கூறிக்கொள்கிறார்.
மார்க்சிஸ்டுகள் தங்களது விருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு புத்தரைப் படித்தறிந்தால் அவர்களது கருத்தோட்டத்தில் மாற்றம் ஏற்படும் என அக்கட்டுரையில் அம்பேத்கர் குறிப்பிடுவதைப் பார்க்கும்போது பௌத்தர்களிடம் கார்ல் மார்க்ஸை அறிமுகப்படுத்துவதைவிடவும் மார்க்சிஸ்டுகளிடம் புத்தரைக் கொண்டுபோய் சேர்ப்பதற்காகத்தான் அக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
புத்தரின் கோட்பாட்டில் முக்கியமானவையென 25 அம்சங்களை அம்பேத்கர் அக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். அடுத்ததாக கார்ல் மார்க்ஸின் கோட்பாட்டில் முக்கியமான 10 அம்சங்களை சுருக்கமாகத் தந்திருக்கிறார். அடுத்ததாக மார்க்ஸியக் கோட்பாட்டில் எஞ்சியிருப்பது என்ற தலைப்பில் நான்கு அம்சங்களை மட்டும் சுட்டிக் காட்டுகிறார்.
“மார்க்ஸியத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களால் அந்த சித்தாந்தத்தின் பல பகுதிகள் தகர்க்கப்பட்டுவிட்டன. சோஷலிஸம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்ஸின் கோட்பாடு பொய்த்துப் போய்விட்டது” எனக் கூறியுள்ள அம்பேத்கர்,
“தத்துவத்தின் பணி உலகை விளக்குவதல்ல, மாற்றுவதுதான்; வர்க்கங்களின் நலன்களுக்கிடையே முரண்பாடு உள்ளது; தனி உடமை காரணமாக ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும் இன்னொரு வர்க்கத்துக்கு துன்பமும் கிடைக்கிறது; தனி உடமையை ஒழிப்பதே சமூகத்துக்கு நல்லது” ஆகிய நான்கு அம்சங்கள் மட்டும்தான் மார்க்ஸியக் கோட்பாட்டில் எஞ்சியிருப்பதாகக் குறிப்பிடுகிறார்.
மார்க்ஸியக் கோட்பாட்டில் எஞ்சியுள்ள நான்கு அம்சங்களும் முழுமையாக புத்தரின் கோட்பாடுகளோடு ஒத்துப் போவதை உதாரணங்களோடு விளக்கியிருக்கும் அம்பேத்கர், தனி உடமையை ஒழிப்பது என்ற லட்சியத்தை எட்டுவதற்கு புத்தரும் மார்க்ஸும் காட்டியிருக்கும் வழிகளை ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
பஞ்ச சீலம், எண்வகைக் கோட்பாடு, நிப்பானம் என புத்தர் கூறிய வழிகளை விரிவாக எடுத்துரைக்கும் அம்பேத்கர் மார்க்ஸியமோ வன்முறை, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற இரு வழிகளையே முன்வைக்கிறது என்கிறார்.
அவை இரண்டிலும் எவருடைய வழிமுறைகள் அதிகம் பயன் தரக்கூடியவை என்று விரிவாக விளக்கும் அம்பேத்கர், பௌத்ததின் மேன்மையை விளக்கப் பல்வேறு உதாரணங்களைத் தருகிறார்.
இறுதியாக, அரசு குறித்த மார்க்ஸியப் பார்வையை அவர் ஆராய்கிறார்.. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பதில் தங்களுக்கே உடன்பாடு இல்லாததால்தான் அரசு உலர்ந்து உதிரும் என்று கம்யூனிஸ்டுகள் கூறுகிறார்கள் என விமர்சிக்கும் அம்பேத்கர் “அரசு உதிருமென்றால் எப்போது உதிரும்? அது உதிர்ந்தபின் அரசு இருந்த இடத்தில் வேறு என்ன இருக்கும்?” என்று கேள்வி எழுப்புகிறார்.
“பலவந்தத்தினால்தான் அரசைத் தாங்கிப் பிடிக்க முடியும். அதை விலக்கிக்கொண்டால் அராஜகம்தான் நிலவும் என்றால் கம்யூனிஸ்ட் அரசை ஏற்படுத்துவதற்கு அர்த்தம்தான் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
“பலவந்தத்தை விலக்கிக்கொண்ட பிறகும் அரசைத் தாங்கிப் பிடிக்கும் ஆற்றல் மதத்துக்குத்தான் இருக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டுகள் அதை ஏற்க மாட்டார்கள். மதம் என்றால் அவர்கள் கிறித்தவ மதத்தை மட்டுமே நினைக்கிறார்கள்.
மதம் மறு உலக வாழ்க்கையைக் காட்டி இந்த உலகில் இருக்கும் துன்பங்களை சகித்துக்கொள்ளச் சொல்கிறது என்ற கம்யூனிஸ்டுகளின் குற்றச்சாட்டு பௌத்தத்துக்குப் பொருந்தாது” எனக் கூறிய அம்பேத்கர்,
‘மதம் ஒரு அபின்’ என்ற மார்க்ஸின் விமர்சனம் பைபிளில் உள்ள மலைப் பிரசங்கத்தைப் பார்த்து சொல்லப்பட்டதாகும் என்று விளக்குகிறார்.
பௌத்தம் நல்ல வழியில் செல்வத்தைச் சேர்ப்பதற்கு அனுமதிக்கிறது என்பதை புத்தரின் போதனையிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்.
பிரெஞ்சுப் புரட்சியில் முன்வைக்கப்பட்ட சகோதரத்துவம், சுதந்திரம் சமத்துவம், என்ற முழக்கத்தின் முக்கியத்துவத்தை அம்பேத்கர் இந்தக் கட்டுரையில் மட்டுமல்ல அவரது எழுத்துகளில் பல இடங்களில் வலியுறுத்தியிருக்கிறார்.
சோஷலிசப் புரட்சியை நிகழ்த்திய ரஷ்யாவில் சமத்துவம் எட்டப்பட்டது.
ஆனால் “சமத்துவத்தை எட்டும்போது சமூகம் சகோதரத்துவத்தையும் சுதந்திரத்தையும் தியாகம் செய்துவிட முடியாது” என்ற அவரது விமர்சனம் ஏற்கத்தக்கது.
பௌத்தம், மார்க்ஸியம் என்ற இரண்டு கோட்பாடுகளை ஒப்பிட்டு ஆராயும்போது பெரும்பாலான இடங்களில் பௌத்தம் என்னும் கோட்பாட்டுடன் சோஷலிச நாடுகளின் நடைமுறைகளை அம்பேத்கர் ஒப்பிட்டிருக்கிறார்.
மார்ஸியத்தில் எஞ்சியிருப்பவை எவை எனப் பார்த்ததுபோல பௌத்தத்தில் எஞ்சியிருப்பவை எவை என்பதை அவர் ஆராய்ந்திருந்தால் புத்தருக்குப் பின் பௌத்தம் எப்படி ஒரு நிறுவனமாக இறுகியது.
பௌத்த பிக்குகள் எப்படி ஆடம்பர வாழ்க்கையில் திளைத்து மக்களிடமிருந்து அன்னியப்பட்டார்கள், பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட நாடுகளில் சிறுபான்மையினரை ஒடுக்க வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வன்முறை பிரயோகிக்கப்படுவது எப்படி என்ற கேள்விகளெல்லாம் அவருக்கு எழுந்திருக்கும்.
அது மட்டுமின்றி சமத்துவத்தின் அடையாளமாக அவரால் கருதப்பட்ட பௌத்தத்திலும் சாதிய ஏற்றத் தாழ்வுகள் புகுந்துவிட்டது புலப்பட்டிருக்கும்.
மார்க்ஸின் மீது அம்பேத்கருக்கு அளவற்ற மதிப்பிருந்தது. அதனால்தான் புத்தருக்கு இணையாக மார்க்ஸை அவர் பார்த்தார்.
கம்யூனிசத்தின் மீதான விமர்சனங்கள் இந்திய கம்யூனிஸ்டுகளுடனான அவரது கசப்பான அனுபவங்களின் அடிப்படையில் உருவானவை.
சுதந்திர தொழிலாளர் கட்சியை உருவாக்கியபோது அவர் கம்யூனிஸ்டுகளோடு இணைந்து பல போராட்டங்களை நடத்தினார்.
ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகளின் பாரபட்சமான அணுகுமுறை வெகு விரைவிலேயே அவர்களிடமிருந்து அவரை அன்னியப்படுத்திவிட்டது.
1950-களில் உலக நாடுகள் பலவற்றை கம்யூனிசம் என்ற ‘பூதம்’ பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது.
இந்தியாவிலும் அது வலுவாக இருந்தது. ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகளோ அம்பேத்கரைக் கடுமையாக விமர்சித்துக்கொண்டிருந்தனர்.
இந்திய அரசியலில் அவருக்கு ஏற்பட்ட முக்கியத்துவத்தையும் அவரது தலைமையில் செயல்பட்ட ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷனின் செயல்பாடுகளையும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
சமயம் வாய்த்தபோதெல்லாம் அவரைப் பிரிவினைவாதியென நிந்தித்தனர். அவர் நடத்திவந்த இயக்கத்தை உடைப்பதற்கும் அதற்குப் போட்டியாக இயக்கம் ஒன்ற உருவாக்குவதற்கும் முயற்சித்தனர்.
இந்தப் பின்னணியில் வைத்தே அம்பேத்கர் எழுதிய இக்கட்டுரையை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
சோஷலிச நாடுகளின் நடைமுறைகள்மீதும், இந்திய கம்யூனிஸ்டுகளின்மீதும் அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் இன்னும் விடையளிக்கப்படாமலேயே இருக்கின்றன என்றபோதிலும் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பகமான கூட்டாளிகளாக இடதுசாரிகளே இருக்கின்றனர்.
இன்று தலித் மக்கள் அடைந்திருக்கும் உரிமைகள் பலவற்றை வென்றெடுத்ததில் அவர்களது பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகான கடந்த 75 ஆண்டுகளில் தலித்துகளின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதில் மார்க்சியம் உதவியதுபோல பௌத்தம் உதவவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
அம்பேத்கரே கூறியிருப்பதைப்போல, “கார்ல் மார்க்ஸ் புதியதொரு அரசியல் பொருளாதாரக் கொள்கையின் சிற்பி, புத்தரோ அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பேதுமில்லாத ஒரு சமயத்தின் நிறுவனர்” தலித் மக்களின் சமூக விடுதலைக்கு பௌத்தம் உதவக்கூடும்.
ஆனால் அவர்களின் அரசியல் விடுதலைக்கு மார்க்ஸியமே வழிகாட்டும். அங்கே மார்க்ஸியத்தின் இடத்தை ஒருபோதும் பௌத்தத்தைக் கொண்டு நிரப்ப முடியாது. தலித்துகளின் அரசியல் விடுதலைக்குத் தேவை கார்ல் மார்க்ஸ்!