குறள் நூல்களை அனைவரிடமும் கொண்டு சேர்ப்போம்!

வாரம் ஒருமுறை திருக்குறள் தொடர்பான நூல்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் நிகழ்வை ‘வள்ளுவர் குரல் குடும்பம்’ என்னும் சமூக ஊடக அமைப்பு இன்று தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இரண்டாம் தளத்தில் நடைபெறுகிறது. இந்த வாராந்திர நிகழ்விற்கு ‘நவில்தொறும் நூல்நயம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தொடரை ‘வள்ளுவர் குரல் குடும்பம்’, ‘கற்க கசடற அறக்கட்டளை’ மற்றும் ‘வலைத்தமிழ்’ என்ற மூன்று அமைப்புகளும் இணைந்து நடத்துகின்றன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இந்த தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, வாரந்தோறும் அறிஞர்கள், படைப்பாளிகளின் துணைக்கொண்டு குறள் நூல்கள் அறிமுக நிகழ்வு நடைபெறும்.

இந்த தொடரின், முதல் நூல் அறிமுகமாக ‘திருக்குறள் நீதி இலக்கியம்’ என்ற சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் குறித்து உரையாற்றுபவர் மத்திய செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் திரு.இ.சுந்தரமூர்த்தி அவர்கள்.

பேராசிரியர் கத திருநாவுக்கரசு எழுதிய இந்நூல், சென்னை பல்கலைக்கழகத்தின் திருக்குறள் ஆராய்ச்சிப் பிரிவின் மூலமாக 1971-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

நூல் அறிமுகம் செய்து பேசும் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி, சென்னைப் பல்கலைக் கழகத்தில் திருக்குறள் ஆய்வுப் பிரிவு, தமிழ் மொழி, இலக்கியத் துறைகளில் தலைவர், பதிப்புத்துறைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 32 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

2001 முதல் 2004 வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.

செம்மொழி நிறுவனத்தில் 2008 முதல் 2014 வரை முதுநிலை ஆராய்ச்சியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் படைப்பாளிகள் குறள் சார்ந்த தங்களது நூல் எழுந்த நோக்கத்தைப் பற்றியும், அது வள்ளுவத்தின் மீது பாய்ச்சும் புதிய வெளிச்சத்தையும் தங்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் குறள் ஆர்வலர்கள் தங்களுக்குப் பிடித்த நூல் குறித்தும் உரை நிகழ்த்தலாம்.

இது குறித்து மேலும் அறிய voiceofvalluvar1330@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Comments (0)
Add Comment