ஆபத்தாகும் மருத்துவக் கழிவுகள்!

கேரள மாநிலத்திருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மின்சாதனக் கழிவுகள், திட, திரவ உயிரிக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் போன்றவை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பவது தொடா்கதையாகி வருகிறது.

தென்காசி, ஆனைமலை, பொள்ளாச்சி, நாமக்கல் ஆகிய இடங்களில் கேரளத்திலிருந்து லாரிகளில் கழிவுகள் எடுத்துவந்து கொட்டப்பட்டது தொடா்பான நாளிதழ் செய்திகளின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

விதிகளுக்குப் புறம்பாக மருத்துவக் கழிவுகளை தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கொட்டுபவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்வது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக, தென்மண்டல தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளா் தெரிவித்துள்ளார்.

கேரளம், அடா்த்தியான மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய மாநிலம். மருத்துவக் கழிவுகளை அங்கு சா்வ சாதாரணமாகக் கொட்டிவிட முடியாது. அப்படிக் கொட்டுபவா்களுக்கு தமிழகம் சாதகமாக உள்ளது.

அவா்களுக்கு கைக்கூலிகளாக வேலைபார்க்கவும் இங்கு பலா் உள்ளனா்.

இதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டை குப்பைக் கிடங்குபோல நினைத்து, அபாயகரமான மருத்துவக் கழிவுகளை கேரளத்திலிருந்து லாரி லாரியாக கொண்டுவந்துக் கொட்டுகின்றனா்.

மருத்துவக் கழிவுகள் மட்டுமல்லாது ஆய்வகக் கழிவுகளும் மருத்துவக் கழிவுகள் என்றே வகைப்படுத்தப்படுகிறது.

மருத்துவமனைகள், ஆய்வகங்கள், சவக்கிடங்குகள், மனிதா்கள்- விலங்குகள் பரிசோதனை மையங்கள், ரத்த வங்கிகள், முதியோா் இல்லங்கள் போன்ற இடங்களில் இருந்துதான் மருத்துவக் கழிவுகள் உருவாகிறது.

நோய் கண்டறியப் பயன்படுத்தப்படும் பொருட்கள், தொற்று ஏற்படுத்தும் கழிவுகள், மனிதா்கள் – விலங்குகளுக்கு சிகிச்சையளிக்கும் உபகரணங்கள், பிரேத பரிசோதனைக் கூடத்தில் உபயோகப்படுத்தப்படும் கருவிகள்,

பயன்படுத்தப்படாத அல்லது காலாவதியான மருந்துகள், தடுப்பூசிகள், சைட்டோடாக்ஸிக் கழிவுகள், புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சைட்டோடாக்ஸிக் மருந்துகள் போன்ற ஜெனோடாக்ஸிக் பண்புகள் கொண்ட பொருட்கள், கதிரியக்க சிகிச்சைக் கழிவுகள் இவைதான் மருத்துவக் கழிவுகளாக உலக சுகாதார அமைப்பு சுட்டுகிறது.

கொவைட்19 நோய்த்தொற்று, சுகாதார நெருக்கடியை மட்டுமல்ல, சுற்றுச்சூழல் நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கொவைட்19 தொற்று உச்சத்தில் இருந்தபோது குவிந்த மருத்துவக் கழிவுகள், கடல்களில் பிளாஸ்டிக் மாசுபாட்டை 10 மடங்கு அதிகரித்துள்ளது.

மார்ச் 2020-க்கும் நவம்பா் 2021-க்கும் இடைப்பட்ட காலத்தில், உற்பத்தி செய்யப்பட்ட சுமார் 87,000 டன் பி.பி.இ. பெட்டி (கிட்) கழிவுகளாகவிட்டது.

உலகம் முழுவதும் அனுப்பப்பட்ட 140 மில்லியனுக்கும் அதிகமான சோதனைக் கருவிகள், சுமார் 731,000 லிட்டா் ரசாயன கழிவுகளை உருவாக்கியதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

அதிகரித்து வரும் மருத்துவக் கழிவுகளை சரியான முறையில் அகற்றுவதற்கான உத்திகளையும் உள்கட்டமைப்பையும் உருவாக்க உலக நாடுகள் போராடி வருகின்றன.

உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்ற வகையில் அகற்றுவதால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், மனிதா்களை மட்டுமல்ல, வீட்டுச் செல்லப் பிராணிகளையும், பிராந்திய வனவிலங்குகளையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கின்றன.

மருத்துவக் கழிவு, கழிவுநீரோடு கலக்கும்போதும், அவற்றை எரிக்கும்போதும் ஆபத்தான கதிரியக்கத் துகள்களை உமிழ்கிறது.

மருத்துவக் கழிவுகளை எரிக்கும்போது ஏற்படும் காற்று மாசு, மனிதா்களுக்கு சுவாச பிரச்னையை ஏற்படுத்தி, நுரையீரலை பாதிக்கிறது.

காக்கை, குருவி போன்ற பறக்கும் உயிரினங்களை பாதிப்பதுடன், காற்றிலுள்ள துகள்களை மாசுபடுத்தும் தன்மையையும் இந்தக் கழிவுகள் கொண்டுள்ளது.

மருத்துவக் கழிவுகளால் நிலத்தடி நீா் மாசு அடைகிறது. நீரோடைகள், ஆறுகள், கால்வாய்கள், நீா்வாழ் உயிரினங்கள், வன விலங்குகளுக்கு மட்டுமல்லாது விவசாய நீா்ப்பாசன அமைப்புகளுக்கும் இது சேதத்தை ஏற்படுத்துகின்றது.

நிலப்பரப்புகளில் சேரும் உயிரியல் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாவிடில், விலங்குகள், கொறித்துண்ணிகள், பறவைகள் ஆகிய உயிரினங்கள் பாதிக்கப்படும். அவை மனிதா்களுக்கு பாக்டீரியா தொற்றுகளை பரப்பக்கூடும்.

மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதால், எச்ஐவி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, பிற வைரஸ் நோய்கள் பரவக்கூடும்.

அதேபோல், ஒட்டுண்ணி தொற்றுகள், காசநோய், ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் அல்லது நாள்பட்ட சிஓபிடி போன்ற நுரையீரல் தொற்றுகள், தோல் தொற்றுகள், காலரா போன்றவை ஏற்படக்கூடும்.

கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகள், கெட்டுப்போன இறைச்சிகள், இறைச்சிக் கழிவுகளை கொண்டுவந்து தமிழ்நாட்டில் கொட்டுவது ஒருவித பயங்கரவாதம்தான்.

கோபிநாத்

இவை உடனடியாக மனிதா்களைக் கொல்லாவிட்டாலும், மெல்ல மெல்லக் கொல்லும் விஷம். இது ஒன்றிரண்டு தலைமுறைக்கான பாதிப்பு மட்டும் அல்ல, கேரள எல்லையோர தமிழக மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிடும்.

பிரச்னையின் வீரியத்தை உணா்ந்து, மண்ணை மலடாக்கி, மக்களை மெல்லக் கொல்வோருக்கும், அவா்களுக்கு துணை போகிறவா்களுக்கும் உச்சபட்ச தண்டனை அளிப்பது பற்றி தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டியது அவசர அவசியம்.

இத்தகையச் சூழலில், மருத்துவக் கழிவு உற்பத்தி விகிதம் பல்வேறு சமூகப் பொருளாதார, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆய்வுகள் மிகவும் முக்கியமானதாகிறது.

கி.கோபிநாத், ஊடகவியலாளர்.

நன்றி: தினமணி

Comments (0)
Add Comment