பிரபாகரன் சர்ச்சை எப்போது முடிவுக்கு வரும்?

தஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய பழ.நெடுமாறன், “பிரபாகரன் நலமாக இருக்கிறார்” என்கிற தகவலை தெரிவித்ததிலிருந்து பல்வேறு ஊடகங்களில் விவாதங்கள் வலுத்திருக்கின்றன.

தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் தமிழர்கள் வாழும் இதர நாடுகளிலும் இதுகுறித்த சர்ச்சை இன்றுவரை நின்ற பாடாக இல்லை.

ஏறத்தாழ பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் நலமாக இருப்பதாக தெரிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை பொதுவெளியில் எழுப்பியிருக்கிறது.

பாஜக பிரமுகர்கள் சிலர் இலங்கைக்குச் சென்று வந்த பிறகு இப்படி ஒரு தகவல்களை பழ. நெடுமாறன் வெளியிட்டிருப்பது பல அரசியல் சர்ச்சைகளுக்கு வித்திட்டிருக்கிறது.

பாஜக இந்த அறிவிப்பின் பின்னணியில் இருக்கிறதா?

எதற்காக இந்த சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்?

காங்கிரஸ் ஏற்கனவே தேசிய அளவில் பலவீனப்பட்டிருக்கிற நிலையிலும் 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கிற நிலையிலும் காங்கிரஸை மேலும் பலவீனப்படுத்துவதற்காக இப்படி ஒரு தகவல் வெளியிடப்பட்டிருக்கிறதா?

பாஜகவிற்கு இதில் ஏதும் ஆதாயம் இருக்கின்றதா?

– இப்படி பல கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன.

அதோடு பிரபாகரன் நலமுடன் இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த தகவலை வேறு சிலரும் உறுதிபடுத்தியிருக்கிறார்கள்.

இதில் இலங்கையைச் சேர்ந்தவர்களும் அடக்கம்.

இப்படி ஊடகம் வழியாக பிரபாகரன் குறித்த தகவல்களை இந்தச் சந்தர்ப்பத்தில் எழுப்பியிருக்கிறவர்கள் மீது பல சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.

இந்த சந்தேகத்தினுடைய எல்லை அப்படி பேசியவர்களுடைய மனநிலை பற்றியே சந்தேகப்படும் அளவிற்கு நீண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் பிரபாகரன் நலமாக இருக்கிறரா என்கிற தகவல் இவ்வளவு சர்ச்சைக்கு இடையிலும் ஒரு பொதுவெளியில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்திய நிலையில் நீடித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு முன்னாள் முதல்வரான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அரசியல் ரீதியாக பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

அவர் மருத்துவமனையில் சேர்ந்த பிறகு உயிரோடு இருக்கிறாரா என்கிற அளவுக்கு அந்த சந்தேகங்கள் வலுத்தன. அவர் மறைந்ததும் அந்த கேள்விகள் இன்னும் அதிகரித்தன.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தினகரனுக்கு நெருக்கமாக இருந்த வெற்றிவேல் அப்பல்லோ மருத்துவமனைல் ஜெயலலிதா சிகிச்சையில் இருக்கிற மாதிரியான காட்சிப்பூர்வமான ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அவர் மருத்துமனை சிகிச்சையில் நலமுடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சமீபத்தில் பெரியளவில் சர்ச்சையில் அடிபட்ட நபரான நித்யானந்தா குறித்தும் அவர் உயிரோடு இல்லை என்கிற நிலையில் வதந்திகள் உலவிய நிலையில், நித்யானந்தாவே காட்சி ஊடகங்களில் தோன்றி தன்னுடைய இருப்பை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டியிருந்தது.

அவர் வசிப்பதாக சொல்லப்படும் கைலாசா குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டாலும்கூட அவர் நலமாக இருக்கிறார் என்பது பொதுவெளியில் உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த உதாரணங்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரனுக்கும் பொருந்தும்.

ஒருவர் இல்லை என்பதற்குகூட ஆதாரங்கள் தேவைப்படக்கூடிய ஒரு காலகட்டம் இது. அதைவிட கூடுதலாக ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதை உணர்த்துவற்கு கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படுகின்றன.

இப்படிப்பட்ட நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருவரைப் பற்றிய செய்தி வெளிவரும்போது, அதற்கான உரிய அளவிலான சாட்சியங்கள் தேவைப்படுகிறது. அந்த சாட்சியங்கள் காட்சிப்பூர்வமாக இருக்கலாம்.

இன்றைக்குள்ள தொழிநுட்ப வசதியில் யார் எங்கிருந்தாலும் எங்கு வசித்தாலும் நவீன தொழில்நுட்ப சாத்தியத்தோடு அவர் தன்னுடைய இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.

அப்படிப்பட்ட இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தற்போது பிரபாகரனுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்பதை பொதுவெளியில் சொல்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்.

சர்வதேச அளவில் கவனிக்கக்கூடிய ஒரு நபர் குறித்த ஒரு தகவலை சொல்கிறபோது அது சம்பந்தமான ஒரு சாட்சியங்களை அதற்கான உரிய ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டியதும் மிகவும் அவசியமானது.

அப்படி அவர் நலமுடன் இருப்பதாக அவரே தோன்றி தன்னைப் பற்றியும்  தன்னுடைய இருப்பு குறித்தும் எதிர்கால திட்டம் குறித்தும் அவர் வெளிப்படையாக பேசி, அந்த விஷுவலான ஆதாரங்கள் வெளிவரும்போது தான் பொதுவெளியில் தற்போது இருக்கக்கூடிய வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும்

அம்மாதிரியான காட்சிப்பூர்வமான ஒரு பதிவுகள் வெளிவராத நிலையில் பிரபாகரன் குறித்த பலவிதமான சர்ச்சைகளும் கேள்விகளும் தொடர்ந்து உயிர்ப்போடு இருந்துகொண்டுதான் இருக்கும்.

– யூகி 

Comments (0)
Add Comment