எவரும் அறியாத ஊரை ஒருவர் தனது திறமையால் வெளி உலகத்திற்கு காட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது.
அதேசமயம் அந்த கிராமத்தையும் மாற்றுவதென்பது சாதாரண காரியமா என்ன.
அப்படி வாழ்ந்து, திரையுலகமே திகைத்து பார்த்த கலைஞர் தான் மறைந்த கலாபவன் மணி.
பல குரல் மன்னனாக சினிமா வாழ்க்கையை தொடங்கிய இவர், கேரள சினிமாவை ஆண்டு கொண்டிருக்கும் மம்முட்டி, மோகன்லாலை எதிர்த்து நிற்கும் வில்லனாக உருவெடுத்த ஆட்டோக்காரன் தான் இந்த கலாபவன் மணி.
அதுமட்டுமல்லாது கதாநாயகன், நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகர் என எந்த கதாபாத்திரம் எடுத்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை பொறுத்திக் கொள்ளும் ஆகச் சிறந்த கலைஞன். சினிமாவில் இவரின் நடிப்பைப் பார்த்து வியக்காதவர்களே இருக்க முடியாது.
கடைசியாக இவர் நடித்த படம் தமிழில் வெளியான பாபநாசம் திரைப்படம். பன்முகக் கலைஞராக வலம் வந்த இவரின் இறப்பு மர்மமாக அமைந்ததுதான் உச்ச வேதனை.
கேரள மாநிலத்தில் சாலக்குடி என்ற கிராமத்தில் வறுமையின் பிடியில் சிக்கி இருந்த குடும்பத்தில் பிறந்த இவர், உணவுக்கு வழியில்லாமல் கஷ்டப்பட்ட குடும்பத்தை ஆட்டோ ஓட்டிக் காப்பாற்றினார்.
ஆதிவாசி மக்கள் நிறைந்த இந்த கிராமத்தில் தனது நேரத்தை செலவழிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
வறுமையில் இவர் கற்றுக் கொண்ட பாடமே கடைசிவரை தனது மக்களுடன் சேர்ந்து வாழ வைத்தது. உதவி என்று யாரும் கேட்டு வரத் தேவையில்லை. ஏனென்றால் இவரே கேட்டு உதவி செய்யக் கூடியவர்.
ஓணம் பண்டிகை சமயத்தில் அவரது வீட்டில் மட்டும் கொண்டாடாமல் ஆதிவாசி மக்களுடன் சேர்ந்து அனைவருக்கும் உணவளித்து, புத்தாடைகள் கொடுத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார் கலாபவன் மணி.
காடுகள் நிறைந்த அவரது கிராமத்தில் ஒரு பெண்கள் அரசு பள்ளி உள்ளது. பெண் குழந்தைகள் கஷ்டப்படுவதை கண்டு யாருமே கேட்காமல் அந்த பள்ளிக்கு ஒரு பேருந்து வாங்கி கொடுத்துள்ளார் இவர்.
யாரையும் வெறுக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்ட இவர் சிறை கைதிகளை மகிழ்விக்க வேண்டி ஒரு மணி நேரத்திற்கு மேலாக காமெடி நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
வறுமையில் வாழ்பவர்களுக்கு தாய் பாசம் மிகப்பெரிய உணவு என்பது அதை உணர்பவர்களுக்கே தெரியும். தாயின் மீது அதீத பாசம் கொண்ட கலாபவன் மணி வயது முதிர்ந்த பெண்களை கண்டால் அக்கறையோடு அனுசரிப்பாராம்.
திருச்சூரில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் கலாபவன் மணி.
விருதுகள் வாங்குவதை விட மக்களை மகிழ்விப்பது சிறந்த விருது என அடிக்கடி குறிப்பிடுவாராம்.
கலாபவன் என்ற கலைக்குழுவின் சேர்ந்த காரணத்தினால் மணி என்ற அவரது பெயருடன் கலாபவன் இன்று வரை சேர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.
தமிழ் சினிமா கலாபவன் மணியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இவர் நடிக்கும் அனைத்து கதாபாத்திரத்திலும் தனக்கென ஒரு முத்திரையை பதித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார்.
நடிகர் என்ற ஒற்றை வார்த்தைக்குள் இந்த மாமனிதனை அடக்க முடியாது.
மக்களை மகிழ்வித்த கலைஞர் இன்றுடன் இறந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது. கலாபவன் மணியை மறக்க முடியாத சாலக்குடி கிராம மக்கள் அந்த பகுதியில் அவருக்கென தனி சிலை வைத்துள்ளனர். மக்களோடு மக்களாக வாழ்ந்த மகா கலைஞனுக்கு என்றும் அழிவு கிடையாது.
- நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்