வேலூர் மாவட்டம், காட்பாடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இன்டர்நேஷனல் ஃபைனான்சியல் சர்வீஸ் எனும் ஐ.எஃப்.எஸ், ஹிஜாவு மற்றும் ஆருத்ரா உள்ளிட்ட நிறுவனங்கள், பொதுமக்கள் முதலீடு செய்யும் தொகைக்கு, அதிக வட்டி தருவதாகக்கூறி, ரூ.6 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, 200 முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், 56 கோடியே 82 லட்சத்து 89 ஆயிரத்து 879 ரூபாய் மோசடி செய்ததாக, ஐ.எஃப்.எஸ் மார்க் ஆப்பர்சூனிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் உள்பட 6 நிறுவனங்கள் மற்றும் இயக்குநர்கள், நிர்வாகிகள், ஊழியர்களுக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில் மக்களை நம்ப வைத்து நிதி மோசடி செய்த ஹிஜாவு, ஆருத்ரா நிறுவனங்கள் மீது பொருளாதார குற்றப்பிடிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அதிக வட்டி தருவதாக மோசடி செய்த 3 வழக்குகளில் தொடர்புடைய 15 பேர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு அவர்களைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.