பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நம் பிரபஞ்சத்தின் பால்வெளித் திரள்களில் இருந்து வெளியான ஒளிகளைச் சேகரித்து எடுக்கப்பட்ட படத்தை கடந்த ஆண்டு நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வெளியிட்டது.
ஹபுள் ஸ்பேஸ் தொலைநோக்கிக்கு அடுத்தகட்டமாக நிறுவப்பட்ட இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 2021-ம் வருடம் 10 பில்லியன் டாலர் செலவில் நிறுவப்பட்டது.
இந்தத் தொலை நோக்கி, 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பிரபஞ்சம் தோன்றிய தருணத்தில் உருவான நட்சத்திரங்களைக் கண்டறிவதற்கும் தொலைதூரத்தில் மனிதர்கள் வாழத்தக்க கிரகங்கள் இருக்கின்றனவா என்று ஆராய்வதற்கும் உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்துள்ள படங்கள் தற்போது மீண்டும் வெளியாகியுள்ளன. பிரமிக்க வைக்கும் சுழல் விண்மீன் திரள்கள் மற்றும் விண்மீன் இணைப்புகள் போன்ற பல்வேறு விண்மீன் திரள்களின் புதிய தோற்றங்கள் அந்தப் படங்களில் இடம்பெற்றுள்ளன.