மார்ச் 14 – சர்வதேச ஆறுகள் காப்பு தினம்
பசுமை பூத்து நிற்கும் வெளி. அதன் நடுவே கோடு கிழித்தாற் போன்று பாயும் ஆறு. ஏகாந்தமான மனநிலையில் கரையில் அமர்ந்து கண்ணை மூடினால் சலசலக்கும் நீரின் சத்தத்தை மீறிய ஏதோவொன்று மனதுக்குள் கேட்கும். நீருக்குள் மூழ்கி மூச்சடக்கி நின்றால், அதுவே வேறுவிதமாக இருக்கும். பல்லுயிர்களின் மூச்சாகத் தோன்றும்.
இன்றைய தேதியில் ஆற்றங்கரையில் அமர்ந்து வெள்ளம் பார்ப்பதெல்லாம் பெருங்கனவு. பெரும்புயல் வீசும் வரை காத்திருக்க வேண்டும். மற்ற நேரமெல்லாம் இடுப்பளவு நீர் ஓடினாலே ஆச்சர்யம்.
அந்த நன்னீரில் கழிவுகளைக் கொட்டி துர்நீர் ஆக்கிப் பலகாலம் ஆகிவிட்டது. செயற்கைக்கோளின் பார்வையில் நதிகள் பாய்ந்த இடங்களெல்லாம் மணற்பரப்புகளாகி வருகின்றன. அவற்றைச் சுரண்டி கட்டடங்கள் ஆக்குவது குயுக்திகளால் கொழுத்தவர்களின் வேலையாகிவிட்டது.
இந்த லட்சணத்தில் அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னிருந்தவர்களின் ஆற்றுக்கால் அனுபவங்களால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது என்ற கேள்வி எழலாம். இருக்கும் வளங்கள் கைவிட்டுப் போகாமலிருக்கச் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலம் உண்டாக்கியிருக்கும் கட்டாயம்.
அள்ளிப் பருக முடியுமா?
தமிழ்நாட்டில் காவிரி, தென்பண்ணை, பாலாறு ஆகியன மூன்று பெரிய ஆறுகளாகச் சொல்லப்படுகின்றன. அரை நூற்றாண்டுக்கு முன்னர் இருந்த அளவுக்கு, இன்றைக்கு இந்த ஆறுகளின் நிலை இல்லை என்பதே உண்மை. இவை தவிர வைகை, தாமிரபரணி, பவானி, நொய்யல், சிறுவாணி உட்படப் பல ஆறுகள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் பாய்கின்றன.
ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் இருந்த ஆறுகள் ஆண்டு முழுக்க வற்றாதவை, குறிப்பிட்ட காலத்தில் மட்டும் நீர் பாய்பவை என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இன்று, அந்த வகைப்பாடே தேவையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
என்னதான் நீள அகலத்தை வைத்தும், ஆற்றின் வழி பாயும் நீரின் அளவை வைத்தும் பெரியது, சிறியது என்று வகைப்படுத்தினாலும், அவற்றைப் பயன்படுத்தும் மக்களுக்கு அந்தத் தகவல்கள் தேவையே இல்லை. அவர்களது தேவைகள் பூர்த்தியாகும் பட்சத்தில், ஆற்றின் வழி செல்வதுதான் அவர்களுக்கான கடவுள் பாதை.
வடிகட்டுதல் செயல்முறைகளுக்கு உட்படுத்தி ஆற்று நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் திட்டங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன. நீர்வரத்து இல்லாத நிலையில் ஆற்றுப்பாதையில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டியும் பயன்படுத்தும் நிலையும் உள்ளது.
ஆனால், ஒருகாலத்தில் ஆற்று நீரை அப்படியே குடிக்கப் பயன்படுத்தியதுண்டு. சுத்திகரிப்பு தேவையென்றால், நீரைச் சுட வைத்தாலே போதும் என்ற மனப்பாங்கு இருந்தது.
இன்றைய சூழலில், ஆற்று நீரை அள்ளிக் குடித்தால் அந்த நபர் மற்றவர்களுக்கு முட்டாளாகவே தெரிவார். எது சுத்தம், நாகரிகம் என்ற தெளிவு மக்களிடம் அறவே இல்லை என்பது ஒருபுறமிருக்க, ஆலைக் கழிவுகளும் சாக்கடைகளும் ஆற்றில் கலப்பதைப் பெரும்பாலான இடங்களில் பார்க்க முடிகிறது. ஆறுகளிலும், அவற்றில் இருந்து கிளை விரிக்கும் கால்வாய்களிலும் சாக்கடை கலக்காவிட்டால்தான் அதிசயம் என்றாகிவிட்டது.
நாசகரமான வேதிப்பொருட்கள்!
சென்னை போன்ற பெருநகரங்களில் பாதாளச் சாக்கடைகள் வழியோடு கழிவுநீர் கடலில் கலக்கிறது என்றால், மாநிலத்தின் உட்பகுதிகளில் ஆறுகள் அப்படிப்பட்ட இலக்குகளாக உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் சிமெண்ட் திட்டுகளுக்கு நடுவே பாயும் சாக்கடை நீர் இறுதியாக ஆற்றின் போக்கில் அமைதியாகக் கரைகிறது.
சென்னையில் அடையாறும் கூவமும் ஒருகாலத்தில் படகுப் போக்குவரத்தைக் கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. பேருந்து நிறுத்தம் போல, ஆங்காங்கே ஆற்றுப்பாதையில் இருக்கும் மண்டபங்கள்தான் அதற்கான சாட்சியங்களாக எஞ்சியிருக்கின்றன. பெருநகரமயமாக்கத்தால் அந்த ஆறுகள் பெருஞ்சாக்கடையாக மாறியது போன்று, தமிழ்நாட்டின் ஒவ்வொரு நகரமும் கிராமமும் அப்படியொரு அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்றன.
இன்று கால்வாயோ அல்லது ஆறோ பாய்ந்தாலும் கூட, பலரும் வீட்டிலுள்ள ஆழ்துளைக் கிணற்று நீரையே குளிக்கவும் இதர தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர். ’குடிக்க மினரல் வாட்டர் இருக்கவே இருக்கு’ என்று தெனாவெட்டாக இருக்கின்றனர். எங்கும் சாக்கடை நீராக நிறையும்போது, அதுவே நிலத்தடி நீராகவும் மாறும் என்ற யோசனை மட்டும் அவர்களை அண்டுவதில்லை.
ஆறுகளில் குளிக்கும்போது நாம் பயன்படுத்தும் சோப், ஷாம்பு போன்றவையும் கூட ஓடும் நீரை நஞ்சாக மாற்றக்கூடியவை. அவை போதாதென்று பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் உட்பட பல்வேறுபட்ட குப்பைகளும் அதில் கலக்கின்றன. விவசாயத்திற்குப் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் முதல் ஆலைக்கழிவுகளும் கூட சேர்கின்றன. இவையனைத்துமே நாசத்தை உருவாக்கும் காரணிகள் என்பதை மறந்துவிடுகிறோம்.
சமீபத்தில் என் வீட்டுக் கழிவறையில் ஒரு கரப்பான்பூச்சி விழுந்து கிடந்தது. நீரின் போக்கை எதிர்த்து மேலேறத் துடித்துக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில், ஒரு பாத்திரத்தை சோப் உபயோகித்துக் கழுவி அந்த நீரைக் கொட்டியதுதான் தாமதம், இரண்டே நொடிகளில் தன் மூச்சை நிறுத்திக்கொண்டது. எண்ணெய் பிசுக்கு இல்லாமல்போக வேண்டுமென்று, தினமும் அதே சோப்பைத் தான் மிதமிஞ்சிய அளவில் பாத்திரங்கள் மீது தேய்த்துக் கரைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படி நம்மையும் அறியாமல் நாம் கரைக்கும் வேதிப்பொருட்கள் ஆற்று நீரோடு கலந்து பாய்ந்து, கரையோரங்களில் படிந்து, மெல்லக் காற்றினில் கலக்கின்றன.
பழையன தேவை!
குடித்தல், குளித்தல், துவைத்தல் உள்ளிட்ட தினசரித் தேவைகள் தாண்டி உடல் ஆரோக்கியத்தை நிலைநாட்ட ஒரு மனிதனுக்கு நீச்சல் பயிற்சி அவசியம். அதற்கு ஆறு, குளம் போன்ற நீர்நிலைகள் நிச்சயம் தேவை.
ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்துவதைக் குறைத்துக்கொண்டு மழைநீரையும், ஆற்று நீரையும் பாசனத்திற்குப் பயன்படுத்தும் பழைய நிலை மீண்டும் வர வேண்டும். போக்குவரத்துக்கும் ஆறுகளைப் பயன்படுத்தலாம். அதனை முறைப்படுத்தும்போது, சுற்றுலா நோக்கிலும் அவை நலம் பயக்கும்.
நீரைத் தேக்கி வைக்கும் அவசியத்திற்காகவே நம்மூரில் குளங்களும் குட்டைகளும் ஏரிகளும் உள்ளன. கொஞ்சம் அதிகளவிலான தேக்கம் வேண்டும் எனும்போது அணைகள் கட்டலாம். அவற்றை உயரமானதாகக் கட்டுவதை விட, அதிகப்பரப்பில் அகலமிக்கதாகக் கட்டினால் பூமியின் கீழடுக்கில் பாதிப்பு இருக்காது என்பதையும் நம் முன்னோர் சொல்லிச் சென்றுள்ளனர். இன்று அப்படிப்பட்ட பரந்த நிலப்பரப்புகள் விவசாயத்திற்காகவும் இதர தேவைகளுக்காகவும் ஆக்கிரமிக்கப்பட்ட காரணத்தால் ஆறு பாயும், நீர் தேங்கும் பரப்பு சுருங்கியுள்ளது.
மனித நாகரிகம் உச்சம் தொட்டதற்கு ஆற்றங்கரை வழியே நிகழ்ந்த வாழ்க்கை மாற்றங்களும் ஒரு காரணம். உயரமான மலைப்பரப்பில் இருந்து அருவியாகப் பொழியும் நீர் கிடைமட்டமாகப் பாய்ந்து கடல்மட்டத்தோடு கலப்பது வரை பல்வேறுவகைப்பட்ட மக்களைக் கடக்கிறது. அவர்களது வாழ்வியல் மாற்றங்களுக்கும் காரணமாகிறது.
நீர் பரப்பு கொண்ட பல ஆறுகளின் குறுக்கே திட்டமிட்டு அணைகள் கட்டப்பட்டு, அவற்றின் செழிப்பை வற்றவைப்பது திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. உலக வெப்பமயமாதல் முதல் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வு வரை பல்வேறு காரணங்களுக்காக ஆற்றுப்படுகைகள் வறண்டு கிடக்கின்றன. மணற்கொள்ளையாலும் பெரும் நாசத்தை எதிர்கொண்டு வருகின்றன.
வறண்ட ஆறுகளைக் கண்டு விரக்தியடைவதை விட, இதுதான் கால மாற்றம் என்று கடந்து செல்வதை விட, மீண்டும் வசந்தம் பாய்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதுதான் சிறப்பானதாக இருக்கும்.
நாமாக முன்வந்து ஆற்று நீரைச் சார்ந்திருக்கும் வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினால், அவை மாசுறுவதற்கு எதிராக நம்மால் முடிந்த அளவுக்கு குரலெழுப்ப முயன்றால், கால மாற்றம் என்பது இருக்கும் வளங்களை நாசப்படுத்துவதல்ல என்பதைப் புரிந்துகொண்டால், நம்மில் தொடங்கும் மாற்றம் ஒரு சமூகத்தினுடையதாக மாறும்.
அதைவிடுத்து பூமிக்கடியில் நீர் தேடுவது என்பது சரியான வழியல்ல; ஏனென்றால், நம் முன்னோர்கள் கிழங்கெடுத்து தின்னும் உத்தியையே பஞ்ச காலத்திற்கானதாகத்தான் பார்த்து வந்தார்கள்!
– உதய் பாடகலிங்கம்