கடந்த அதிமுக ஆட்சியில் ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி.
இதில் அவர் அமைச்சராக பொறுப்பு வகித்தபோது டெண்டர்கள் வழங்கியதில் ரூ.800 கோடி முறைகேடு நடந்ததாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து அறப்போர் இயக்கம் மற்றும் திமுக தரப்பில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.வேலுமணி மீது வழக்குகள் பதிவு செய்தது.
இதில் டெண்டர் முறைகேடு வழக்கை மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில்,” எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் போதிய ஆதாரம் உள்ளது எனவும் அதை அடிப்படையாகக் கொண்டு தான் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது எனவும் ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் உயர்நீதிமன்றம் அதுதொடர்பான வழக்கை ரத்து செய்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். எனவே இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.