மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று முன் தினம் நடந்த முதலாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி கேப்டவுனில் நேற்று நடந்தது. இதில் போட்டித் தொடரை நடத்தும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணியுடன் மோதியது.
டாஸ் வென்று முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டாஸ்மின் பிரிட்ஸ் 68 ரன்களும், லாரா வல்வார்ட் 53 ரன்களும் எடுத்தனர்.
இதைத்தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய சோபியா 28 ரன்னிலும், டேனி வியாட் 34 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அத்துடன், முதல் முறையாக டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் அயபோங்கா ககா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன், தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை நடத்த உள்ளது.