எழுத்தைப் போலவே வாழ்க்கையும் சுவாரசியம்!

பஷீரின் எழுத்துலகம் பற்றி தமிழ்நதி

சில புத்தகங்களை வாசிக்கத் தொடங்கிய பிறகு, ‘கையில் எடுத்துவிட்டோமே… வாசித்து முடித்துவிடுவோம்’ என்று தோன்றும்.

அப்படிச் சிலவற்றை சிரமப்பட்டு வாசித்து முடித்திருக்கிறேன். முடிக்காது இடைநடுவில் நிறுத்திவிட்ட புத்தகத்தைக் காணுந்தோறும், ‘என்னைக் கைவிட்டுவிட்டாயே’ என்று கேட்குமாப்போலொரு குற்றவுணர்வு. அந்நூல்களின் பெயர்களை இங்கு சொல்வது அழகன்று.

நமக்கு உவப்பில்லாது போகலாம்; ஆனால், உழைப்பில்லாத எழுத்தென ஒன்றுகூட இல்லை.

ஆகவே, அவற்றைப் பற்றி எழுதுவதை இயன்றவரை தவிர்த்துவிடுவேன் என்று வைக்கம் முகம்மது பஷீரின் எழுத்துகள் பற்றி தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எழுத்தாளர் தமிழ்நதி.

‘முடியக்கூடாது… இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாகாதா?’ என்றெண்ண வைக்கிற புத்தகங்களும் உண்டு. தி.ஜா.வின் நாவல்கள் அத்தன்மையன.

அசோகமித்திரனின் கட்டுரைகளும்கூட கதைகள் அளவுக்கு சுவாரசியமானவை. அவ்வாறு, ‘முடிந்துவிடப் போகிறதே’ என ஏங்க வைத்த வகைக்குள் வைக்கம் முகம்மது பஷீரின் ‘பாத்துமாவின் ஆடு’ம், ஃபாபியின் ‘எடியே’யும் உள்ளடங்குகின்றன.

‘எடியே’, பஷீரைப் பற்றி அவருடைய மனைவி ஃபாபி கூறிய விடயங்களை தாஹா மாடாயி என்ற எழுத்தாளர், எழுத்தாக்கம் செய்திருக்கிறார்.

கவிஞர் சுகுமாரன் தமிழாக்கம் செய்திருக்கிறார். காலச்சுவடு வெளியீடு. 91 பக்கங்களே கொண்ட மிகச் சிறிய புத்தகம்.

‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது’, ‘இளம்பருவத்துத் தோழி’ இரண்டும் அவ்வளவாக ஈர்க்கவில்லை.

சிறுகதைகளாக எழுதப்பட்டிருக்கிற (அல்லது, மாற்றப்பட்டிருக்கிற) சம்பவங்களெல்லாமே பஷீருடைய வாழ்வில் நடந்தவைதாம் என்பது வாசித்தவரையில் என் அனுமானம்.

நாவல்களும் அவ்வண்ணமே. பஷீரின் படைப்புகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் வாசித்த பின், அவருடைய எழுத்துலகம் பற்றி எழுத ஆசை.

எழுத்தைப்போலவே சுவாரசியமானது அவரது வாழ்வும்.

குறிப்பாக, பேப்பூரில் மரங்கள், நரிகள், கோழிகள், ஆடு-மாடுகள், பாம்புகள் நிறைந்த அவரது வளவில் அவர் வாழ்ந்த வாழ்வு.

தமிழ்நதி

மாங்கோஸ்டின் மரத்தடியில், நண்பர்கள் சூழ அமர்ந்திருந்து, தேநீரை அருந்தியபடி அவர் நடத்திய உரையாடல்கள்.

மனிதரல்லாத பிற உயிர்கள்மீது அவர் கொண்டிருந்த கருணை, பணம், அந்தஸ்து, அதிகாரம் ஆகிய தராசுகள் கொண்டல்லாது யாவரையும் ஒன்றெனப் பார்த்த சமத்துவம்.

அலைந்து திரிந்து, பல்வேறு நிலவெளிகளைக் கண்டு, பல்லாயிரம் மனிதர்களைச் சந்தித்தவரது வாழ்விலிருந்து சுவாரசியமான எழுத்து பிறக்காமலிருந்தால்தான் வியப்பு.

Comments (0)
Add Comment