சூப்பர் ஸ்டார்களை உருவாக்கும் இயக்குநர்கள்!

– நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இயக்குநர் எஸ்.ஜி. சார்லஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள புதிய திரைப்படம் ‘சொப்பன சுந்தரி’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

டார்க் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரபலமான வணிக வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநரும், நடிகருமான மோகன்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இயக்குநர் மோகன்ராஜா பேசுகையில், ”அண்மைக்காலமாக ‘தரமற்ற படத்தை பார்வையிட்டாலே தவறு’ என்று ரசிகர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். அது தவறு.

விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், ரசிகர்களாகிய நீங்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்வையிட்டு, நீங்கள்தான் நல்ல படமா? இல்லையா? என்பதை தீர்மானிக்கவேண்டும்.

அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். நீங்கள் வருகை தருவதால் தான் எங்களுடைய வாழ்வாதாரம் நடைபெறுகிறது.

விமர்சனம் நன்றாக இருந்தால்தான் திரையரங்கத்திற்கு வருவோம் என்ற மனநிலையை ரசிகர்களும், பார்வையாளர்களும் மாற்றிக்கொள்ளவேண்டும்” என்று எதார்த்தமாகப் பேசினார்.

இயக்குநர் சார்லஸ், ”படத்திற்கு ‘சொப்பன சுந்தரி’ என பெயர் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதனை படம் பார்க்கும் போது தெரியும். நான் இயக்கிய முதல் படமான ‘லாக்கப்’ திரில்லர் திரைப்படமாக இருந்தாலும், குடும்பத்தினர் அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கினேன்.

இந்தப் படத்தையும் குடும்பத்தினர் அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறேன். நம் பக்கத்து வீடுகளில் நடக்கும் கதையாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ”கதையின் நாயகியாக ஒவ்வொரு படத்திலும் நடிப்பதற்கு என்னுடைய பலமே இயக்குநர்கள்தான். நடிகர், நடிகைகள் நட்சத்திர அந்தஸ்தை அடைவதற்கு இயக்குநர்கள் தான் பொறுப்பு.

ஒரு இயக்குநர்தான் நடிகர் நடிகைகளை பிரம்மாண்டமாகவும் பிரமிப்பாகவும் காட்சிப்படுத்தமுடியும்.

அந்த வகையில் எனக்கு இயக்குநர்கள் மிகவும் முக்கியம்.

ஒரு நடிகர் நட்சத்திர நடிகராக… சூப்பர் ஸ்டாராக உயர்வதற்கு இயக்குநர்கள் தான் அடித்தளம் அமைக்கிறார்கள்.

அதிலும் நடிகைகளை, கதையின் நாயகியாக நடிக்க வைத்தால்.. அவர்களை ரசிகர்கள் எப்படி கொண்டாடுவார்கள்.

எப்படி கொண்டாட வேண்டும் என்பதை இயக்குநர்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

‘சொப்பன சுந்தரி’ படத்தை நான் பார்த்து விட்டேன். நான் இதுவரை சோகம் கலந்த கதாபாத்திரங்களையும், உணர்வுபூர்வமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறேன்.

ஆனால் இந்த திரைப்படத்தில் முற்றிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஏனெனில் வாழ்க்கையில் மிகவும் கடினமான வேலை என்னவென்றால்… மற்றவர்களை சிரிக்கவைப்பது.

இது முழு நீள காமெடி வித் ஃபேமிலி என்டர்டெய்னர். எனக்கு சூப்பர் ஸ்டாரை மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்டைலான காட்சிகள் இந்த படத்திலும் இடம் பிடித்திருக்கிறது” என்றார்.

Comments (0)
Add Comment