– கவனமாக இருக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள்
ஆன்லைன் மூலமாக புதுவிதமான மோசடிகள் விதவிதமான வடிவங்களில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.
இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகள் வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கைவரிசை காட்டுவதால் அவர்களை கண்டுபிடித்து நெருங்குவது என்பது காவல்துறைக்கு மிகப் பெரிய சவாலாகவே மாறி இருக்கிறது.
இதனால் காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆன்லைன் மோசடி பேர்வழிகள் புதுப்புது வழிகளில் ஊடுருவி மக்களை ஏமாற்றிக் கொண்டே வருகிறார்கள்.
இதன்படி கடந்த சில நாட்களாக புதிய வகையிலான `கூகுள் பே’ மோசடியை அரங்கேற்ற சைபர் கிரைம் குற்றவாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
இந்த குற்றவாளிகள் கூகுள் பே மூலமாக பணம் தவறுதலாக அனுப்பியதாகவும் பணத்தை திருப்பி அனுப்பும்படியும் கூறி புதிய மோசடியில் ஈடுபட்டு மக்களின் சேமிப்பு பணத்தை களவாட களமிறங்கி உள்ளனர்.
இந்த நூதன குற்றவாளிகள், உங்கள் வங்கி கணக்கில் சில ஆயிரங்களை ஜி பே மூலம் அனுப்பிவிட்டு உங்கள் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பேசுவார்கள். ”எனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு பணம் அனுப்பி உள்ளேன். அது தெரியாமல் உங்களுக்கு வந்துவிட்டது.
அந்த பணத்தை எனக்கு திருப்பி அனுப்பிவிடுங்கள் பிளீஸ்…” என்றும் நான் ஒரு `லிங்’க்கை அனுப்புகிறேன் அதில் போய் எனது பணத்தை அனுப்புங்கள் என்று கூறி அந்த நபர் ஒரு குறிப்பிட்ட லிங்கையும் அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த லிங்க்கை நீங்கள் கிளிக் செய்ததும் ஓ.டி.பி. எண் வரும் அந்த எண்ணை எதிர் முனையில் பேசும் நபர் கேட்கிறார்.
நீங்கள் ரகசிய குறியீட்டு எண்ணான ஓ.டி.பி.யை சொன்னதும் அடுத்த நொடியே உங்கள் வங்கி கணக்கில் உள்ள மொத்த சேமிப்பு தொகையும் காணாமல் போகிறது.
இது போன்ற நூதன மோசடி கடந்த ஒருவாரமாகவே அதிகமாக அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எனவே பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு, “ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக காவல்துறை சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
நானும் அடிக்கடி வீடியோக்கள் மூலமாக பேசி வருகிறேன். உங்கள் வங்கி கணக்கையோ, ரகசிய குறியீட்டு எண்ணையோ வங்கிகளில் இருந்து யாரும் கேட்கமாட்டார்கள்.
இதனை பலமுறை பொது மக்களிடம் எடுத்துக் கூறி உள்ளோம். ஆனால் வங்கி விவரங்களை கொடுத்து பொதுமக்கள் பணத்தை இழந்துகொண்டே இருக்கிறார்கள்.
தற்போது கூகுள் பே மூலம் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று ஏமாற்றி பொதுமக்களின் வங்கி கணக்கை குறிவைத்து ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை காட்டி செயல்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக ஏமாற்று பேர்வழிகள் செல்போன் வழியாக அனுப்பும் லிங்க்கை பொதுமக்கள் தொட வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் உஷாராக இல்லை என்றால் வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் இழக்க நேரிடும்.
தமிழக காவல் துறையில் உள்ள `காவல் உதவி செயலி மற்றும் 1930 எனும் அவசர உதவி எண் ஆகியவற்றின் மூலமாக பணத்தை இழந்தவர்கள் உடனடியாக புகார் செய்தால் இழந்த பணம் திரும்ப கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது.
பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்த நபரின் வங்கி கணக்குக்கு பணம் சென்ற 24 மணிநேரத்தில் விரைந்து செயல்பட்டால் மட்டுமே பணம் திரும்ப கிடைக்கும்.
எனவே அறிமுகம் இல்லாத நபர்கள் செல்போனில் பேசி வங்கி தொடர்பான தகவலை கேட்டால் இணைப்பை துண்டித்து விடுங்கள். `கூகுள் பே’யில் தெரியாமல் பணம் அனுப்பிவிட்டேன் என்று யாராவது போனில் தெரிவித்தால் அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி விவரத்தை தெரிவியுங்கள்.
சம்பந்தப்பட்ட நபர் உண்மையிலேயே தெரியாமல் பணத்தை அனுப்பி இருந்தால் நிச்சயம் நேரில் வருவார். அப்போது பணத்தை திருப்பி கொடுத்துவிடலாம். இதுபோன்று உஷாராக செயல்பட்டு பொதுமக்கள் ஏமாறாமல் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.