சிறு வயதில் டூரிங் டாக்கீஸில் குடும்பத்துடன் படம் பார்க்கும்போது பெஞ்ச்சில் அமர்ந்திருக்கிறேன். தனியாகப் பார்க்கத் தொடங்கியபோது தரையில் உட்கார்ந்து பிரமித்திருக்கிறேன்.
தொண்ணூறுகளின் பின்பாதியில் பல ஊர்களில் டூரிங் டாக்கீஸ்கள் மூடப்பட்டன. அதன்பிறகு, நகர்ப்புற திரையரங்குகளில் படம் பார்த்தபோது ஆபரேட்டர் அறைக்கு அடுத்திருக்கும் வரிசையில் அமர்வதுதான் கவுரவமோ என்று யோசித்திருக்கிறேன்.
கடைசி நேரத்தில் அல்லது விஜபிகளுக்கு, முக்கியஸ்தர்களுக்கு அவ்விருக்கைகளைத் தருவதுண்டு.
விஷயத்திற்கு வருகிறேன். கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதி வருகிறேன்.
தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் தவிர, மற்ற நேரங்களில் முன்னிருக்கையில் அமர்ந்து படம் பார்ப்பதுதான் என் வழக்கம். அதுவே, படத்தை விமர்சிப்பதற்கான தகுதியைத் தருவதாக எண்ணுகிறேன்.
அம்பானி போல மாறினாலும் அவ்வாறிருந்தால் மட்டுமே ஒரு திரைப்படத்தை விமர்சிக்க முடியும் என்பது என் கருத்து.
ஏனென்றால், முன்னிருக்கை ரசிகரைப் போல ஒரு சிறந்த திரைப்பட விமர்சகர் எவருமில்லை. அவர்களைப் பூர்த்தி செய்யாத எந்த படமும் வெற்றி பெற்றதில்லை.
திரையரங்கு இருக்கைகளில் 10% வரை மலிவுக் கட்டணத்தில் தரப்பட வேண்டுமென்பது தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் கொள்கை. அப்படி பத்து ரூபாயாக இருந்த டிக்கெட்டுகள் கடந்த அதிமுக ஆட்சியில் 60 ரூபாயாக விலையேற்றம் செய்யப்பட்டன.
அந்த டிக்கெட்டுகளை வழங்குவதில் திரையரங்கு நிர்வாகங்கள் சுணக்கம் காட்டுவது பல காலமாகத் தொடர்ந்து வருகிறது.
கொரோனா காலத்திற்குப் பிறகு, யாராவது திரையரங்குக்கு வரமாட்டார்களா என்ற நிலையில் இதே 60 ரூபாய் டிக்கெட்டை சொல்லியே பார்வையாளர்களை வரவழைத்ததும் நிகழ்ந்தது.
ஆனால் விக்ரம், பொன்னியின் செல்வன், லவ் டுடே வெற்றிகளைப் பார்த்தபிறகு தியேட்டர் நடத்துபவர்கள் முன்னிருக்கை ரசிகர்களை மதிப்பதே இல்லை.
காசு இருந்தாலும் இல்லாவிட்டாலும் திரை முன்னே அமர்ந்து பார்ப்பது ரசனையின் உச்சம் என்பதைப் புரிந்துகொள்வதே இல்லை.
அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட டிக்கெட்டுகள் விற்றால் மட்டுமே முன்னிருக்கையிலுள்ள டிக்கெட்டுகள் விற்கும் வகையில் ‘சாப்ட்வேர்’ செட் செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் சில மாதங்களாகச் சொல்லப்படுகிறது.
இதனால், அந்த இருக்கையே வேண்டும் என்று அடம்பிடிப்பவர்களுக்கு மட்டுமே அந்த டிக்கெட் வழங்கப்படுகிறது.
சென்னையில் ஏஜிஎஸ், பிவிஆர், ஐநாக்ஸ், லூக்ஸ் என்று எல்லா தியேட்டர்களிலும் இதே நிலைதான். சில தியேட்டர்களில் இந்த டிக்கெட்டுகள் தரப்படுவதே இல்லை.
சென்னையாவது பரவாயில்லை எனும் அளவுக்கு, மற்ற ஊர்களில் டிக்கெட் விலையை ஏதோவொன்றாக நிர்ணயித்துவிட்டு 150, 200 ரூபாய் என்று வசூலிப்பதுதான் நிகழ்ந்து வருகிறது.
வாரிசு, துணிவு முதல் காட்சி எனும்போது 1,000 ரூபாய் வரை வசூலித்ததும் இதே கைகள் தான்.
அந்த ருசியே, முன்னிருக்கை ரசிகர்களை மதிக்கக்கூடாது என்ற எண்ணத்தை தியேட்டர் பணியாளர்களிடத்தில், நிர்வாகிகளிடத்தில் விதைத்திருக்கிறது.
நிச்சயம் இது தியேட்டர் கட்டணத்தைக் குறைத்தாக வேண்டுமென்ற குரல் ஓங்கத்தான் வழி வகுக்கும்.
கேரளா போல மலிவு கட்டண டிக்கெட் கிடைக்கும் வகையில் அரசின் திரையரங்குகள் வர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துவரும் நேரத்தில், டிக்கெட் விலையைச் சரிவர வடிவமைக்காமல் இருக்கும்போது பார்வையாளர்களின் எண்ணிக்கை எப்படிக் குறையாமல் இருக்கும்.
எது எப்படியானாலும் விஜய், அஜித் படம் பார்க்க தியேட்டருக்கு தானே வந்தாக வேண்டும் என்பது தான் தியேட்டர் நிர்வாகங்களின் எண்ணமாக இருந்தால், அந்த படங்களின் லாபம் மட்டுமே போதுமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.
அது போதும் என்றால் இந்த நிலையைத் தாராளமாகத் தொடரலாம். ஏனென்றால், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!
– உதய் பாடகலிங்கம்