பகாசுரன் – பாதியில் முடிந்துபோன பயணம்!

வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களுக்குப் பிறகு, இயக்குனர் மோகன்.ஜி நான்காவதாக இயக்கியுள்ள படம் ‘பகாசுரன்’.

திரௌபதியும் ருத்ரதாண்டவமும் பட்டியலின மக்களுக்கு எதிராக அமைந்ததாகச் சர்ச்சை எழுந்ததால் பேசுபொருளாக மாறின.

இந்தப் படமும் அந்த வரிசையில் சேருமோ எனும் சந்தேகமே, இதற்கான ஆதரவையும் எதிர்ப்பையும் பெருக்கியது.

சரி, படம் எப்படியிருக்கிறது?

கண் மறைவில் அவலம்!

சேலத்தைச் சேர்ந்த அருள்மொழிவர்மன் (நட்டி), ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி. செய்திகளில் இடம்பெறும் குற்றங்களின் பின்னணியை ஆராய்ந்து யூடியூபில் வெளியிட்டு வருபவர்.

ஒருநாள் ஏற்காட்டில் வசிக்கும் அவரது அண்ணன் மகள் தூக்கிலிட்டு இறந்து போகிறார். அவர் பயன்படுத்திய மொபைலை ‘செக்’ செய்யும்போது, விபசார புரோக்கர் ஒருவர் மிரட்டலை அறிய நேர்கிறது.

நன்றாகப் படித்து, ஒரு நல்ல வேலையில் இருக்கும் பெண்ணொருத்தி எதற்காக விபசாரத்தில் இறங்க வேண்டும்?

அந்தக் கேள்வியைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அப்பாவி இளம்பெண்கள் பலர் டேட்டிங் செயலிகளால் ஆபத்தில் சிக்கியிருப்பது தெரிய வருகிறது.

அது பற்றி போலீசில் புகார் கொடுக்குமாறு தன் சகோதரரிடம் வற்புறுத்துகிறார் அருள். அவரது குடும்பமோ, மானம் போய்விடும் என்று மறுக்கிறது.

அதையடுத்து, இதே போன்று பிரச்சனையில் சிக்கிய ஒரு பெண்ணின் குடும்பத்தினரைத் தேடிச் செல்கிறார் அருள்.

அப்போது, கடலூரைச் சேர்ந்த பீமராசு (செல்வராகவன்) தன் மகளின் தற்கொலைக்குச் சிலர் காரணம் என்று புகார் கொடுத்திருப்பது தெரிய வருகிறது.

பீமராசுவால் தன் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்குமென்று நம்புகிறார் அருள். ஆனால், அவரைப் பற்றிய விவரங்களை அறிவதற்குள், மூன்று பேர் கொல்லப்படுகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, அக்கொலைகளுக்கும் பீமராசுவுக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமோ என்ற கேள்வி அருள் மனதில் எழுகிறது. அதற்கான பதில் தெரிய வருவதோடு படம் முடிவடைகிறது.

கண் மறைவில் காத்திருக்கும் ஆபத்துகளை அறியாமலேயே, பல இளம்பெண்கள் அவலங்களுக்கு ஆளாகின்றனர்.

சிலந்தியின் வலை போல, அப்பிரச்சனை உள்ளிழுக்கும்போது அதனை எதிர்கொள்ளமுடியாமல் அபாயகரமான முடிவுகளை மேற்கொள்கின்றனர்.

தினசரிகளில் இடம்பெறும் பல தற்கொலைச் செய்திகளின் பின்னணி இப்படித்தான் இருக்கின்றன என்று தனது கள ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி. ஆனால், அது திரையில் சரிவர பிரதிபலிக்கப்படவில்லை.

செல்வாவும் நட்டியும் எதற்கு?

ஐம்பதைத் தாண்டிய ஒரு மனிதராக செல்வராகவன் தோன்றியிருப்பதும், அவர் நடிப்பதற்கு ஏதுவாகச் சில காட்சிகள் இருப்பதும் நல்ல மாற்றம். ஆனால், பல இடங்களில் அவரது நடிப்பு செயற்கையாகத் தெரிகிறது.

கேமிராவை நேருக்குநேர் பார்த்துப் பேசியிருப்பது கூட அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நடராஜ் சுப்பிரமணியம் என்ற நட்டியைப் பொறுத்தவரை அந்த பிரச்சனை இல்லை; என்றாலும், தனது பாத்திரம் அரைகுறையாக வடிவமைக்கப்பட்டதை உணராமலேயே படம் முழுக்க வந்து போயிருக்கிறார்.

அதனாலேயே, இந்த படத்தில் செல்வாவும் நட்டியும் எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

செல்வாவின் மகளாக வரும் தாராக்‌ஷியின் ஆடை வடிவமைப்பும் ஒப்பனையும், படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவரோ என்றெண்ண வைத்திருக்கிறது. அவரது காதலராக நடித்த குணநிதிக்கும் பெரிய முக்கியத்துவமில்லை.

ராதாரவி, ராமச்சந்திரன் துரைராஜ், கே.ராஜன், சரவண சுப்பையா, தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன், கூல் சுரேஷ், பாண்டி ரவி, குட்டி கோபி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

இவர்களில் ஹைடெக் புரோக்கராக வரும் சசி லயா மட்டுமே தன் வில்லத்தனத்தால் கவனம் ஈர்க்கிறார்.

ரிஷா உடன் இணைந்து மன்சூர் அலிகான் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். நிச்சயமாக, பெண்களை இழிவுபடுத்தக்கூடாது என்று வலியுறுத்தும் ஒரு படத்தில் இப்படியொரு பாட்டு திருஷ்டிப் பொட்டுதான்.

பாரூக் ஜே.பாஷாவின் ஒளிப்பதிவு, மோகன் ஜியின் முந்தைய படங்களைப் போலவே யதார்த்தமான களமொன்றைக் காணும் உணர்வைத் தருகிறது.

படத்தொகுப்பை மேற்கொண்டிருக்கும் தேவராஜ், ‘பாதிக்கதையைச் சொல்லவில்லையே’ என்ற குழப்பத்தில் தடுமாறியிருக்கிறார்.

திரௌபதி, ருத்ரதாண்டவம் இரண்டிலும் முன்பாதிக் காட்சிகளில் பெரும்பாலும் மௌனமும், மிகத்தேவையான இடங்களில் மட்டும் பின்னணி இசையும் இடம்பெற்றிருக்கும்.

இதில், பின்னணி இசைக்கான இடங்களை அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ‘என் அப்பன் அல்லவா’ பாடல் கொஞ்சம் புத்துணர்வூட்டியிருக்கிறது.

‘சென்னையிலயும் பாண்டியிலயும் வெள்ளைக்காரங்க மாதிரி ஆயிட்டாங்க, நீ பெரம்பலூர்லயே படி’ என்பது போன்ற வசனத்திற்கு பிற்போக்குத்தனத்தை ஆதரிக்கும் ரசிகர்கள் மட்டுமே கைதட்டுவார்கள். நல்லவேளையாக, அது போன்ற வசனங்கள் அதிகம் இடம்பெறவில்லை.

அனைத்தையும் தாண்டி, நம் கண்ணில் படும் குறைகளுக்கு இயக்குனரையே குறை சொல்ல வேண்டியிருக்கிறது.

இரு வேறு பிரச்சனைகள்!

திரௌபதியிலும் சரி, ருத்ரதாண்டவத்திலும் சரி, சர்ச்சைக்குரிய கருவைத் தாங்கியிருந்தபோதும் திரைக்கதை பரபரவென நகரும். காட்சிகள் நறுக்கு தெறித்தாற்போல இருக்கும்.

‘பகாசுரன்’ படமும் அப்படித்தான் தொடங்குகிறது. ஆனால், மிகச்சில நிமிடங்களிலேயே மோகன் ஜியின் கையை விட்டு ‘பரபரப்பு’ லகான் நழுவிச் சென்றிருக்கிறது.

அதற்குக் காரணம், இரு வேறு கதைகள் இப்படத்தில் இடம்பெற்றிருப்பது.

மையப் பாத்திரங்கள் இரண்டும் ஒரே மாதிரியான பிரச்சனையைச் சந்தித்தாலும், இரு தரப்புக்குமான எதிரிகள், பாதிப்பு நேர்ந்த விதம் என்று எல்லாமே வெவ்வேறானவை.

ஆனால், ஒரு தீர்வை மட்டுமே முன்வைத்திருக்கிறார் இயக்குனர். இன்னொரு பிரச்சனை அம்போவென விடப்பட்டிருக்கிறது.

பீமராசு, அருள்மொழிவர்மனைச் சுற்றி திரைக்கதை பின்னப்பட்டிருப்பதால், இருவரும் நேருக்குநேர் சந்திக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அக்காட்சிகள் எதிர்பார்ப்புக்கேற்றவாறு அமைக்கப்படவில்லை.

குடும்ப வறுமை, தவறான சேர்க்கை போன்ற காரணங்கள் தவிர்த்து மிரட்டியும் அச்சுறுத்தியும் கடத்தப்பட்டும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கணிசம்.

அவர்களுக்கான நியாயங்களையோ, மீட்புக்குப் பிறகான வாழ்வையோ இப்படம் பேசவில்லை. மாறாக, அப்படியொரு நிலைமைக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று மட்டும் சொல்கிறது.

மோகன் ஜியைப் பொறுத்தவரை மொபைல் தான் இன்றைய யுகத்தின் பகாசுரன். ஆதலால், குழந்தைகள் கையில் மொபைலை கொடுக்காமல் தவிர்ப்பதோடு, மூடிய அறைக்குள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று தீவிரமாகக் கண்காணிக்கவும் சொல்கிறது ‘பகாசுரன்’.

பெண் குழந்தைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கண்டிப்பின் இன்னொரு வடிவமாகவே மோகன் ஜியின் அறிவுரை அமைந்துள்ளது.

அதே நேரத்தில், இக்கருத்தை ஆணித்தரமாக வலியுறுத்தும் விதமாகத் திரையில் நேர்த்தியாகக் கதை சொல்லத் தவறியிருக்கிறார்.

அதனால், பாதியில் முடிந்துவிட்ட பயணமாக மாறியிருக்கிறது ‘பகாசுரன்’ தரும் காட்சியனுபவம்!

– உதய் பாடகலிங்கம்

கே.ராஜன்சரவண சுப்பையாதிரௌபதிதேவதர்ஷினிராதாரவிராமச்சந்திரன் துரைராஜ்ருத்ரதாண்டவம்வண்ணாரப்பேட்டை
Comments (0)
Add Comment