உலக மகளிர் தினத்தையொட்டி சாதனை படைத்த மகளிரை சிறப்பிக்கும் விதமாக தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை சி.ஆர். விஜயகுமாரி அவர்களுக்கு டாக்டர். எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மெட்ராஸ் பல்கலைக்கழக மகளிர் சங்கமும், டாக்டர். எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியும் இணைந்து இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விழாவில் டாக்டர். எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் கல்லூரியின் தாளாளர் திருமதி. லதா ராஜேந்திரன், கல்லூரின் முதல்வர் டாக்டர் மணிமேகலை, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனின் மனைவி திருமதி லதா மற்றும் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் பெண்களின் முன்னேற்றம், பாதுகாப்பு குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர்.
விழாவில் பேசிய தாளாளர் லதா ராஜேந்திரன், மூத்த நடிகை விஜயகுமாரி அம்மாவை சிறப்பித்து விரிவாகப் பேசினார்.
“கோவை மாவட்டத்தில் பிறந்த மூத்த நடிகையான விஜயகுமாரி அவர்கள் உணர்ச்சிகரமான நடிப்பிற்கும் தேர்ந்த தமிழ் உச்சரிப்புக்கும் பெயர் போனவர்.
தமிழ்த் திரை உலகில் இவருடைய பங்களிப்பை திரைப்பட ரசிகர்கள் அவ்வளவு சுலமாக மறந்துவிட முடியாது.
அந்தளவுக்கு தமிழ்த் திரைப்படங்களில் வாழ்ந்திருக்கிறார் விஜயகுமாரி அவர்கள்.
1950-களில் தமிழ் சினிமாவுக்குள் கதாநாயகியாக நுழைந்த விஜயகுமாரி, பல இயக்குநர்களின் முதல் படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
இயக்குநர் ஸ்ரீதரின் ‘கல்யாண பரிசு’ படத்திலும், இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் முதல் படமான ‘சரதா’விலும், வசன கர்த்தா ஆரூர்தாஸ் இயக்கிய முதல் படமான ‘பெண் என்றால் பெண்’ என்ற படம் உள்ளிட்ட அந்தக்கால இளம் இயக்குநர்களின் முதல் படங்களில் நடித்திருக்கிறார் விஜயகுமாரி.
ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான ‘போலீஸ்காரன் மகள்’ படத்தில் விஜயகுமாரி அவர்கள் நடித்த முக்கிய கதாபாத்திரம் அப்போது மிகவும் பேசப்பட்டது.
சாந்தி, பச்சை விளக்கு, ராஜராஜ சோழன் உள்ளிட்ட படங்களில் நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து நடித்திருக்கும் விஜயகுமாரி அவர்கள், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் காஞ்சித் தலைவன், விவசாயி, கணவன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விஜயகுமாரியைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘உடன்பிறவா சகோதரி’ என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
1950-களில் நடிக்க ஆரம்பித்து மெட்டி, பூவே உனக்காக உள்ளிட்ட இளம் தலைமுறை இயக்குநர்களின் படங்களிலும் நடித்திருக்கிற விஜயகுமாரி அவர்கள், தென்னிந்திய நடிகர் சங்க கட்டட வளர்ச்சி நிதியாக 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
மூத்த திரைப்பட வசன கர்த்தாவான இளங்கோவனின் வசனத்தைப் பேசி கண்ணகியாக நடித்த கண்ணாம்பாளை விட, ‘பூம்புகார்’ படத்தில் விஜயகுமாரி அவர்கள் கண்ணகியாக உணர்ச்சிப்பிரவாகமாக நடித்து கலைஞரின் வசனத்தை அழுத்தமாக உச்சரித்து நடித்ததை திரைப்பட ரசனை உள்ளவர்கள் மறந்துவிட முடியாது.
சரதா படம் துவங்கி அதிகப் படங்களில் தன்னுடன் நடித்த லட்சிய நடிகரான எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்களை வாழ்த்துணை ஆக்கிக்கொண்ட விஜயகுமாரி அவர்கள், மக்கள் திலகம் அவர்களின் மனைவியான ஜானகி அம்மா அவர்களின் நெருங்கிய தோழியும் ஆவார். அவரை மிகுந்த பாசத்தோடி அக்கா என்றே அழைத்து வந்திருக்கிறார்.
ஜானகி அம்மாவின் இறுதிக்காலம் வரை அவருடன் பயணித்த அனுபவங்களை, அண்மையில் வெளியிடப்பட்ட ‘அன்னை ஜானகி – எம்.ஜி.ஆர் 100’ என்ற சிறப்பு மலரில் பகிர்ந்திருக்கிறார்.
திருமதி ஜானகி அம்மா அவர்களுடனும், புரட்சித் தலைவர் அவர்களுடனும் ராமாபுரம் தோட்டத்தில் கழித்த பல்வேறு தருணங்களைப் பற்றியும் நெகிழ்வோடு அந்த சிறப்பு மலரில் பதிவு செய்திருக்கிறார்.
அப்படிப்பட்ட அன்னை ஜானகி எம்.ஜி.ஆரின் நன்மதிப்பைப் பெற்ற நெருங்கிய தோழியும், தமிழ்த்திரை உலகம் மறக்க இயலாத திறமைமிக்க நடிகையும் மூத்த திரைக் கலைஞருமான திருமதி விஜயகுமாரி அவர்களுக்கு ஜானகி அம்மாள் பெயரில் அமைந்த சிறப்பு விருதை மகிழ்வோடு வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
அத்தகைய பெருமையோடு இத்தகைய சிறப்புமிக்க விருதை அவருக்கு வழங்கி கவுரவிக்கிறோம்.” எனக் கூறினார்.