தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பகிர்ந்த நெகிழ்ச்சியான அனுபவம்
சிவாஜி கணேசன் நடித்த ‘மன்னவரு சின்னவரு’ படத்தை கலைப்புலி தாணு தயாரித்தார். அந்த காலக்கட்டத்தில் அவர்கள் நெருக்கமாகப் பழகினார்கள்.
சிவாஜிகணேசன் உயிர் பிரியும் வேளையில், அருகில் இருந்தவர் கலைப்புலி தாணு. சிவாஜியுடனான தனது அனுபவங்கள் பற்றி தாணு பகிர்ந்து கொண்ட தகவல்கள்.
“நடிப்பு என்று செட்டுக்கு வந்துவிட்டால், முழுக்க அதன் மீதே கவனமாக இருப்பார் என்று சிவாஜி சாரை சொல்வார்கள். ‘மன்னவரு சின்னவரு’ படத்தில் நடித்த நேரத்தில், எனக்காக ஒரு சிக்கன நடவடிக்கையையும் அவர் மேற்கொண்டார்.
பெங்களூரில் உள்ள ஒரு லாட்ஜில் அன்று படப்பிடிப்பு. செட்டுக்கு வந்த சிவாஜி சார் பேச்சுவாக்கில் அங்கிருந்தவர்களிடம், “எவ்வளவு வாடகை?” என்று கேட்டிருக்கிறார்.
அவர்கள் ஒருநாள் படப்பிடிப்புக்கு 25 ஆயிரம் ரூபாய் வாடகை என்று சொல்லியிருக்கிறார்கள்.
உடனே சிவாஜி சார், “இந்த இடத்தோட ஓணர் எங்கே?” என்று கேட்டதோடு அப்படியே ‘புலி எங்கே?’ என்று என்னையும் தேடியிருக்கிறார்.
நான் அங்கில்லை என்று தெரிந்ததும், லாட்ஜின் மானேஜரிடம் ”இந்த சின்ன இடத்துக்கு ஒரு நாள் வாடகை 25 ஆயிரம் என்பது ரொம்ப ரொம்ப அதிகம்.
10 ஆயிரம்தான் கொடுக்கலாம். உங்க முதலாளி கிட்ட நான் சொன்னேன் என்று சொல்லு. அவர் வாடகையை குறைக்கலேன்னா நான் நடிக்கிறதா இல்லே” என்று கூறியிருக்கிறார்.
உடனடியாக லாட்ஜின் உரிமையாளருக்கு தகவல் சொல்லப்பட்டு, அவரும், சிவாஜி சாரே கூறுகிறார் என்பதால், 10 ஆயிரம் வாடகைக்கு கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
இந்த தகவல் எனக்கு தெரியவந்தபோது, ‘என் மீது கொண்ட அக்கறையில்தான் சிவாஜி சார் இப்படி செய்திருக்கிறார்’ என்பதை உணர்ந்து கொண்டேன்.
என் மீது அவருக்கு எப்பேர்ப்பட்ட அன்பு இருந்திருந்தால் இப்படி முயற்சி மேற்கொண்டிருப்பார்!
‘மன்னவரு சின்னவரு’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதுதான், அவருக்கு சளித்தொந்தரவு இருந்தது எனக்குத் தெரியும்.
தினமும் ’ஆக்சிஜன் டபிளேசர்’ மூலம் தொண்டை சளியை அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்படிச் செய்யாவிட்டால் நுரையீரலில் கிருமிகள் சேர்ந்துவிடும் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
“எனக்காக இப்படி கஷ்டப்படுகிறீர்களே?” என்று கேட்டபோது, “யார் யாருக்கோ பண்றேன். என்னை நேசிக்கிற உனக்காக இந்த சின்ன கஷ்டத்தைத் தாங்கமாட்டேனா புலி” என்று திருப்பிக் கேட்டார்.
பழகிவிட்டால் ஆத்மார்த்தமான அன்பைத் தருவதில் சிவாஜி சாருக்கு இணை அவர்தான். நாமாக அவரை சந்திக்காவிட்டாலும் அவராக நம்மை தொடர்பு கொண்டு நட்பு பாராட்டுவார்.
இப்படித்தான் ஒருநாள் நான் காரில் நந்தனம் தேவர் சிலை அருகில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது சிவாஜி சாரின் உதவியாளரும் டிரைவருமான முருகன், “சிவாஜி சார் உங்களை சந்திக்க விரும்புகிறார். உடனடியாக போனில் தொடர்பு கொண்டு பேசுங்கள்” என்றார்.
உடனடியாக நான் போனில் சிவாஜி சாரை தொடர்பு கொண்டேன்.
என் குரலைக் கேட்டவர், “புலி, எங்கிருக்கே?” என்று கேட்டார். “நந்தனம் பக்கம் காரில் வந்து கொண்டிருக்கிறேன்” என்றேன்.
“நேரா இங்கே வர்றே! என் கூட சாப்பிடறே! எவ்வளவு நேரத்தில் வருவே?” என்று கேட்டார்.
“5 நிமிஷத்தில் வந்துடறேன்” என்றேன்.
இதைத்தொடர்ந்து என் கார் நேராக போக் ரோட்டில் உள்ள சிவாஜி சார் வீட்டுக்கு போனது.
நான் போகும்போது சிவாஜி டைனிங் டேபிளில் உட்கார்ந்து இருந்தார். அவருடன் சிங்கப்பூர் டி.டி. துரை என்பவரும் இருந்தார். (அவரை சிவாஜி சாரே எனக்கு அறிமுகப்படுத்தினார்).
மூவருமாய் மதிய உணவருந்துகிறோம். சாப்பிட்டு முடித்ததும் டி.டி.துரை கிளம்புகிறார். அவர் போனதும் அதுவரை இயல்பாய் காணப்பட்ட சிவாஜி சாரின் முகத்தில் திடீரென உற்சாகம் தொலைந்து போனது.
அப்போது அவரது மகள் வயிற்றுப் பேத்தியின் கணவர் (சுதாகரன்) ஜெயிலில் இருந்தார்.
அதுபற்றி பேசிய சிவாஜி சார், “புலி! இந்த சூழல்ல என்னை கடவுள் ஏன்தான் இன்னும் வெச்சிருக்கார்ன்னே தோணுது.
குழந்தைகள் முகத்தைப் பார்க்க முடியலை. நிம்மதி இல்லாம இருக்காங்க. நான் எதைச்சொல்லி அவங்களை சமாதானப்படுத்துவேன்? இவங்களுக்குக்கூட எதுவுமே செய்யமுடியாம வாழறதைவிட போய்ச்சேரலாம்.
அண்ணன் எம்.ஜி.ஆர். கொடுத்து வெச்சவரு. நல்ல பேரு, புகழ் செல்வாக்கோட போய் சேர்ந்தாரு. நான்தான் அந்த பஸ்ஸை ’மிஸ்’ பண்ணிட்டேன்” என்றார். சொல்லும்போதே குரலில் அத்தனை விரக்தி.
நான் அவரை என்வரையில் சமாதானப்படுத்தினேன். “உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லவிதமாக நடக்கும் சார்” என்று சொன்னேன்.
“என்னமோ புலி! இதையெல்லாம் உங்கிட்ட சொல்லணும்னு தோணிச்சு. ஏதோ கடவுள் கண்ணைத் தொறந்தா சரி” என்றவர், “நான் வரட்டுமா?” என்று ஓய்வெடுக்க மாடிக்கு புறப்பட்டார்.
அப்போதுகூட என் மனதில் சின்னதாய் ஒரு திருப்தி. நடிப்புக்கே திலகமானவர், கலைப் பொக்கிஷமாக விளங்குபவர், தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைக்க ஒரு சுமைதாங்கியாக என்னைக் கருதினாரே! அந்த மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பினேன்.
இது நடந்து 15 நாள் கழித்து எனக்கு டைமண்ட் பாபுவிடம் இருந்து போன்.
“சிவாஜி சார் சீரியசான நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்” என்று கூறியவர், என்னை வந்து பார்த்துவிட்டுப் போகும்படியும் சொன்னார்.
அதிர்ந்து போன நான், அப்போதே காரில் அப்பல்லோ பறந்தேன். சிவாஜி சார் ‘ஐசியூ’ வில் (தீவிர கண்காணிப்பு பிரிவு) அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ராம்குமார் அங்கிருந்த சிவாஜி குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறேன்.
அப்போது ராம்குமார் என்னிடம் உடைந்த குரலில் “அப்பாவின் இறுதி மூச்சு அடங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம்தான் இருப்பார்” என்று சொல்ல,
நான் மனம் கேட்காமல் பதற்றமாய் சிவாஜி சார் இருந்த ‘ஐசியு’வுக்குள் போக ராம்குமாரை அழைக்கிறேன்.
“எனக்கு சக்தி இல்லை சார்!” என்று அவர் கூற, பிடிவாதமாக அழைத்துக் கொண்டு போகிறேன்.
தனது ஒப்பற்ற நடிப்பால் சரித்திரம் படைத்தவர். உலகமே திரும்பிப் பார்க்க வைத்த மாபெரும் கலைச்சக்கரவர்த்தியின் இறுதி மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறேன்.
தன் தந்தையின் அந்த கடைசிக் கட்டத்தை காண மனம் தாங்காததால், அழுதுகொண்டே ராம்குமார் அறையில் இருந்து வெளியேறினார்.
நான் மட்டும் நிற்கிறேன். சில நொடிகளில் நடிப்பின் இமயத்தின் இறுதிமூச்சு, கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி முடிகிறது. இதைப் பார்த்த ஒரே துர்பாக்யசாலி நான்தான்.
சிவாஜி சாரை அன்னை ராஜாமணி அம்மையார் ஈன்றெடுத்த அந்த வினாடியில் தன் குழந்தையின் மூச்சுக்காற்றை எப்படியெல்லாம் சுவாசித்து மகிழ்ந்திருப்பார்.
அந்த குழந்தை கலைத்தாயின் தவப்புதல்வனாகி 70 வயது கடந்த நிலையில் இன்று இறுதி மூச்சை நிறுத்திக் கொள்வதை பார்க்கும் நிலைக்கு ஆளான நான் துர்பாக்கியசாலிதானே.
துயரம் நெஞ்சையடைக்க, கண்கள் ஆறாகப் பொங்க அவர் பாதம் தொட்டு வணங்கி அறையை விட்டு வெளியே வந்தேன்.
ஒரு சகாப்தம் அமரத்துவம் ஆனதை பார்க்க நேர்ந்த அந்த சோகத்திலும், சிவாஜி சார் என் மீது வைத்திருந்த அன்புதான் இந்த நேரத்தில் என்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதையும் எனக்குள்ளாக உணர்ந்தேன்.
சிவாஜி சார் காலமாகி 41-வது நாளில் அவருக்கு மத்திய அரசு சிறப்புத் தபால் தலை வெளியிட்டது.
பிரமோத் மகாஜன் தலைமையில் பிரபல இந்தி நடிகர் சத்ருகன்சின்கா இந்த தபால் தலையை வெளியிட்டார்.
சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த இந்த விழாவில், கட்சி பாகுபாடின்றி அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டது இன்னொரு சிறப்பு.
இது சிவாஜி என்ற மாபெரும் கலைஞருக்கு கிடைத்த சிறப்பு.
இந்த விழாவில் சிவாஜி சாரின் நடிப்பு வரலாற்றை வைகோ விவரித்த அழகு, ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கரகோஷத்தைப் பெற்றது”
நன்றி: நடிகர் திலகம் விசிறிகள் முகநூல் பக்கம்