ஒரே மாதத்தில் 30-வது இடத்திற்கு சரிந்த கவுதம் அதானி!

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ரிசா்ச் என்னும் நிறுவனம், அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக கடந்த மாதம் 25-ஆம் தேதி வெளியிட்டது.

அந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச் சந்தையில் ஆதாயத்தைத் தேடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியது.

இதனைத் தொடா்ந்து, அதானி குழுமத்துக்குச் சொந்தமான 7 நிறுவனங்களின் பங்குகளும் கடுமையான சரிவைச் சந்தித்தன.

அதானி குழும நிறுவனங்களின் நன்மதிப்பைப் பாதுகாக்கும் நோக்கில் நிலுவையில் இருந்த கடன்களை அந்நிறுவனங்கள் திருப்பிச் செலுத்தின.

எனினும், ஆய்வறிக்கை வெளியீட்டுக்கு பின்னான கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் ரூ. 12.06 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்துள்ளது.

இந்தத்தொகை, இந்தியாவின் 2-ஆவது பெரிய நிறுவனமான டாடாவின் டிசிஎஸ் நிறுனத்தின் சந்தை மதிப்புக்கு ஈடாகும் எனக் கூறப்படுகிறது.

ஹிண்டன்பா்க் நிறுவனம் ஆய்வறிக்கையை வெளியீடுவதற்கு முன்னா் உலகப் பணக்காரா்கள் பட்டியலில் 120 பில்லியன் அமெரிக்க டாலா் சொத்து மதிப்புடன் 3-ஆம் இடத்தில் அதானி இருந்து வந்தார்.

ஆனால், குழுமத்தின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட தொடா் வீழ்ச்சி காரணமாக சுமார் 80 பில்லியன் டாலா் சொத்துகளை இழந்து 40 பில்லியன் டாலா் சொத்து மதிப்புடன் 30-ஆவது இடத்துக்கு கௌதம் அதானி தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி, 80 பில்லியன் டாலா் சொத்து மதிப்புடன் பட்டியலில் 10-ஆவது இடத்தில் உள்ளார்.

Comments (0)
Add Comment