முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு
கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்று போற்றக்கூடிய தமிழின் மூத்த படைப்பாளி கி.ராவின் நூற்றாண்டு நிறைவு விழாவும், ‘கி.ரா. நூறு’ என்னும் இரண்டு தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழாவும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
கதைசொல்லி மற்றும் பொதிகை – பொருநை – கரிசல் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வழக்கறிஞரும், கதைசொல்லி இதழின் ஆசிரியருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் ஒருங்கிணைத்தார்.
இலக்கிய ஆர்வலரும், தொழிலதிபருமான நல்லி குப்புசாமி செட்டி தலைமையில், தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் எம்.சக்கரவர்த்தி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு பங்கேற்று நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தொகுப்பில் உருவாகியுள்ள ‘கி.ரா. நூறு’ என்ற இந்த தொகுப்பு நூல்களின் முதல் படியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆர்.எம்.கே கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. ஆர்.எம்.முனிரத்தினம் பெற்றுக்கொண்டார்.
இந்த மகத்தான விழாவில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், மரபின் மைந்தன் முத்தையா, மூத்த பத்திரிகையாளர் மணா உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
விழாவில் பேசிய பங்கேற்பாளர்கள் அனைவரும், நூற்றாண்டு காணும் கரிசல் இலக்கியத்தின் முதுபெரும் படைப்பாளியான கி.ராஜநாராயணனைப் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் சிலாகித்துப் பேசினர்.
நிகழ்வின் துவக்கத்தில் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணா, நகர்ப்புறத்தில் நடப்பட்ட கிராமப்புறத்து நாற்றுதான் கி.ரா. என்றும், கி.ரா தான் ஒரு படைப்பாளி என்று அறியப்படுவதைவிட நல்ல மனிதர் என்று அறிவைதையே அவர் விரும்பினார் என்ற தகவல்களையும் கூறினார்.
அதோடு கி.ராவின் முக்கிய படைப்புகளான கோபல்ல புரம், கோபல்லபுரத்து மக்கள் போன்ற நாவல்களை திரைப்படமாக எடுத்து ஆவணப்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்றார்.
கடும் உழைப்பாலும் பெரும் முயற்சியாலும் கொண்டுவரப்பட்ட இந்த தொகுப்பு நூல் குறித்துப் பேசிய தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், புகழ்பெற்ற ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள், படைப்பாளிகள், இலக்கிய விமர்சகர்கள், திரைத்துறையைச் சார்ந்த ஆளுமைகள், ஆர்வலர்கள் கி.ராவின் படைப்புகள் குறித்தும் அவற்றின் பன்முகத்தன்மை குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகளாக இவை மிளிர்கின்றன என்றார்.
கி.ராவுக்காக கதைசொல்லி காலாண்டு இதழை இன்றுவரை தொடர்ந்து நடத்திவரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனைப் பாராட்டிய வைத்தியநாதன், கி.ராவுக்கும் கே.எஸ்.ஆருக்குமான நெருக்கமான உறவை விரிவாக எடுத்துக் கூறினார்.
கி.ராவின் படைப்பிலக்கிய ஆளுமையைப் பற்றியும் அவரது எளிமையைப் பற்றியும் சிலாகித்துக் கூறிய வைத்தியநாதன், கிரா தன்னிடம் பகிர்ந்து கொண்ட அனுபவங்களை ஆவணப்படுத்தாமல் போய்விட்டோமே என்று ஆதங்கப்பட்டார்.
கடந்த நூற்றாண்டையும் இந்த நூற்றாண்டையும் எழுத்தால் இணைக்கும் பாலமாக இருந்தவர் கிரா என்றும், அதேபோல் கடந்த நூற்றாண்டுக்கும் இந்த நூற்றாண்டுக்கும் பாலமாக இருக்கும் அரசியல்வாதி வெங்கய்யா நாயுடு என்றும், கி.ரா எனும் ஆளுமையைப் பற்றிய தொகுப்பு நூல்களை வெங்கய்யா நாயுடு வெளியிடுவது மிகப்பொருத்தமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
தமிழ் இலக்கியத்தில் எப்படி கிராவை நீக்கிவிட்டுப் பார்க்க முடியாதோ அப்படித்தான் இந்திய அரசியல் வரலாற்றில் வெங்கய்யா நாயுடுவின் பங்களிப்பையும் தவிர்த்து விட்டுப் பார்க்க முடியாது என்றார் கே.வைத்தியாநாதன்.
அவரைத் தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் வெங்கய்யா நாயுடு, கி.ரா ஆந்திராவில் பிறந்தாலும் அவரது படைப்புகள் தமிழைப் பெருமைப்படுத்தி வருகிறது என்றும், கிராவின் படைப்புகள் காலத்தால் அழியாதது என்றும் பேசினார்.
கதைகள், நாவல்கள், கட்டுரைகள், சொலவடைகள், சடங்குகள், மரபுகள், நாட்டார் கதைகள், மறைவாகக் கூறப்படும் கதைகள், கதைப்பாடல்கள், இசை பற்றிய விரிவான புரிதல் என பன்முகத் தன்மை கொண்ட கி.ராவின் ஆளுமையைப் பற்றிப் பேசிய எம்.வெங்கய்ய நாயுடு, கி.ரா.வை மக்களிடம் எந்த வகையில் சிறப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டுமோ, அந்த வகையில் இந்த தொகுப்பு நூல்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
அதோடு, இன்றைய நவீன யுகத்தில் தமிழரின் தொன்மையான மரபுகள் அறுந்து கொண்டிருப்பதை வருத்தத்தோடு கூறிய சிறப்பு விருந்தினர் வெங்கய்யா நாயுடு, அந்த மரபார்ந்த விஷயங்களை மீட்டெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அடுத்தாகப் பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் கதைசொல்லி ஆசிரியருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், இந்த தொகுப்பு நூலைக் கொண்டு வருவதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகளையும், அதற்கான மெனக்கெடல்களையும் பேசினார்.
இலக்கியவாதிகள், படைப்பாளிகள், கி.ராவோடு பழகிய மனிதர்கள் என பல்வேறு துறை சார்ந்த ஆளுமைகளிடம் இருந்து பெறப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், துறை சார்ந்த குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு 160 கட்டுரைகள் இறுதியாக்கப்பட்டு கி.ரா.நூறு என்ற இரண்டு தொகுப்புகளாக வெளிவந்துள்ளதையும், இது கிராவுக்கு அளிக்கும் மரியாதை என்றும் நெகிழ்ச்சியோடு பேசினார் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
தமிழரின் பெருமையை பறைசாற்றும் விதமாக நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு திருவள்ளுவர் சிலை நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
நிறைவாக டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் தலைவரும் வழக்கறிஞருமான முனைவர் குமார் ராஜேந்திரன் நன்றியுரை வழங்கினார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த சிறப்பான நிகழ்ச்சி நாட்டுப் பண்ணுடன் நிறைவந்தது.
– நா. மோகன்ராஜ்