கோடரி கொண்டு தான் பிளக்க நேரிடும்!

தமிழரசுக் கழகத்தின் தலைவராக இருந்த தமிழறிஞா் ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு, அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நாடகக் கலைஞர் டி.கே.சண்முகம் எழுதிய அந்தக் காலக் கடிதம்.

பேரன்புடைய அண்ணா வணக்கம்!

தங்கள் 03.06.1947 தேதி அன்று அனுப்பிய கடிதம் கிடைத்தது. உடனே பதில் எழுத இயலவில்லை. இளமையிற் பிரிந்து சென்ற தங்கள் மைத்துனரின் பிரிவுக்கு எனது ஆழ்ந்த வருத்தம்.

என்ன காரணத்தாலோ திரு.வி.க அவர்களின் உருவம் திகழும் ‘முரசு’ இதழ் நமக்குக் கிடைக்கவில்லை. இன்னும் வெளிவரவில்லை என்று நினைத்தேன்.
அதற்குள் கடைவீதியில் பார்த்ததாக நண்பர் கூறினார். வாங்கி வருவதற்குள் பிரதிகள் செலவாகிவிட்டன. அனுப்பச் செய்யுங்கள்.

முரசு, திராவிட நாடு மோதலைப் பற்றித் தாங்கள் எழுதியுள்ள விபரங்களைப் படிக்கும்போது உண்மையாகவே உள்ளம் வேதனைப்படுகிறது.

“உதைத்த காலுக்கு முத்தம் இடுவது போல்” என்ற பதப்பிரயோகம் தோழர் அண்ணாத்துரை அவர்கள் நினைப்பதுபோல் கடுமையான தாக்குதலுக்குாியதாக எனக்குத் தோன்றவில்லை.

அவருக்கு உண்மையாகவே வேதனை அளித்திருந்தாலும் இருக்கலாம். அதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்றைய தபாலில் ‘நகர தூதன்’ இதழ்கள் இரண்டை அன்பர் திருமலைசாமி அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்.

ம.பொ.சி

முரசு திராவிட நாடு மோதலைப் பற்றி விரிவாக எழுதி இருப்பதாகத் தெரிகிறது.
வேலை மிகுதியால் நாளைதான் அமைதியாய் படிக்க முடியும். மேற்போக்காகப் பார்த்தேன். பொதுவாகத் தமிழக பிரிவினைக்காக எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

தங்கள் அலுவலகத்திற்கும் வந்திருக்கலாம். தோழர் அண்ணாதுரை அவர்களுக்கு நீண்ட நாட்களுக்குப் பின் இன்று இதுபற்றி நான் ஒரு கடிதம் வரைந்துள்ளேன்.
இன்றைய நிலை மிக நெருக்கடி என்பது தெளிவாகப் புரிகிறது.

தமிழகத்தின் விடுதலைக்காக எல்லாக் கட்சிகளிலும் ஒற்றுமை முன்னணி ஏற்படுத்திக் கொண்டு மற்ற வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு முனைந்து நின்றால்தான் வெற்றிப் பாதையில் செல்ல முடியும் என எனக்குப்படுகிறது.

இல்லையேல் இன்று எளிதாகப் பிடுங்கியெறியும் நிலையிலுள்ள முட்செடியைக் கோடரி கொண்டு பிளக்க வேண்டிதான் நேரிடும்.
டி.கே.சண்முகம்

தங்கள் வழி நேர்மையானது. ஒன்றுபட்ட முன்னணிக்காக எவ்வளவு முயன்றாலும் இழுக்கில்லை.

தமிழகம் தங்களை இம்முயற்சியில் ஊக்குவிக்கும். வெற்றி உறுதி 11-ம் தேதி கோவை பயணம். படப்பிடிப்புக்காகத்தான். திரும்பும் தேதி அங்கு போய்த்தான் தெரியும்.

அன்பு
டி.கே.சண்முகம், திண்டுக்கல்.

Comments (0)
Add Comment