உலக அரசியல் பேசுவதற்கான விஷயங்களை வைத்துக் கொண்டு எளிதாக ஒரு ஆக்ஷன் கதையை யோசித்துவிடலாம். ஆனால், அதனைப் படமாக ஆக்குவது ரொம்பவே கஷ்டம்.
முடிந்தவரை அதை முயற்சித்துப் பார்க்கலாமே என்றெண்ணி, தனது குரு எஸ்.பி.ஜனநாதன் பாணியில் கொஞ்சம் பிரச்சார நெடியோடு ‘பூலோகம்’ தந்தார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.
இப்போது, இரண்டாம் முறையாக ஜெயம் ரவி உடன் கூட்டணி அமைத்து ‘அகிலன்’ தந்திருக்கிறார்.
இந்தப் படம் வெறுமனே கருத்து சொல்கிறதா அல்லது ஒரு கமர்ஷியல் படமாகவும் கனகச்சிதமாக அமைந்திருக்கிறதா?
ஒரு உத்தம வில்லன்!
சென்னை துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டர் ஆக வேலை பார்க்கும் அகிலன் (ஜெயம் ரவி), அப்பகுதி காவல்நிலையத்தில் பணியாற்றும் எஸ்ஐ மாதவி (பிரியா பவானிசங்கர்) இருவரும் காதலர்கள்.
ரகசியமாக இருக்கும் இவர்களது காதலை போலவே, இருவரும் இணைந்து ஒரு கப்பலையும் வாங்க முயற்சிக்கின்றனர்.
ஆனால், அவர் விசுவாசமான அடியாளாக இருப்பதில்லை. எங்கே அகிலன் தன் கைமீறிப்போய்விடுவானோ என்று பயப்படும் பரந்தாமன், அவரைக் கொல்லத் திட்டமிடுகிறார்.
அதற்குள்ளாகவே, சட்டவிரோத கப்பல் பரிமாற்றங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கபூர் அகிலனைத் தேடி வருகிறார்.
கபூர் சொல்லும் வேலையைப் பிசிறு இல்லாமல் செய்து முடித்தாலும், அகிலன் மீதிருக்கும் சந்தேகமும் வெறுப்பும் அக்கும்பலுக்குத் தீருவதில்லை.
கப்பல் வாங்க அகிலன் முயற்சிப்பது ஏன்? முரட்டுத்தனமிக்க அடியாளாக இல்லாமல், அவர் நுணுக்கமாகத் திட்டமிட்டு காய் நகர்த்துவதற்குக் காரணம் என்ன என்பது உட்படப் பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது அகிலனின் மீதிப்பாதி.
வெளித்தோற்றத்தில் கமர்ஷியல் மசாலா போலத் தோன்றினாலும், யதார்த்தம் நிறைந்திருக்கும் ஒரு ஆக்ஷன் படம் பார்த்த திருப்தியை உண்டாக்குகிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.
முதல் பாதியில் விறுவிறுப்பு!
துறைமுகத்தில் நிகழும் சட்டவிரோதச் செயல்பாடுகள், அவற்றுக்குக் காரணமானவர்கள் என்று அறிமுகப்படலத்தை நீட்டி முழக்காமல், நேராக அகிலன் எனும் பாத்திரம் வழியாகவே எளிதாக கதை சொல்லத் தொடங்கிவிடுகிறார் இயக்குனர்.
வில்லனிடம் நற்பெயரைப் பெறும் ஹீரோ என்பது முதல் பாதியாக இருந்தாலும், காட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நகர்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் எதிர்பார்த்ததுதான் என்றாலும், அதற்குப் பின் வரும் சண்டைககாட்சிகள் தான் கொஞ்சம் நீளளளம்ம்ம்ம்…
இந்த படத்தின் செகண்ட் ஹீரோ என்றே இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸை சொல்லலாம்.
முதல் பத்து நிமிடங்கள் துறைமுகத்துக்கு சுற்றுலா சென்றது போன்று எடுக்கப்பட்ட காட்சிகளை விறுவிறுப்பாக்கியதில் பின்னணி இசைக்குப் பங்கு அதிகம்.
அவரது பங்களிப்பு ஒரு ஹாலிவுட் ஆக்ஷன் படம் பார்த்த திருப்தியை உருவாக்குகிறது.
ரொம்பவே நுணுக்கமான திரைவடிவம் கொண்ட ஒரு படைப்பைப் பார்க்கிறோம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது விவேக் ஆனந்த் சந்தோஷத்தின் ஒளிப்பதிவு.
கடலில் கொட்டப்படும் உணவுப்பொருட்கள், ஆழ்கடலுக்கும் நிலப்பரப்புக்குமான இடைவெளி போன்றவற்றைக் காட்டுமிடங்களில் விஎஃப்எக்ஸ் நுட்பம் சிறப்பானதாக இல்லை.
தயவு தாட்சண்யம் இல்லாமல் படத்தில் பல காட்சிகளை என்.கணேஷ்குமார் வெட்டி எறிந்திருக்கிறார். அதனாலேயே, முழுக்க ஆக்ஷன் மோடில் இருக்கிறது.
தொடக்கத்திலும் முடிவிலும் மட்டுமே பிரியா பவானி சங்கர் வருவதற்கும் அவரே காரணம் போலிருக்கிறது.
கிளைமேக்ஸில் மெயின் வில்லன் என்னவானார் என்று காட்டியபிறகும் கதை நீள்வதில் இருக்கும் குழப்பத்தைப் போக்கியிருக்கலாம்.
துறைமுகம், கண்டெய்னர், வடசென்னையின் படகுக்குழாம் என்று வேறொரு உலகை அறிவதற்கும், காட்சிகளின் அழகைக் கூட்டுவதற்கும் உதவியிருக்கிறது ஆர்.கே.விஜய்முருகனின் கலை வடிவமைப்பு.
மிராக்கிள் மைக்கேலின் சண்டை வடிவமைப்பில் கடலுக்குள் நடக்கும் சண்டைக்காட்சி ஈர்க்கிறது. என்ன, ரத்த வாடைதான் கொஞ்சம் அதிகம்!
இரண்டாம் பாதியில் வரும் பிளாஷ்பேக் வரை நேர்த்தியைக் கூட்டிய இயக்குனர் கல்யாணகிருஷ்ணன், படத்தை எப்படி முடிப்பது என்பதில் கொஞ்சம் அசந்திருக்கிறார்.
கட்டுமஸ்தான ரவி!
வழக்கமான ஆக்ஷன் ஹீரோ வேடம் என்றபோதும், தனது நடை உடை பாவனையால் அகிலன் என்ற பாத்திரமாகவே தோன்றுகிறேன் என்று உணர்த்தியிருக்கிறார் ஜெயம் ரவி.
கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஹீரோக்கள் கேமிரா முன்னால் தங்கள் புஜபலத்தைக் காட்டுவது வழக்கம். அப்படிக் காட்சிகள் இல்லையென்று இயக்குனர் சொன்னதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
பிரியா பவானிசங்கர், தான்யா ரவிச்சந்திரன் இருவருக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை.
ஜெயம் ரவிக்கும் இவர்களுக்குமான உறவுப்பிணைப்பை விளக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டு தவிர்க்கப்பட்டதாகவே தெரிகிறது.
மதுசூதன் ராவ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பேரடி, தருண் அரோரா, திலீபன், சாய் தீனா, சாய் தமிழ் ஆகியோரைத் தாண்டி போலீஸ் அதிகாரியாக வரும் சிராக் ஜனி நடிப்பு கவர்கிறது.
அதேபோல, பூலோகம் படத்தில் வில்லனாக வந்த ஐ.எஸ்.ராஜேஷும் ரசிகர்கள் மனதில் பதியும்படியான ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார்.
தொழிற்சங்கத் தலைவராக வரும் மதுசூதன் பாத்திரத்திற்கு ஜனநாதன் என்று பெயர் சூட்டியிருப்பது இயக்குனரின் குருபக்தியைக் காட்டுகிறது.
இயக்குனர் நினைத்திருந்தால், இப்படத்தை ‘கேஜிஎஃப்’ போல முழுக்க ஆக்ஷன் படமாக ஆக்கியிருக்கலாம், கடல் வழி வாணிபத்தில் நுட்பங்களைச் சொல்லும் ஆவணப்படமாக மாற்றியிருக்கலாம்.
ஏன், கொஞ்சமாக இடம்பெறும் வட்டாரச் சித்தரிப்பைப் பற்றி ஊடகங்களில் பூதாகரமாகப் பேட்டியளித்துவிட்டு, முழுக்கத் துறைமுகத்தை வைத்து மசாலா படமொன்றை தந்திருக்கலாம்.
அப்படி ஏதும் இல்லாமல், நம்மில் பலர் அறியாத களத்தைப் பற்றி எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலான ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார்.
கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி, சினிமாத்தனமான தந்திரோபயங்கள் போன்றவற்றைத் தவிர்த்திருந்தால் இன்னும் நேர்த்தியான அனுபவம் கிடைத்திருக்கும்.
என்ன, குழந்தைகளுடன் வந்து குடும்பத்துடன் படம் பார்ப்பதற்கான அம்சங்கள் இதில் இல்லை.
அதேநேரத்தில் ஆக்ஷன் பட விரும்பிகளுக்கு நல்ல முறையில் கதை சொல்லி திருப்திகரமாக தியேட்டரை விட்டு வெளியே அனுப்ப முயன்றிருக்கிறார் கல்யாண கிருஷ்ணன்.
துறைமுகப் பகுதியை மையமாக வைத்து தீ, அதிகாரி, துறைமுகம் ஒரு சில படங்களே தமிழில் வெளியாகியுள்ளன.
கப்பல் மாலுமிகளின் வாழ்க்கையைச் சொன்ன எஸ்.பி.ஜனநாதனின் ‘இயற்கை’யில், துறைமுகத்தையொட்டிய மக்களின் வாழ்வுமுறை லேசாகச் சொல்லப்பட்டிருக்கும்.
அதிலிருந்து வேறுபட்டு, துறைமுகத்தில் நிகழும் சட்டவிரோதச் செயல்பாடுகளை முன்வைத்து சமூக நீதி பேசும் ஒரு ஆக்ஷன் படத்தைத் தந்திருக்கிறார் கல்யாண கிருஷ்ணன்.
பிரச்சார வசனங்களைப் புகுத்தி நம்மை நெளிய வைக்காமல், இதிலிருக்கும் கருத்துகளை நீங்களே புரிந்துகொள்ளுங்கள் என்று நம்மிடம் பந்தைத் தள்ளிவிட்டிருக்கிறார்.
இத்தனைக்கும் ஹீரோவை ‘தரணி ஆளத் துடிக்கும் தமிழன்’ ஆகக் காட்டியிருக்கிறார். இந்த படத்தின் வெற்றி, நிச்சயம் பெரிய நட்சத்திரங்களோடு அவரைக் கைகோர்க்கச் செய்யும்!
-உதய் பாடகலிங்கம்