வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம்
கா்நாடக மாநில கல்வி நிறுவனங்களில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர மாநில அரசு தடை விதித்தது.
இதை எதிர்த்து உயா்நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு மாறுபட்ட தீா்ப்பை வழங்கியது.
இதனால் கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்த ஹிஜாப் தடை உத்தரவு தொடா்கிறது.
இந்நிலையில், மார்ச் 9-ஆம் தேதிமுதல் தோ்வுகள் தொடங்க உள்ளதால், மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்வது தொடா்பான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமா்வுமுன் மாணவிகள் சார்பில் வழக்குரைஞா் ஷதான் பராசத் நேற்று ஆஜராகி முறையிட்டார்.
அதற்கு தலைமை நீதிபதி, ஹோலி பண்டிகைக்கு பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்றார்.
இன்னும் 5 நாள்களில் தோ்வுகள் தொடங்க உள்ளதால் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என ஷதான் பராசத் வலியுறுத்தினார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க 3 நீதிபதிகள் அமா்வு அமைக்கப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்தார்.