கீழடிக்குச் செல்ல ஆர்வம் காட்டும் சுற்றுலா பயணிகள்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் அண்மையில் திறந்து வைத்து, சுமார் இரண்டு மணி நேரம் ஆர்வத்துடன் அருங்காட்சியகத்தை வலம் வந்தார். 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியல், கலாச்சாரம், விவசாயம், நெசவு தொழில், கல்வியறிவு ஆகியவற்றை வெளிப்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்துவதிலும் தொல்லியல் துறையினர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளனர்.

ஆறு கட்டிட தொகுதிகளில் மேல் தளம், கீழ்தளம் ஆகிய இரண்டிலும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேல் தளம் செல்ல லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. மண்பாண்ட பொருட்கள் உள்ள தளத்திற்கு ‘கலம் செய் கோ’ என்றும், கடல் சார்ந்த பொருட்களுக்கு கடல் வழி வணிகம் என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.

பொருட்கள் காட்சிப்படுத்தியதற்கு ஏற்ப அந்தந்த கட்டிட தொகுதிகளில் அனிமேஷன் காட்சிகள், அகழாய்வு தள காட்சிகள் ஒளிபரப்படுகின்றன.

சிறுவர்களை கவரும் வகையில் உள்ள அனிமேஷன் காட்சிகளை ஆர்வமுடன் கண்டு ரசித்து வருகின்றனர். அருங்காட்சியக கட்டிட தொகுதியினுள் தமிழர்களின் வீரம், கல்வி ஆகியவற்றை வெளிப்படுத்தும் வண்ணம் புடைப்புச் சிற்பங்கள், மினியேச்சர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

4-ம் கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்கள், அமெரிக்கா, புனே, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஆய்விற்காக அனுப்பட்டது. அதன் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து அவற்றையும் தொல்லியல் துறையினர் காட்சிப்படுத்தியுள்ளனர். இதனை மக்கள் ஆர்வத்தோடு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

Comments (0)
Add Comment