என்னை தலைநிமிர வைத்த வீடு!

எங்களது கோபாலபுரக் குடும்பத்தில் அனைத்துக்குமான அகரமாக இருந்தவர் மரியாதைக்கும் எங்களது வணக்கத்துக்கும் உரிய தாத்தா முத்துவேலர் அவர்கள்.

வித்வான் – புலவர் – சமஸ்கிருதமும் அறிந்தவர் – பல்வேறு இலக்கியப் பாடல்களை மனப்பாடமாக ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர்.

கிராமிய மெட்டுகளில் பாடல்கள் எழுதுபவர். பாடல்களை இனிமையாகப் பாடக் கூடியவர். ஆன்மிக நாட்டம் கொண்டவர். வைத்தியர். மந்திரம் சொல்லக் கூடியவர்.

தூண்டில் போட்டு மீன் பிடிப்பதில் கெட்டிக்காரர் – வேளாண்மையில் நாற்று நடுதல், களை பறித்தல், விளைவித்தல் ஆகிய அனைத்தும் செய்பவர் – இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இத்தகைய பன்முக ஆற்றலைக் கொண்டவர் தான் எனது தாத்தா முத்துவேலர். 1946ஆம் ஆண்டு அவர்கள் மறைந்தார். தலைவர் அவர்களின் உயர்வை முழுமையாகப் பார்க்காமல் மறைந்து விட்டார் எங்கள் தாத்தா.

தாத்தா முத்துவேலர்-பாட்டி அஞ்சுகம் அம்மையாருக்கு மூன்று பிள்ளைச் செல்வங்கள் பிறந்தன. முதல் இரண்டும் பெண் குழந்தைகள். மூன்றாவது ஆண் பிள்ளை. அதுதான் தலைவர் கலைஞர் அவர்கள்.

பெண் பிள்ளைகள் இருவருக்கும் பெரியநாயகி, சண்முக சுந்தரி என்ற பெயரைச் சூட்டினார் தாத்தா.

1936 வரை எங்கள் குடும்ப உறுப்பினர்கள் திருக்குவளையில் இருந்தார்கள். பின்னர் திருவாரூர் வந்துவிட்டார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் திரையுலகப் பணிக்காக சேலம், கோவை ஆகிய நகரங்களில் சிறிது காலம் வாழ்ந்தபோதும் பாட்டி அஞ்சுகம் அம்மையாரும் அவர்களோடு சேர்ந்து இருந்தார்கள்.

1950 ஆம் ஆண்டு தலைவர் அவர்கள் சென்னைக்கு நிரந்தரமாக வந்துவிட்டார். ராஜகுமாரி, அபிமன்யூ, மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி, மணமகள் ஆகிய படங்கள் அவரது வசனத்தில் வெளியாகி விட்டது.

சென்னை தியாகராய நகர் திருமலைப்பிள்ளை சாலை அருகில் உள்ள திருமூர்த்தி தெருவில் தலைவர் குடும்பம் முதன்முதலாக குடியேறியது. பின்னர் கோடம்பாக்கம் ஜக்கரியா காலனியிலும், அதன் பின்னர் இராயப்பேட்டை அய்யா முதலி தெருவிலும் எங்கள் குடும்பம் இருந்தது.

பின்னர் தியாகராய நகர் ராஜாம்பாள் தெரு வீட்டுக்கு மாறியிருக்கிறார்கள். திருவாரூரில் இருந்து தலைவரின் அக்கா இருவரும், அவர்களது பிள்ளைகள் என அனைவரும் சென்னையில் மொத்தமாக கூட்டுக் குடும்பமாக தங்கத் தொடங்கினார்கள்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அண்ணன்கள் மாறனும் செல்வமும் சேர்ந்து படித்தார்கள். அண்ணன் அமிர்தம், அப்போதே புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ளவராக மாறி இருந்தார்.

இவர்கள் மூவரும், எனது அத்தை மகன்கள். இவர்கள் மூவருமே எனக்கு ‘அத்தான்’ முறை. ஆனாலும் ‘அண்ணன்’ என்றே எப்போதும் அழைப்பேன்.

ராஜாராணி படம் எடுத்த காலக்கட்டத்தில் (1956) நியூட்டன்ஸ்டூடியோவில் ஒளிப்பதிவாளர் விட்டலிடம் உதவியாளராகச் சேர்ந்துவிட்டார் அமிர்தம்.

ஓய்வு நேரங்களில் ‘முரசொலி’யிலும் புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்தார் அண்ணன் அமிர்தம். ‘முரசொலி’யின் முழு நிர்வாகத்தையும் அண்ணன் மாறன் அவர்கள் கவனித்து வந்தார்கள்.

‘முரசொலி’க்கான அலுவலகம் அண்ணா சாலை சர்ச் பார்க் பள்ளிக்கு எதிரே உள்ள கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. அப்போதே முரசொலிக்கு வேன் வாங்கப்பட்டது.

தலைவர் கலைஞர் அவர்கள் வெக்சால் என்ற வாகனத்தை 1951 ஆம் ஆண்டே வாங்கி விட்டார்.

ராஜாம்பாள் சாலை வீட்டை மாற்றி அனைவரும் வசதியாக தங்க பெரிய வீடாக தலைவர் தேடிவந்தார்கள். அப்போது விற்பனைக்கு வந்தது தான் அரசியல் வரலாற்றின் மாபெரும் நினைவுச் சின்னமாக கம்பீரமாகக் காட்சி தரும் இன்றைய கோபாலபுரம் இல்லம்.

பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெரியவரது வீடு இது. முரசொலி அலுவலகத்தில் அப்போது பணியாற்றி வந்த பாவா என்பவர் தான், இப்படி ஒரு வீடு விற்பனைக்கு வந்திருப்பதாக தலைவரிடம் சொன்னார்.

தலைவரே நேராகச் சென்று அந்த பெரியவரைப் பார்த்தார். வீட்டைச் சுற்றிப் பார்த்தார். வீடு தலைவருக்கு பிடித்திருந்தது.

அந்தப் பெரியவருக்கும் தலைவரைப் பிடித்திருந்தது. விலைக்குத் தருவதாக ஒப்புக் கொண்டார் அந்த பெரியவர். அந்தக் காலத்தில் கோபாலபுரம் சுற்று வட்டாரத்தில் பெரும்பாலான வீடுகள் பிராமண சமூகத்து மக்களுக்குச் சொந்தமானவை தான்.

அதில் ஒரு சிலர் அந்தப் பெரியவரைச் சந்தித்து, ‘இந்த வீட்டை வாங்கப் போகிறவர் திராவிடர் கட்சியைச் சேர்ந்தவர். அவருக்கு வீட்டை விற்கலாமா?’ என்று கூடக் கேட்டுள்ளார்கள்.

‘எனக்கு அந்தப் புள்ளையைப் பார்த்தால் பிடிச்சுருக்கு. அவருக்குத் தான் நான் இந்த வீட்டை விற்கப் போறேன்’ என்று அந்தப் பெரியவர் சொல்லிவிட்டார்.

1955 ஆம் ஆண்டு கோபாலபுரம் வீடு தலைவர் வசமானது. பின்னர் அது தமிழகத்தின் வாசல் ஆனது.

நான் எனது இரண்டு வயதில் இந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறேன். நான் தவழ்ந்த வீடு இது. இன்று தலைவராக இருக்கிறேன் என்றால் என்னைத் தலைநிமிர வைத்த வீடு இது.

தமிழ்நாட்டின் நிரந்தரமான அரச சபை அது. திராவிட இயக்கத்தின் திருச்சபை அது. திரையுலகக் கலைஞர்களுக்கு கலைச்சபை அது. இலக்கியவாதிகளுக்கு சிந்தனைச் சபை அது. மொத்தத்தில் எங்களது உயிர்ச்சபை அது.

இன்றும் கலைஞர் அங்கே இருக்கிறார். வாழ்கிறார். வழிநடத்துகிறார். அதன் வாசலுக்குள் போகும்போது புதிய உணர்ச்சியை நான் பெறுகிறேன். அந்த வீட்டில் இருந்து வெளியில் வரும் போது இரத்தவோட்டம் அதிகமாகி இருப்பதாக உணர்கிறேன்.

மு.க.ஸ்டாலின் எழுதிய உங்களில் (தன் வரலாற்று – பாகம் 1) ஒருவன் நூலிலிருந்து…

Comments (0)
Add Comment