தமிழுக்குத் தொண்டு செய்வோன் செத்ததில்லை!

எத்தனையோ கோவில்களுக்குள் தமிழில் அர்ச்சனை செய்வதைத் தடுப்பது தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்திருக்கிறது.

சிதம்பரத்தில் தடுத்தார்கள். அதற்காகப் பெரும் போராட்டமே நடந்தது.
அடுத்து இன்னொன்றைச் சொன்னால் வியப்பாக இருக்கும்.
‘’இப்படியும் நடந்ததா?” என்று கூடத் தோன்றும்.

ஆனாலும் நடந்திருக்கிறது மதுரை மீனாட்சியம்மன் கோவிலில். திருநாவுக்கரசர் என்கிற பக்தர் பக்தியும், தமிழுணர்வும் கொண்டவர். தேவாரம், திருவாசகம், அருட்பாக்கள் எல்லாம் மனப்பாடம்.

தினமும் மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருவார். அவராகவே மனப்பாடமாக மனதில் பதிந்த தமிழ் தோய்ந்த வரிகளைப் பாடிக் கொண்டு வழிபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்.

இப்படி ஒரு தடவை அல்ல, முப்பதாண்டுக் காலமாகப் பாடி வழிபாடு செய்திருக்கிறார்.

இவ்வளவுக்கும் தமிழ்ச்சங்கம் வளர்ந்த ஊர். நக்கீரரைக் கொண்டாடும் ஊரில் இருந்த ‘சிலருக்கு’ தமிழில் பாடிக் கொண்டு ஒருவர் கோவிலில் வலம் வந்தது உறுத்திவிட்டது.

’பக்தரான திருநாவுக்கரசு தமிழில் பாடிக் கொண்டு கோவிலில் வழிபாடு செய்யக்கூடாது’’ என்று கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

நீதிமன்றமும் அதை ஏற்று அன்றைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
மீனாட்சியம்மன் மேல் பக்தியும், தமிழின் மீது அன்பும் கொண்ட ஒரு சாமானிய பக்தர் தாய்மொழியில் பாடி வழிபடமுடியவில்லை!

இது ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன் மீனாட்சியம்மன் கோவிலில் நடந்த நிகழ்வு.

(பிரபல வாரப் பத்திரிகையில் 20.01.1978 ல் வெளிவந்த செய்தி இது!)
இது கோவில்களில் !

‘’தமிழகக் கோர்ட்டுகளில் தமிழ் வக்கீல்கள் தமிழில் வாதிக்காமல், ஆங்கிலத்திலே வாதிக்கிறார்கள்.

தேச மொழியும் தமிழ்; நீதிமன்றத்திலே வழங்குகிற மொழியும் தமிழ்; நியாயாதிபதியும் தமிழர். வாதிக்கிற வழக்கறிஞரும் தமிழர். கட்சிக்காரர் தமிழர்.
இப்படி எல்லாம் தமிழ் மயமாயிருக்க யாருக்குப் பிரீதியாக அவர்கள் ஆங்கிலத்தில் வாதிக்கிறார்களோ தெரியவில்லை’’

– என்று 1905 ல் அன்றைய மொழி நடையில் ஆதங்கப்பட்டிருக்கிறார் நீதிபதியும், எழுத்தாளருமான வேதநாயகம்.

இன்றைக்கும் நீதிமன்றத்தில் தமிழைக் கொண்டுவர மன்றாடிக் கொண்டிருக்கிறோம்.

ஆந்திராவிலும், தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கைக் கட்டாயப் பாடமாக்க முடிந்திருக்கிறது. இங்கு சில ‘நீதி’யான காரணங்களைக் காட்டி தமிழையும் முழுமையாகக் கட்டாயப்பாடமாக்க வழியற்ற நிலையில் இருக்கிறோம்.

‘’மூத்த மொழியான சமஸ்கிருதத்திற்கும் மூத்த, முதல் வந்த மொழி தமிழ் மொழி’’ என்று மாணவர்களுக்கு மத்தியில் பேசும்போது குறிப்பிடுகிறார் பிரதமர் மோடி.
இப்படிப் பாராட்டுத் தெரிவிக்கிறவர்கள் தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறார்கள்?

கல்வி நிறுவனங்களில், நீதிமன்றங்களில், கோவில்களில் தமிழை எப்படி வைத்திருக்கின்றீர்கள்?

தமிழுக்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களைக் கேவலமான உள் அரசியலில் சிக்க வைத்து நிதிஆதாரத்திற்குக் கையேந்திய நிலையில் வைத்திருப்பதற்கு யார் பொறுப்பேற்பது? தமிழகத்தில் தமிழ் படிப்பதையே கேவலமாக, பலன் அற்றதாக நினைக்க வைத்ததற்கு யார் பொறுப்பு?

பல்லாயிரம் ஆண்டு காலப் பழமை கொண்ட தமிழில் பொதுவெளியில் உரையாடுவதற்குத் தயங்கும் மன வியாதியை உருவாக்கியதில் யாருக்குப் பங்கிருக்கிறது?

இவ்வளவு பேசுகிறவர்கள் தமிழை மத்தியில் ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கி மதிப்புக் கூட்டியிருக்கிறார்கள்? சமஸ்கிருதத்தை வளர்க்க ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் தமிழே ஒதுக்கபட்டதற்குக் காரணகர்த்தாக்கள் யார்?

கொடுமணல், ஆதிச்சநல்லூர், கீழடி என்று பல நூற்றுக்கணக்கான தொல்லியில் சான்றுகள் தமிழரின் தொன்மைக்கான அடையாளங்களாக இருந்தும் அதற்கான முனைப்பு இங்கு தமிழர் பெயரால் ஆட்சி நடத்தியவர்களிடமும், நடத்துகிறவர்களிடமும் ஏன் இல்லை?

கால வெள்ளத்தில் மிஞ்சி நிற்கிற தமிழைக் கால மாற்றத்திற்கேற்ப நவீனப்படுத்துங்கள்.

வெறுமனே சிலைகளாகத் தமிழைத் திடப்பொருளாக்காமல் உலக இருக்கைகளிலும், அடுத்த தலைமுறையிடமும் கொண்டு செல்லத் தமிழனாக முயற்சி செய்யுங்கள்.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அதை மாற்றுங்கள்.

அதற்கான அனைத்து வளமும், செழுமையும் கொண்டிருக்கிறது காலத்தை நீந்தி நம்மிடம் வந்து சேர்ந்திருக்கிற தமிழ்.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காலம் எந்த அதிகாரத் தூசுகளையும் வெகுசீக்கிரம் அப்புறப்படுத்தி மறதின் மடிக்குத் தள்ளிவிடும்.

மனம் ஒன்றிச் செய்கிற செயல்பாடுகளே காலத்தை மிஞ்சிப் பெயர் சொல்லி நிற்கும்.

தன்னை வளர்த்த வயதால் முதிர்ந்த தாயை முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் அலட்சியம் நம் முதிர்ச்சியான மொழி மீதும் இருந்துவிடக்கூடாது.

தன் மீது ஒட்டியிருக்கும் எந்தப் புழுதியையும் மீறி மக்கள் மொழியில் புழங்குகிற தமிழ் நெஞ்சங்கள் இருக்கும் வரை அழிவுப்பட்டியலில் சேராமல் தமிழ் வாழும்.
தமிழுக்காக உண்மையாகவே உழைத்தவர்களை தமிழுலகம் மறவாமல் வாழும்.

அந்த வரிசையில் – கம்பனிலிருந்து வள்ளுவன் துவங்கி சங்க இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை தமிழை வளப்படுத்தியவர்கள் யாவரும் நினைவுகூரப்படுவார்கள்.

ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்துழைத்த அறிஞர்களும் கொண்டாடப்படுகிறார்கள்.
தமிழ்ச்சங்கம் மீண்டும் அமைக்க உதவிய பாண்டித்துரை முதற்கொண்டு தமிழ் எழுத்துருவை அமைக்க உதவிய உலகாளவிய தமிழ்ப் பெருமக்கள், பெரும் இன அழிப்பால் பல நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த நிலையிலும் நெஞ்சில் நீங்காத ஈரமாகத் தமிழைக் கொண்டு சென்றிருக்கும் ஈழத்தமிழர்கள்,
மலேசியா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று காலத்தின் கோலத்தால் பல நாடுகளில் சிதறிக்கிடந்தாலும் தமிழை அடுத்த தலைமுறைக்கு நகர்த்தப்பாடுபட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள் – என்று தமிழைச் சுமந்த –
ஒவ்வொருவரும் தமிழைக் காலத்தின் மறுகரைக்கு எடுத்துச் செல்கிறவர்கள் தான்.
பாரதிதாசன் சொன்ன படி ‘’தமிழுக்குத் தொண்டு செய்தோன் செத்ததில்லை’’
( உலகத் தாய் மொழிதினத்தன்று மனதில் எழுந்த ஆதங்கத்துடன்!)

Comments (0)
Add Comment