‘அகிலன்’ ரொம்ப கஷ்டமான படம்!

ஜெயம் ரவி நெகிழ்ச்சி

நடிகர் ஜெயம் ரவி – இயக்குநர் N. கல்யாண கிருஷ்ணன் கூட்டணியில் மீண்டும் ஒரு அசத்தலான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் அகிலன். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் சுந்தர், “இந்தப் படத்தை உருவாக்குவது சற்று கடினமாக இருந்தது.

ஏனென்றால் படப்பிடிப்பு முழுக்க துறைமுகத்தில் நடைபெற்றது, சில கப்பல்கள் வருவதற்கும் சில கப்பல்கள் செல்வதற்கும் காத்திருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

ஆனாலும், படக்குழு இதை சமாளித்து, அருமையாக படத்தை எடுத்துள்ளனர்” என்றார்.

இசையமைப்பாளர் சாம் சிஎஸ், “இந்தப் படத்தில் ஹார்பரில் நாம் பார்க்காத ஒரு வாழ்கையை, ஒரு புதிய உலகத்தை காட்டியுள்ளார்கள்.

கல்யாண் மிகப்பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார். பாடல்கள் பற்றி விவரிக்கும் போதுகூட இந்த ராகத்தில் போடலாம் என்பார்.

எனக்கு ராகம், இசை எல்லாம் தெரியாது இப்போதுதான் கற்றுக்கொள்கிறேன்.

ஆனால் இசையை எனக்கு பிடித்த வேலையாக விரும்பி செய்கிறேன்” என்று உற்சாகமாகப் பேசினார்.

நடிகை பிரியா பவானி சங்கர், “ஃபிஸிகலாக எல்லோருமே ரொம்ப கஷ்டப்பட்ட படம். தான்யா உடன் நான் நடிக்கவில்லை. ஆனால் அவருக்கு வாழ்த்துகள். ஜெயம் ரவி நிறைய உழைத்திருக்கிறார். படம் அட்டகாசமாக வந்துள்ளது” என்றார்.

இயக்குநர் கல்யாண் பேசும்போது, “நான் பேச நினைத்ததை எல்லாம் அனைவரும் பேசி விட்டனர். நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை, இந்த படம் துறைமுகத்தில் நடப்பவைகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் அனைவருக்கும் இது புதிதாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால் அப்படி இல்லை. என்னைச் சுற்றியுள்ள நிறைய நண்பர்கள் துறைமுகத்தை சுற்றித்தான் இருக்கிறார்கள்.

அவர்கள் எளிய மக்கள்தான். எனவே படம் பார்க்கும் அனைவரும் தங்களுடன் எளிதாக தொடர்புபடுத்தி கொள்ளும் ஒரு எளிமையான வாழ்வை சொல்லும் வண்ணம்தான் இப்படம் இருக்கும்.

இப்படத்தை ஜெயம் ரவி தன்னுடைய நடிப்பால் உயிர்ப்பித்துள்ளார்” என்று நெகிழ்வுடன் பேசினார்.

நடிகர் ஜெயம் ரவி பேசும்போது, “மேக்கிங் பொறுத்தவரை அகிலன் ரொம்ப கஷ்டமான படம், இதெல்லாம் கிடைக்குமா, இதெல்லாம் எடுக்க முடியுமா, என நினைத்தபோது, தயாரிப்பாளரால்தான் இதை எடுக்கமுடிந்தது.

இந்தப் படத்தை சாத்தியமாக்கிய என் படக்குழு அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் கல்யாண், மிகப்பெரிய திறமைசாலி, கடின உழைப்பாளி, நல்ல சிந்தனையாளர் மக்களுக்கு நல்ல விசயம் சொல்ல ஆசைப்படும் நபர். அவருக்கு பெரிய வெற்றிகள் கிடைக்கட்டும்.

இந்தப் படம் நல்லா வந்ததற்கு காரணம் அவருடைய டீம் தான். படம் நன்றாக வந்துள்ளது. உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்” என்று சிரித்துக்கொண்டே பேசி முடித்தார்.

Comments (0)
Add Comment