அகழாய்வென்பது பண்பாட்டு வரலாற்றின் கூர்முனை!

  • சு. வெங்கடேசன் எம் பி

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு (2014-15) கீழடியில் அகழாய்வுக்கான தொல்நிலம் ஒன்றினைக் கண்டறிந்து அங்கே அகழாய்வுப் பணியினை அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு தொடங்கிய காலம்.

தொடக்கத்தில் நானும் நண்பர்களும் மாதத்திற்கு ஓரிரு நாள்கள் அங்கு போய்வரத் தொடங்கினோம். ஒரு கட்டத்தில் மாதத்தில் பாதி நாட்கள் அங்கே கிடப்பது போலானது.

மதுரை எனும் வசீகர நிலத்தின் வாசல் திடீரென மண்ணுக்குள் திறந்தது. “மண்மூடிப்போக” என்ற சாபம்தான் இது வரை கேள்விப்பட்டதுண்டு. ஆனால் மண்மூடிக்கிடக்கும் வளத்தை தோண்டத் தோண்டப் பார்த்து பூரித்தோம்.

தொல்லியல், வரலாறு, இலக்கியம் என எல்லாவற்றையும் நேரங்காலம் அறியாது அகழாய்வு குழிகளின் ஓரம் நின்று நாட்கணக்கில் பேசினோம்.

முதலில் இந்து தமிழ் திசை நாளிதழிலும் பின்னர் ஆனந்தவிகடனிலும் கீழடி பற்றி எழுதத் தொடங்கினேன். கீழடி பற்றிய உண்மைகள் சிறிது சிறிதாக வெளி உலகிற்குத் தெரியத் தொடங்கியது.

அதன் பிறகு காட்சிகள் மாறத் தொடங்கின. புதையுண்ட இடத்தை மீண்டும் புதைக்க நினைக்கும் செயல்பாடு தொடங்கியது. அரசியல் வெளியில் கீழடி இயங்கத் தொடங்கியது. அகழாய்வைக் கைவிட நினைத்தவர்கள் அது முடியாது என்ற நிலையில் அமர்நாத் இராம கிருஷ்ணனை அசாமிற்கு அனுப்பினர்.

பின்னர் ஒருவரை நியமித்து “அங்கு எதுவுமில்லை” என்று அறிக்கை கொடுத்தனர். சட்டமன்றம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என்று அனைத்து மன்றங்களும் கீழடிக்கான போராட்டக்களங்களாக மாறின.

எண்ணிலடங்காப் பொழுதையும் பணியையும் இதன் பொருட்டு செலவழித்தவர்கள் பலர். அவற்றில் முதன்மையானவர் அமர்நாத் இராமகிருஷ்ணன். தனது அலுவல் தொழில் சார்ந்தே இந்த ஆய்வில் அவர் ஈடுபட்டார்.

ஆனால் அதில் ஓர் அநீதி இழைக்கப்பட்ட போது அதனை அவர் எதிர்கொண்ட முறையும் அதன் பொருட்டு அவர் அடைந்த துயரமும் மிகப்பெரியது. என்றும் போற்றுதலுக்குரியது.

கீழடியில் தமிழ்நாடு அரசு

அருங்காட்சியகம் திறக்கப்பட்ட நாளில் தனது அகழாய்வு அறிக்கையின் நகல் ஒன்றினை எனது பார்வைக்குத் தந்தார்.

அதனை வாங்கி சில நிமிடங்கள் மட்டுமே கையில் வைத்திருக்க முடிந்தது. இந்த உண்மைகளை உலகிற்கு சொல்லத்தான் இவ்வளவு பாடு. உண்மைகள் எழுத்தாக உருப்பெறும் போதே ஆற்றலின் வடிவங்கொள்கிறது.

ஒன்றிய அரசின் தொல்லியல் துறை இவ்வாய்வறிக்கையை வெளியிடும் நாளுக்காக காத்திருக்கிறேன். விரைந்து வெளியிட வேண்டுமெனக் கோருகிறேன்.

சங்ககால மதுரை என்பது இன்றைய மதுரைக்கு கிழக்கே திருப்புவணம் பக்கம் இருக்கலாம் என்று 1960 களில் பேரா. மா. இராசமாணிக்கனார் எழுதினார்.

அவர் சுட்டிய திசையில் 2015 ஆண்டு அகழாய்வு நிகழ்த்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் சங்ககால நகரமொன்றினைக் கண்டறிந்து கொடுத்துள்ளார்.

இதுதான் பழைய மதுரையா அல்லது மதுரையையொட்டிய இன்னொரு நகரமா அல்லது மதுரையின் புறப்பகுதியா என்ற எண்ணற்ற வினாக்கள் எழுந்து நிற்கின்றன. ஆய்வின் முதற்பணி விடையை அறிவதன்று; வினாவை உருக்கொள்ளச் செய்வதே. கீழடி அகழாய்வு பல வினாக்களை உருக்கொள்ளச் செய்திருக்கிறது.

அதே நேரம் பல விடைகளை தெளிவுபடுத்தியும் இருக்கிறது.
புரானீக கட்டுக்கதைகளையே வரலாறென நிறுவும் ஒன்றிய அரசின் முயற்சி தமிழ் மண்ணில் எடுபடாது. “இலக்கியமும் அகழாய்வும் இவ்வளவு இறுக்கமாக கைகுலுக்கும் இடம் வேறெதுவுமில்லை” என்று ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் கூறுவது பேருண்மை.

வளமான சங்க இலக்கியச் சான்றும் பல்லாயிரக்கணக்கான தொல்லியல் எச்சங்களும் ஒருங்கே கைகூடி இருக்கும் கீழடி எமது செம்மார்ந்த மரபையும் தனித்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றுகிறது.

மதுரையும் வைகையும் எமது மொழியின் முதுசொல்கள். அவை இன்னும் பல அறிஞர்களின் ஆய்வினூடே பற்பல வியப்புகளை நோக்கி நம்மை அழைத்துச் செல்வன. அருங்காட்சிகள் வரலாறு நெடுகிலும் நமக்காக காத்திருக்கின்றன.

நன்றி: வெங்கடேசன் எம்.பி.முகநூல் பதிவு

Comments (0)
Add Comment