நிரூபர் கேட்ட கேள்விக்கு
கவிஞர் நா. முத்துக்குமார்… பதில்….
கண்ணதாசன் காலத்திலேயே வாலியின் சாதனைகளும் தொடங்கிவிட்டன. வாலியுடன் மிகுந்த நட்பாய் இருந்தவர் நீங்கள். கண்ணதாசன் பற்றி அவர் உங்களிடம் பகிர்ந்து கொண்டதுண்டா?
நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். கண்ணதாசனுக்கும் வாலிக்கும் ஒரு பெரிய ஒற்றுமையுண்டு. நான் நல்ல பாடல்களை எழுதும்போதெல்லாம், “என்னைய்யா… இத்தனை அருமையா எழுதிட்டே!” என்று பாராட்டுவார் வாலி. என்ன சார் இவ்வளவு மனம் திறந்து பாராட்டுறீங்க என்று நான் கேட்பேன். “நான் போன்லதான்யா பாராட்றேன். கண்ணதாசன் வீடு தேடி வந்து என்னை எத்தனை முறை பாராட்டியிருக்கார் தெரியுமா?” என்று என்னிடம் நெகிழ்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்.
கண்ணதாசன் பற்றி அவர் என்னிடம் பகிர்ந்துகொண்ட இன்னொரு முக்கியமான நிகழ்வு இருக்கிறது. பட்டுக்கோட்டையார் பிரபலமாகிவிட்டிருந்த நேரம் அது. கண்ணதாசனைப் பாட்டெழுத அழைத்திருக்கிறது ஒரு முன்னணி பட நிறுவனம்.
“பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்று ஒரு கவிஞர் வந்திருக்கிறாரே, அவரைப் போல இந்தப் பாடலை எழுதித்தர வேண்டும்” என்று இயக்குநர் வாயை விட்டுவிட்டார்.
சரி என்று சொன்னவர் “இப்ப வந்துடுறேன்” என்று கிளம்பிப் போயிருக்கிறார். அடுத்த ஒரு மணிநேரத்தில் பட்டுக்கோட்டையாரை அழைத்துக் கொண்டுவந்து “நீங்கள் தேடிக் கொண்டிருந்த கவிஞர் இவர்தான். இந்தப் பாடலை இவர் எழுதுவதுதான் சரி” என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். அதுதான் கண்ணதாசன்.
கண்ணதாசனின் திரைப்பாடல்களைத் தவிர்த்து அவரது எழுத்துகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
கண்ணதாசன் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது அவரது அர்த்தமுள்ள இந்துமதம்தான். தமிழ்ப் பதிப்பகச் சூழலில் நூற்றுக்கணக்கான பதிப்புகளைக் கடந்து மூன்றாம் தலைமுறைத் தமிழர்களால் வாசிக்கப்படும் மிகச் சிறந்த நூலாக அது இருக்கிறது. அதேநேரம் மதங்கள் வேண்டுமானால் வேறுவேறாக இருக்கலாம்,
ஆனால் இறைவனை நினைத்து உருகும் ஆன்மிகம் என்பது ஒன்றுதான் என்பதை அவர் படைத்த ‘இயேசு காவியம்’ படிக்கும் எவரும் உணர முடியும். அடுத்து அவருடைய ‘வனவாசம் மனவாசம்’.
இவ்வளவு நேர்மையாக ஒருவர் தனது சுயசரிதையை ரத்தமும் சதையுமாக ஒளிவு மறைவின்றி எடுத்து வைக்க முடியுமா என்று வியந்துபோயிருக்கிறேன்.
(நன்றி…தமிழ் இந்து வலைதளம்)