– அரசு உத்தரவு
மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளுக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.
அதன்படி, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் வரும் மருந்து கட்டுப்பாட்டு இயக்குனர் (பொறுப்பு) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா? என்பதை கண்காணிக்க மாநிலம் முழுவதும் உள்ள சில்லரை மற்றும் மொத்த மருந்து கடைகளில் தொடர்ச்சியாக மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகளால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த சோதனைகளின்போது சென்னை, பெருங்குடி திருமலை நகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகளை பெருமளவில் வாங்கி டாக்டரின் பரிந்துரைசீட்டு இல்லாமலும் மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலும் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
எனவே அந்த மருந்து கடைக்கு கொட்டிவாக்கம் சரக மருந்துகள் ஆய்வாளரால் பெருங்குடி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.
மேலும் மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டத்தின்கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அம்மருந்துக்கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சில்லரை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டை தடுக்க டாக்டரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை விற்பனை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என மீண்டும் அறிவுறுத்தப்படுகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.