சிவகாசி, ஆமத்தூர், விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கோவில்பட்டி, விளாத்திகுளம் – புதூர், கழுகுமலை, திருவேங்கடம், சங்கரன்கோவில் மற்றும் குடியாத்தம் போன்ற பகுதிகளில் தீப்பெட்டித் தொழில் பல ஆண்டுகளாக பிரதானமாக நடக்கின்றது.
தீப்பெட்டித் தொழிலுக்கு இந்தப் பகுதியின் சீதோஷ்ணநிலை பொருத்தமாகவும் அமைந்தது.
விவசாயம் செய்வதோடு, ஒவ்வொரு வீட்டிலும் குடிசைத் தொழிலாகவும் தீப்பெட்டித் தொழில் செய்யப்பட்டது.
தீப்பெட்டித் தொழிலில் பெட்டிகள் செய்வது, அடிக்கட்டு அடுக்குவது, தீப்பெட்டி குச்சிகளைச் செய்வது என்று 3 விதமாக பணிகள் நடப்பதுண்டு.
அந்த வெப்பமான பூமியில் தீப்பெட்டித் தொழில் வெற்றிகரமாக நடக்கும் என்று புரிதலோடு, 1923 – ஆம் ஆண்டு சிவகாசி அய்ய நாடார் கல்கத்தா, பம்பாய் வரை சென்று அதற்குத் தேவையான தளவாடங்களை எல்லாம் வாங்கி, ‘நேஷனல் மேட்ச் பேக்டரி’ என்று சிவகாசியில் அமைத்தார்.
இன்றைக்கு தீப்பெட்டித் தொழில் இந்த வட்டாரத்தில் 100 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
தீப்பெட்டித் தொழிலுக்குத் தேவைப்படும் லேபிளை அச்சடிக்க அன்றைக்கு இந்தப் பகுதியிலிருந்து பம்பாய், சென்னைக்கோ சென்றுதான் அச்சடிக்க வேண்டியிருந்தது.
அந்த சிரமத்தைத் தவிர்க்க அச்சகங்கள் இங்கேயே தொடங்கப்பட்டதன் விளைவாகத்தான் பிற்காலத்தில் சிவகாசியில் காலண்டர்கள், டைரிகள். சுவரொட்டிகள், புத்தகங்கள் அச்சடிக்கக் கூடிய பெரிய அளவிலான அச்சகங்கள் அமைந்தன.
இதற்கு லேபிளுக்குச் சித்திரங்கள் வரைய கோவில்பட்டி கொண்டைய ராஜு போன்றவர்கள் உதவியாக இருந்தனர்.
இந்தத் தீப்பெட்டித் தொழிலுக்கு வேண்டிய ரசாயனப் பொருட்களால் கிணறுகள் தோண்ட வெடி மருந்துகள், பட்டாசுகள் எல்லாம் செய்யலாம் என்று தெரிந்த பின், சிவகாசியை ஒட்டிய இந்த வட்டாரங்களில் வேட்டு ஆபீஸ், அச்சாபீஸ்கள் நிறைய வந்தன.
குடிசைத் தொழிலாக இருந்த தீப்பெட்டித் தொழிலைச் செய்ய, நரசிம்மராவ் பிரதமரானவுடன் புதிய பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் பகாசுர இயந்திரங்கள் மூலமாக தீப்பெட்டிகள் செய்யக் கூடிய பெரிய ஆலைகள் நிறுவப்பட்டன.
விம்கோ போன்ற நிறுவனங்கள் கடந்த 31 ஆண்டுகளாக இயந்திரம் மூலமாக அதிக அளவு உற்பத்தி செய்யக் கூடிய முறைக்கு மாறின.
இதனால் குடிசைத் தொழிலாக பலருக்கு அன்றாட வாழ்க்கைக்கு உதவிய இந்த தொழில், பாழ்பட்டுப் போனது.
அந்த கட்டத்தில் பிரதமர் நரசிம்மராவ், ஐ.கே.குஜ்ரால், வைகோவோடு வாஜ்பாய் ஆகியோரை தீப்பெட்டி உற்பத்தியாளர்களோடு நான் உடன் சென்று சந்தித்து, இதைக் குறித்தெல்லாம் முறையிட்டதெல்லாம் நினைவுக்கு வருகிறது.
-வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.