திகட்டத் திகட்ட நட்சத்திரங்களை குவித்து எடுக்கப்படும் திரைப்படங்களை ‘மல்டி ஸ்டார்’ படம் என்பார்கள். நான்கு திசைகளிலும் மக்களுக்கு அறிமுகமான நட்சத்திரங்கள் அந்த படத்தில் இருப்பார்கள்.
இப்போது அதனை ‘பான் இந்தியா’ சினிமா என்கிறார்கள். ஒரு மொழியில் மட்டும் பிரபலமான நடிகர் – நடிகைகளை வைத்து உருவாக்கப்படும் சினிமாக்களும் ‘மல்டி ஸ்டார்’ படங்களே.
உலகம் சுற்றும் வாலிபன்
தமிழில் ‘மல்டி ஸ்டார்’ படங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டவராக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைச் சொல்லலாம். 1973 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில், திகட்டத் திகட்ட நட்சத்திரக் குவியல் இருந்தது.
எம்.ஜி.ஆர். இயக்கித் தயாரித்த இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
மஞ்சுளா, லதா, சந்திரகலா ஆகியோருடன் மேத்தா ரூங் ராட்டும் (METTA ROONGRAT) கதாநாயகிகள் பட்டியலில் இடம் பிடித்தார்.
வில்லன்களாக அசோகன், மனோகர், நம்பியார், கோபாலகிருஷ்ணன் மிரட்டி இருந்தனர்.
இவர்கள் தவிர நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சோம்சாய் ஆகியோரும் உண்டு.
‘மல்டி ஸ்டார்’ படமாக மட்டுமல்லாமல் ‘மல்டி சாங்கர்ஸ்’ படமாகவும் உலகம் சுற்றும் வாலிபன் விளங்கியது.
சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சவுந்தரராஜன், கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலா, ஜானகி, எல்.ஆர்.ஈஸ்வரி என அப்போது உச்சத்தில் இருந்த அத்தனை பாடகர்களுக்கும் பங்களிப்பு இருந்தது.
கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், புலவர் வேதா ஆகியோருக்கு பாடல் எழுத வாய்ப்பு அளித்திருந்தார் எம்.ஜி.ஆர்.
அதன்பிறகு, எம்.ஜி.ஆர் போட்டுக்கொடுத்த, அந்த வழித்தடத்தில் யாரும் பயணிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.
காரணம், ஹீரோக்கள் ஆதிக்கம் வலுத்ததால், மற்ற பெரிய ஸ்டார்களை தங்கள் படங்களில் இடம் பெறச் செய்ய, அவர்கள் விரும்பவில்லை.
பொன்னியின் செல்வன்
பன்னெடுங்காலத்துக்கு பிறகு, மணிரத்னம், ‘மல்டிஸ்டார்’ பாணியை கையிலெடுத்து பிரமாண்ட வெற்றியை கொடுத்தார். அது – அவரது கனவு திரைப்படமான – பொன்னியின் செல்வன்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என நாடு முழுதும் தெரிந்த நட்சத்திரப் பட்டாளத்தை திரட்டி, சரித்திரப் படத்தில் புது சரித்திரம் எழுதினார்.
வசூலிலும் சரித்திரம் படைத்தது. முதல் பாகம். இரண்டாம் பாகத்துக்காக உலக சினிமா ரசிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.
ரஜினி-விஜய்
தங்களது படங்கள் ‘பான் இந்தியா’ படங்களாக ஒளிர வேண்டும் என்ற எண்ணத்தில் மணிரத்னம் பாணியை இப்போது நகலெடுத்துக் கொண்டிருக்கிறார்கள், ரஜினியும் விஜயும்.
ரஜினியின் முந்தைய படமான அண்ணாத்த வெற்றி அடையவில்லை. இதனால் அந்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். நெல்சன் இயக்குகிறார்.
விஜயும் அஜித்தும் வசூலில் தன்னை தாண்டி இருப்பதால், ஜெயிலர் படத்தில் தீவிர கவனம் செலுத்தும் ரஜினி, இந்தியா முழுமைக்கும் தெரிந்த நட்சத்திரப் பட்டாளத்தை இதில் திணித்துள்ளார்.
தனது படத்தில் ரஜினிகாந்த், பெரிய நடிகர்களை நுழைப்பதில்லை. ஆனால் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார், ‘புஷ்பா’ புகழ் சுனில், வசந்த்ரவி, விநாயகன் ஆகியோருடன் மோகன்லாலையும் இணைத்துள்ளார்.
இதில் மோகன்லால் ரஜினிக்கு உதவும் நேர்மையான கைதியாக நடிக்கிறார் இன்னும் சில பிரபலங்களும் நடிக்க உள்ளதாக தகவல் அமிதப்பச்சன் பெயரும் இதில் அடக்கம்.
லோலேஷ் கனகராஜ் இயக்கும் விஜயின் ‘லியோ’ படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த் தவிர சஞ்சய்தத், அர்ஜுன், மன்சூரலிகான், கவுதம்மேனன், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
அஜித்தின் ‘ஏகே-62’ (இன்னும் பெயர் வைக்கப்படவில்லை) படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டுள்ளார்.
மகிழ் திருமேனி, அந்தப் படத்தை இயக்குவதாக உள்ளது. இந்தப் படத்திலும் பெரிய நட்சத்திரப் பட்டாளம் உண்டு.
– பி.எம்.எம்.