பதற்றத்தில் தவிக்கும் மக்கள்
புவித்தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி, மேற்பரப்பில் அதிர்வுகள் உண்டாவதற்கு பெயர் தான் நில நடுக்கம். நமது நாட்டைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு பகுதி, அதிகபட்சம் நில நடுக்கம் ஏற்படுகிற மண்டலத்தில் அமைந்துள்ளது. எனவே அங்கே அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகிற வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலப்பிரதேசத்தில் நேற்று மதியம் 12.12 மணிக்கு திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 புள்ளிகளாக பதிவானது.
இந்த நில அதிர்வு, பூடான் எல்லை அருகே அமைந்துள்ள மேற்கு காமெங்கில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்தது.
இந்த அதிர்வின் தாக்கம் மத்திய வடக்கு அசாமில் பல இடங்களில் உணரப்பட்டது. இதேபோன்று பூடானின் கிழக்கு பகுதியிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட மாநிலமான மத்தியப் பிரதேச மாநிலத்தின் மேற்கு மாவட்டங்கள் சிலவற்றிலும் நேற்று மதியம் 12.54 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3 புள்ளிகளாக பதிவானது.
இந்த நில நடுக்கம் இந்தூருக்கு 151 கி.மீ. தென்மேற்கில் மையம் கொண்டிருந்தது. இந்த அதிர்வு, பர்வானி, அலிராஜ்பூர், தார், ஜாபுவா, கார்கான், இந்தூர் மாவட்டங்களில் உணரப்பட்டது.
துருக்கியிலும், சிரியாவிலும் சமீபத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான் மக்கள் உயிரிழந்த நிலையில், வட மாநிலங்களில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பதற்றத்தில் தவித்தனர்.
நிலநடுக்க பாதிப்புக்குள்ளான இடங்களில் பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதே நேரத்தில் இந்த நில நடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.