வங்கிமுறைக் கல்விக்கு முற்றுப்புள்ளி வைப்போம்!

சம காலக் கல்விச் சிந்தனைகள் : சு.உமா மகேஸ்வரி

வங்கியில் பணத்தை டெப்பாஸிட் செய்வதைப்போல, ஆசிரியர் எப்போதும் மாணவனின் தலையில் தகவல்களை இட்டு நிரப்பும் முரட்டு அமைப்பிற்கு கல்வி முறை எனப் பெயரிடுவதா?

இது வங்கிமுறைக் கல்வி என்பதைப் புரிந்துகொள்வோம் என்கிறார் பிரேசில் நாட்டுக் கல்வியாளர் பாலோ ஃப்ரையிரே (Paula Freire).

இவர் கூறியது ஏறத்தாழ 80 ஆண்டுகளுக்கு முன்பு. இதை இன்றைய கல்விமுறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் எந்த மாற்றமும் அடைந்திருக்கவில்லை என்பதை இருநூறு சதவீதம் உறுதிப்படுத்திட முடியும்.

அதேபோல, இவர் பிரேசிலில் இருந்து இந்த உண்மையைக் கண்டடைந்து கூறியிருக்கிறார். இந்தியாவிலும் இதேதான், தமிழ்நாட்டிற்கும் இது மிகச் சரியாக பொருந்தும்.

ஒரு ஆசிரியர் 40 – 50 குழந்தைகளை தன் முன்னால் உட்கார வைத்துக்கொண்டு விளக்கங்களை கூறுவதும், புத்தகத்தை எடுக்கச் சொல்வதும், இந்தப் பக்கத்தை எடு என்பதும் இதில் உள்ள பாடப்பகுதியை படித்துக் காட்டுவதும் போன்ற முறைகள் தான் இன்றைய கல்வி முறையில் வகுப்பறைகளில் நடக்கிறது என்பது பெரும்பான்மை.

உரையாடலுக்கான கல்விமுறை என்பதற்கு இன்னும் விதைகளே போடப்பட்டு முடிக்கவில்லை. வகுப்பறைக் கல்வியின் மிகப் பிரதானமாக இருப்பது ஆசிரியரே, ஆசிரியர் கூறுவதை மாணவர்கள் கேட்கவும் கவனிக்கவும் வேண்டும்.

மாணவர்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் சந்தேகம் இருந்தாலும் அதை பெரிதுபடுத்தாமல், சரி என்று ஒப்புக்கொள்ளவேண்டும் அல்லது ஒப்புக்கொள்வதுபோல நடிக்கவாவதுவேண்டும் என்பதுதான் இன்றைய சூழல்.

ஆசிரியர் அதிகாரம் படைத்த ஒரு உருவமாக தென்படுகிறார், மாணவர்கள் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு அடிமை முறையில் தலையாட்டும் பொம்மைகளாக வகுப்பறையிலேயே உருவாக்கப்படுகிறார்கள்.

நமது பாடப்புத்தகங்கள் மாணவரது அனுபவ அறிவிற்கு அப்பாற்பட்ட பல்வேறு செய்திகளைத் தருகின்றது அதைக் கொஞ்சம் கூட கேள்விக்கு உட்படுத்தாமல் அவற்றையே நாம் தகவல்களாகவே குழந்தைகளுக்கு அளித்து வருகிறோம்.

அந்தத் தகவல்களிலிருந்து தேர்வுக்கு வினாக்கள் வருகின்றன. மாணவர்கள் மனப்பாடம் செய்து விடைகள் எழுத வேண்டும் இதுதான் தேர்வு முறைகளில் அபத்தம் இதில் தான் யாருக்கு அதிகமான தகவல்கள் தெரிகின்றதோ அவர்கள் முதல் இடத்தை பெறுகின்றார்கள்.

தகவல்கள் தெரியாவிட்டாலும் சந்தேகத்திற்கு இடமாக இருந்து மண்டைக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு படிக்காத குழந்தைகள் பின்தங்கியவர்களாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.

இவற்றையெல்லாம் நோக்கும்போது கல்வி, மாணவர்கள் மீது நிகழ்த்தும் வன்முறை எத்தகையது என்பதனை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

பாவ்லோ பிரேயர் சில ஆய்வுகளை முன் வைத்தார், ஆசிரியர் மாணவர் உறவு குறித்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

ஆசிரியர் மாணவர் உறவு என்பது ஆசிரியர் பாடம் நடத்துபவர், மாணவர் நடத்தப்படுபவர்.

*ஆசிரியருக்கு எல்லாம் தெரியும் மாணவருக்கு ஒன்றுமே தெரியாது.

* ஆசிரியர் சிந்திப்பார் மாணவர்கள் சிந்திக்க வைக்கப்படுவார்கள்.

* ஆசிரியர் பேசுவார், மாணவர்கள் அதை கவனிப்பார்கள்.

* ஆசிரியர் ஒழுக்கத்தை போதிப்பவர், மாணவர்கள் நல்லொழுக்கத்தை அடைய வைக்கப்படுபவர்கள் .

*ஆசிரியர் தகுந்த முன்மொழிவுகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்டவர், மாணவர்கள் அதை அப்படியே ஏற்கவேண்டும்.

* திட்டத்தின் – உள்ளடக்கத்தை நிகழ்ச்சிப்போக்கை ஆசிரியர் தீர்மானிப்பார், மாணவர்களிடம் ஆலோசிக்கப்படக் கூட வழியின்றி, அதற்கேற்ப தங்களை வடிவமைத்துக் கொள்ளவேண்டும்.

* ஆசிரியர் தான் செயல்படுவார், ஆசிரியரின் செயல்பாடுகள் மூலம் தான் செயல்பட்டு விட்டதாக மாணவர்கள் மாயத்தோற்றம் கொள்கின்றனர்.

* ஆசிரியர் என்பவர் தனது தொழில் அதிகாரத்தால் அறிவின் அதிகாரம் செலுத்தி அதை மாணவர்களின் சுதந்திரத்திற்கு எதிரான அதிகாரமாக முன்வைக்கிறார்கள் .

* கல்வி முறையின் மனிதக்கூறு ஆசிரியரே; மாணவர்களோ பொருட்கூறுகளாய் சுருக்கம் பெறுகிறார்கள்.

(இவை பாலோ ஃரையிரேவின் ஆய்வு முடிவுகளாக உலகக் கல்வியாளர்கள் நூலில் ஆயிஷா நடராஜன் கொடுத்துள்ளவை)

மேலே குறிப்பிட்ட அனைத்துமே இன்றைய வகுப்பறைகளுடன் முழுமையாகப் பொருந்திப் போகக்கூடியவை.

ஆங்காங்கே சில விதிவிலக்குகள் இருக்கலாம். எப்போதும் பெரும்பான்மை தான் கணக்கில்கொள்ளப்படவேண்டும் அல்லவா ?

உதாரணத்திற்கு, ஏன் ஒரு 13 வயது மாணவர் அறிவியல் பாடத்தில், கணக்கு , சமூக அறிவியல் போன்ற படங்களில் பின்தங்கிய மாணவராகவோ தமிழ்ப் பாடத்தில் மிகத் திறமைவாய்ந்தவராகவோ இருக்கிறார் என்று கொள்வோம்.

இதற்கான காரணங்களை அறிந்துகொள்ள வேண்டும் எனில், பல வழிகளை மேற்கொள்ளலாம்.

மாணவரிடம் உரையாடி எங்கு பிரச்சனை என்று கேட்கலாம், இது ஒரு முறை. செயல்பாடுகளில் ஈடுபடுத்தி அவரது துலங்கல்களை அடிப்படையாக வைத்து எங்கு பிரச்சனை என்று அறிந்து கொள்ள வாய்ப்புகளை உருவாக்கலாம்.

அறிவியல் பாடத்தில் வரும் கலைச் சொற்கள் (Technical Terms) குறித்த புரிதல் இல்லாததாலும் அவர்கள் பின்தங்கி இருக்கலாம்.

தாய்மொழிவழிக் கல்வி இல்லாமல் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் புரிதலில் சிக்கல் உருவாகி அறிவியல் பாடத்தில் பின்தங்கியிருக்கலாம். அல்லது கணக்கு சமூக அறிவியல் போன்ற பாடங்களில் பின்தங்கியுள்ள மாணவராக இருக்கலாம்.

அதற்கு மாணவர் மட்டும் முழுப் பொறுப்பு ஆகிவிட முடியுமா? அதை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மை மனோபாவம் நம் கல்விமுறையில் இருக்கிறதா?

இங்குதான் இந்த வங்கிமுறைக் கல்வி தலைதூக்கி கோரத்தாண்டவம் ஆடுகிறது. நினைத்ததை நிகழ்த்திடுவோம் என்ற மன நிலையில் ஆசிரியர்கள் வழியாக கல்வி என்பதை தகவல் செயலாக்கமாக மாணவரிடம் கொண்டுசேர்க்க, கல்வி அமைப்பு தொடர்ந்து போராடுகிறது.

360° கோணங்களில் சுழன்று திரும்பிப் பார்த்தால் எல்லோருக்கும் புரியும் எங்கோ சிக்கல் இருக்கிறது. அதனால்தான் 35 மதிப்பெெண்கள் வாங்கவைக்கப் போராடுகிறோம்.

கொஞ்சம் நிறுத்தி நின்று நிதானித்து எதிரே இருக்கும் குழந்தைகளிடம் கேட்போம். என்ன மாற்றங்கள் வேண்டும்? உங்களுக்கான தேவைகள் என்ன குழந்தைகளே என என்றாவது கல்வித் துறையின் அதிகார வரம்புகள் சிந்தித்ததுண்டா?

இல்லவே இல்லை. வங்கிமுறைக் கல்வியால் நிரம்பிவழிகிறது தமிழ்நாட்டின் கல்விப் பாத்திரம். நான் சொல்வதை நீ கேட்டே ஆக வேண்டும். தேர்வை எழுதிமதிப்பெண் வாங்கியே ஆக வேண்டும்.

போட்டிமிகு சந்தையில் திறன்மிக்க வேலைக்காரர்களை உருவாக்குவதுதான் எங்கள் தலையாய பணி.

அதை நீங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு அடிபணிந்து தகவல்களை மூளையில் பதிவிட்டு நினைவுவைத்து சந்தையில் விலைபோக வேண்டும் என்ற மந்திரத்தைக் காலம் காலமாக சமூகத்தில் உச்சரிக்கும் வேலையை மட்டுமே செய்துவருகின்றனர் ஆசிரியர்கள்.

இங்கே வங்கிமுறைக் கல்வி மட்டுமே கோலோச்சி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது இந்த சமூகத்தின் சாபக்கேடு.

என்றைக்கு ஆசிரியர்கள் மாணவர்களை வகுப்பறைகளில் பேச அனுமதிக்கிறார்களோ அப்போதுதான் சாபவிமோசனம் கிடைக்கும்.

ஜனநாயக வகுப்பறைைகள் உருவாகட்டும். ஒடுக்கப்பட்டவர்களின விடுதலைக்கான கல்வி முறைையை முன் வைத்த இந்த பிரேசில் நாட்டு கல்விச் சிந்தனையாளன் ஃபாவ்லோ ஃபிரையார் கேட்ட வங்கிமுறைக் கல்வியை மாற்றிட சிந்தனைகள் மேம்படுவது உடனே நடக்கட்டும். அதுவே நம் எல்லோருடைய எதிர்பார்ப்பும்.

Comments (0)
Add Comment