இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாய்ப்பு எப்படி?

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சித்தலைவர்கள், தங்கள் ஜாகையை ஈரோட்டுக்கு மாற்றி, மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காரணம் அனைவரும் அறிந்ததே.

வரும் 27-ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அந்த தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்தப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசுவும், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும், தே.மு.தி.க. சார்பில் ஆனந்தும் போட்டியிடுகிறார்கள்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பல்வேறு ரூபங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான இரண்டாண்டு கால தி.மு.க. ஆட்சியை எடைபோடும் தேர்தலாக இது அமைந்துள்ளது.

இந்தத் தேர்தலில் தி.மு.க. வெல்வது ஸ்டாலினுக்கு கவுரவப்பிரச்சினை.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், ஒரு முன்னோட்டமாக தமிழக மக்களின் மனதை அறிந்து கொள்ளும் தேர்தலாகவும் இது பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக முடிசூட்டிக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கும், இந்த தேர்தல் அமிலச் சோதனையாகும்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் நிறுத்தப்பட்டுள்ள தென்னரசு, எடப்பாடி பழனிசாமியின் வேட்பாளர் என்பதால், தென்னரசுவின் வெற்றியே அ.தி.மு.க.வில் எடப்பாடியின் இடத்தை தீர்மானிக்கும்.

அதிர்ச்சியில் தி.மு.க.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் தொடங்கிய சமயத்தில், இந்தத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி மிக எளிதாக வென்றுவிடும் என்றே அனைவராலும் கணிக்கப்பட்டது.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்ததும், அவர்களில் யாருக்கும் இரட்டை இலைச்சின்னம் கிடைக்காது என்ற சூழல் நிலவியதாலும், ஆளும் தரப்பு உற்சாகமாக இருந்தது.

ஆனால், எதிர்பாராத திடீர் திருப்பமாக இரட்டை இலைச் சின்னம், எடப்பாடி அணிக்கு ஒதுக்கப்பட்டது. ஓ.பி.எஸ். தான் நிறுத்திய வேட்பாளரை வாபஸ் பெற்றார். இதனால் போட்டி கடுமையானது. அதிர்ச்சியில் உறைந்தது தி.மு.க.

களம் சூடானதால், 20 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள், இளங்கோவனுக்கு ஆதரவாக தொகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தவிர, ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டுகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளோடு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் இடம் பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் கமல் கட்சி 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை பெற்றுள்ளது. அதிகாரபலம், பணபலம், ஆட்கள் பலம் என இளங்கோவன் பக்கம் அசுர பலம் உள்ளது நிஜம்.

அ.தி.மு.க.வின் பலத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. அ.தி.மு.க.வின் கோட்டை என வர்ணிக்கப்படும் கொங்கு மண்டலத்தின் பிரதான பகுதியாக விளங்குவது ஈரோடு கிழக்குத் தொகுதி.

இந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள கவுண்டர் வகுப்பை சேர்ந்தவர், அதிமுக. வேட்பாளர் தென்னரசு என்பது, அந்தக் கட்சியின் வெற்றிக்கு வலு சேர்க்கிறது.

இளங்கோவன் சார்ந்த நாயக்கர் சமூகத்தினர், மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் நான்காவதாகவே உள்ளனர்.

இங்குள்ள மக்களுக்கு சோறு போடும் பிரதான தொழில், விசைத்தறித்தொழில். மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதால், விசைத்தறி உரிமையாளர்களும், நெசவாளர்களும் ஆளும் கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர், தே.மு.தி.க. ஆகிய நான்கு கட்சிகள் களத்தில் இருந்தாலும், உண்மையான போட்டி, அ.தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் தான்.

கடந்த தேர்தலில் 11 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய நாம் தமிழர் கட்சி, அதே அளவுக்கு வாக்குகளை பெறுமா என்பது சந்தேகம் தான்.

விஜயகாந்த் கட்சி, ‘நாங்களும் இருக்கிறோம்’ என்பதை தமிழக மக்களுக்கு காட்டுவதற்காக தேர்தலில் போட்டியிடுகிறதே தவிர, காப்பீடுத் தொகையைப் பெற இயலாது என்பதே கள நிலவரம்.

வாக்காளர் விவரம்:

ஆண்கள்:  1,11,025
பெண்கள்:  1,16,497
மூன்றாம் பாலினம்: 25
மொத்தம்: 2,27,547
ஆண் வாக்காளர்களை விட, இந்தத் தொகுதியில் 5,472 பெண் வாக்காளர்கள் கூடுதலாக உள்ளனர்.

கடந்த தேர்தல்கள்:

கடந்த இரு தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் பெற்ற ஓட்டு விவரங்களை காணலாம்.

2016 தேர்தல்:
கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.) வெற்றி
64,897
வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.)
57,085
பொன்சேர்மன் (தே.மு.தி.க.)
6,776

2021 தேர்தல்:

திருமகன் ஈவெரா (காங்கிரஸ் ) – வெற்றி
67,300
யுவராஜ் (த.மா.கா.)
58,396
கோமதி (நாம் தமிழர்)
11,629

இலைக்கு வாய்ப்பு எப்படி?

காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன், தனது வெற்றிக்கு முழுக்க முழுக்க தி.மு.க.வையே நம்பி இருக்கிறார்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் வெறும் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வி அடைந்தார்.

இரண்டாண்டு கால ஆளுங்கட்சி மீதான அதிருப்தியால், இந்த முறை வெற்றிக்கனி ருசிக்கலாம் என உறுதியாக நம்புகிறது அந்தக் கட்சி.

இரு கட்சி தலைவர்கள், மேற்கொள்ளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தான் யாருக்கு வெற்றி என்பது முடிவு செய்யப்படும்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment