தமிழ் சினிமா காட்டிய காதல் களங்கள்!

‘காதல் ஒரு பூ மாதிரி; செடியில இருந்து ஒரு பூ உதிர்ந்துட்டா அதை மறுபடியும் ஒட்ட வைக்க முடியாதுப்பா’ என்று ‘பூவே உனக்காக’வில் உருகிய விஜய், ‘வாரிசு’வில் ‘அதை கம் போட்டு ஒட்ட வச்சுக்கலாம்பா’ என்று சொன்னதை கால மாற்றம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு பெண்ணிடம் ஆண் தன் காதலைச் சொல்வதற்குள் கிளைமேக்ஸ் வந்துவிடும் படங்கள் பல பார்த்திருக்கிறோம்.

இன்று ஒரு ஆணும் பெண்ணும் எத்தனை முறை வேண்டுமானாலும் காதலிக்கலாம் என்று சொல்லும் அளவுக்குத் திரையில் காதல் கதைகள் பரிணாமம் கண்டிருக்கின்றன.

இந்த விஷயத்தில் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்ற கண்ணோட்டமும் பெருகியிருக்கிறது. ஆனாலும் தமிழ் சினிமாவில் காதலைக் கையாளும் விதம் மட்டுமல்ல, அது முகிழ்க்கும் களங்களும் கூடப் பெரிதாக மாறவில்லை.

காதலிக்க ஓரிடம்!

காதலிக்க மனம் இருந்தால் போதும், இடம் மடம் எல்லாம் எதற்கு என்று தோன்றலாம். சர்வநிச்சயமாக காதல் செய்ய ஒரு களம் வேண்டும்.

அந்த ஓரிடத்தில் திரும்பத் திரும்ப பார்ப்பதாலேயோ, பேசுவதாலேயோ, பழகுவதாலேயோ காதல் முளைக்க வாய்ப்புண்டு.

அருகாமையில் அல்லது அண்மையில் இருக்கும்போது வரும் நெருக்கம் என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இதனை ‘Proximity’ என்று சொல்வார்கள்.

அப்படிப் பார்த்தால், ஒரே வீட்டில் வசிக்கும் இரண்டு பேர் காதலிக்க வாய்ப்புண்டு.

மாமா பையன், அத்தை பொண்ணு என்றோ, நாயகனின் சகோதரி மகள் என்றோ இந்த காதல் கதைகள் நீளும்.

அறுபதுகளில் வந்த படங்களில் அனேகம் இந்த வகையறாதான்.

‘பூவெல்லாம் உன் வாசம்’ படத்தில் இரண்டு நண்பர்களின் குடும்பங்கள் ஒரே வீட்டில் வசிப்பது போலவும், அவர்களது வாரிசுகளுக்குள் காதல் மலர்வது போலவும் கதை அமைந்திருக்கும்.

ஒரே வீடாக இல்லாமல், அருகருகே அசிக்கும் இருவர் காதல் ஜோடிகளாவது இன்னொரு வகை. எம்ஜிஆர், சிவாஜி காலத்துப் படங்கள் பலவற்றில் இதனைக் காண முடியும்.

தங்கமான ராசா, செண்பகமே செண்பகமே, கரகாட்டக்காரன் உட்படப் பல ராமராஜன் படங்கள் இதே பாணியில் அமைந்தவை.

ஒருவருக்கொருவர் எலியும் பூனையுமாக இருப்பார்கள். ஆனாலும், காதலிக்கும் விஷயத்தில் மட்டும் இருவரும் ஒரே கோட்டின் மீது நிற்பார்கள்.

குறைந்த பட்சமாகப் பெண் மட்டும் ஒருதலையாகக் காதலிப்பார்; அதன்பின் நாயகனும் காதலிக்கத் தொடங்குவார்.

விஜய் நடித்த ‘பத்ரி’ உட்படப் பல தமிழ், தெலுங்கு படங்களில் இப்படிப்பட்ட காதல் கதைகள் நிறைய.

பக்கத்து வீடு என்றில்லாமல் எதிர் வீடு, மாடி வீடு, அபார்ட்மெண்ட் என்று இந்த காதலை பல கிளைகளாகப் பிரிக்க முடியும்.

‘இன்று போய் நாளை வா’ எதிர்த்த வீட்டுக்கு உதாரணம் எனில், ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’, ‘கிளிஞ்சல்கள்’ போன்றவை பக்கத்து வீட்டு காதலுக்கு உதாரணம்.

மாடி வீட்டு காதலுக்கு இருக்கவே இருக்கு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.

‘சும்மாவே சினிமாக்காரங்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்க மாட்டேங்கிறாங்க’ என்று திரைத்துறை கலைஞர்கள் புலம்பும் அளவுக்கு சூப்பராக அமைந்தது இப்படம். ‘அந்த 7 நாட்கள்’ கூட இதே வகையறாதான்.

அபார்ட்மெண்ட் காதலுக்கு ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘மொழி’ மாதிரி படங்களைச் சொல்ல முடியும்.

அலுவலகக் காதல்கள்!

ஒரே அலுவலகத்தில் கிளார்க் டைப்பிஸ்டைக் காதலிப்பதும், மேனேஜர் செகரட்டரியைக் காதலிப்பதும் 80களில் வெளியான தமிழ் படங்களில் சகஜமான விஷயம்.

‘கல்யாணப் பரிசு’வில் சரோஜாதேவியை விரும்புவதாக நாகேஸ்வர ராவ் தெரிவிப்பதும் கூட இந்த வகையில் சேரும்.

அதற்கு முன்னர், பெரும்பாலான படங்களில் அலுவலகத்தில் முகிழ்க்கும் காதல்களைக் காட்டியதில்லை. ‘அவள் அப்படித்தான்’ போன்ற படங்கள் எண்பதுகளின் தொடக்கத்தில் இதனைச் சாத்தியப்படுத்தியிருக்கின்றன.

தொண்ணூறுகளில் இந்த வழக்கம் காணாமல் போனாலும், இரண்டாயிரத்துக்குப் பின்னர் ஐடி அலுவலகங்களைக் காட்டுகிறேன் பேர்வழி என்று இந்த காதலை உயிர்ப்பித்தார்கள் நம் இயக்குனர்கள்.

‘யாரடி நீ மோகினி’, ‘லீலை’, ‘அனேகன்’ என்று இதற்கும் அனேக உதாரணங்களைச் சொல்ல முடியும்.

பயணம் தரும் நேசம்!

பேருந்து, ரயில், விமானம், கப்பல் என்று விதவிதமாகப் பயணிப்பதன் வழியே நேசத்தைக் கண்டெடுத்திருக்கிறது தமிழ் சினிமா.

‘பார்த்தேன் ரசித்தேன்’ தொடங்கி ‘அட்டகத்தி’, ‘சுந்தரபாண்டியன்’ என்று பல படங்கள் பேருந்து பயணத்தில் துளிர்க்கும் காதலைக் காட்டியிருக்கின்றன.

‘தொடரி’, ‘வாரணம் ஆயிரம்’, ‘அலைபாயுதே’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ என்று ஒரு சில படங்கள் ரயில் காதலைக் காட்டியிருக்கின்றன.

விமானப் பயணம் கொஞ்சம் காஸ்ட்லி என்பதால், ‘மாநாடு’ போன்று சில படங்களே அந்த கணக்கைத் தொடங்கியிருக்கின்றன.

‘டைட்டானிக்’ பட்ஜெட் தமிழ் படங்களுக்குக் கட்டுப்படியாகாது என்பதால், கப்பல் பயணத்தைப் பற்றி கனவிலும் நம்மவர்கள் யோசிப்பதில்லை.

அதேநேரத்தில் பரிசல், படகுப் பயணத்தில் நிகழும் காதலைக் காட்டியிருக்கிறார்கள். இன்னும் கார், பைக், சைக்கிள், மாட்டு வண்டி என்று பலவாறு வாகனங்களை முன்வைத்து முளைக்கும் காதலைப் பார்க்க முடியும்.

நிஜ வாழ்க்கையில் திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள், உணவகங்கள், பப் என்று பல இடங்களில் காதல் பிறக்கிறது. அவ்வப்போது அந்த ஏரியாக்களை தொடும் வழக்கம் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.

பள்ளி, கல்லூரிக் காதல்கள்!

அறுபதுகளில் வெளியான படங்களில் கல்லூரிக் கால காதலே சொல்லப்பட்டது. சிறு பிள்ளைகளைக் கெடுத்துவிடக் கூடாது என்ற பயம் அதன் பின்னிருந்தது.

தொண்ணூறுகளில் ராம்கி, முரளி போன்றவர்களைத் திரையில் காட்ட கல்லூரிக் காதல்கள் உதவியாக இருந்தன.

அப்போது அவர்களது காதலுக்கு உதவிய விவேக், சார்லி, சின்னிஜெயந்த் போன்றவர்கள் அஜித், விஜய் வருகைக்குப் பிறகும் ‘விஆர்எஸ்’ வாங்கவில்லை.

அதனாலேயே ‘காதலுக்கு மரியாதை’, ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ போன்ற பல படங்களில் கல்லூரி செல்லும் சித்தப்பாக்களாகவும் மாமாக்களாகவும் இவர்கள் தோன்றியிருந்தனர்.

எழுபதுகளின் பிற்பாதியில் இத்தாலிய, பிரெஞ்ச் சினிமா பாதிப்பில் இங்கும் பருவ கால காதல்கள் திரையில் காண்பிக்கப்பட்டன.

ஸ்ரீதரின் ‘ஓ மஞ்சு’, பாலு மகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’, பாரதிராஜாவின் ‘அலைகள் ஓய்வதில்லை’ என்று பதின்ம வயது காதல்களைச் சொன்ன படங்கள் ஏராளம்.

இதனால், பள்ளிக்குச் செல்வதே காதலிக்கத்தான் என்ற சிந்தனையில் படிப்பில் கோட்டை விடும் அளவுக்கு யதார்த்தம் சீர்கெட்டது.

தொண்ணூறுகளுக்கு பிறகு, பதின்ம வயதுக் காதலை மையப்படுத்திய படங்கள் என்றாலே ‘ஏ’ சர்ட்டிபிகேட் பெற்றிருக்கும் என்ற நியதி உருவானது.

செல்வராகவன் அதிகாரப்பூர்வமற்ற இயக்குனராக அறியப்படும் ‘துள்ளுவதோ இளமை’ மீண்டும் அந்த வகை காதலுக்குத் திரையில் உயிர் கொடுத்தது. 3, களவாணி உட்பட இன்றும் இதனைத் திரையில் காணலாம்.

தற்போது வெப் சீரிஸ்கள் இந்த இடத்தைக் கையகப்படுத்தியிருக்கின்றன. ‘96’ போன்ற வெகு சில படைப்புகளே கண்ணியத்துடன் இக்காதலைக் காட்டியிருக்கின்றன.

காதல் களங்கள்!

எண்பதுகளில் டைப்ரைட்டிங் இன்ஸ்டியூட் என்பது காதலிப்பதற்கான இடம் என்றாக்கியதில் ’விதி’ படத்திற்கு முக்கிய இடம் உண்டு.

இன்னும் நூலகம், மருத்துவமனை, கோயில் உள்ளிட்ட மதத் தலங்கள், சந்தை, அங்காடி, என்று காதல் அரும்பப் பல களங்களைக் காட்டியிருக்கிறது தமிழ் சினிமா.

இவை தவிர பாட்டு, நடனம் உள்ளிட்ட கலைகளைக் கற்குமிடங்களில் முகிழ்ப்பதும் கல்விக்கூட காதலில் சேர்ந்துவிடும்.

ராங் நம்பர் அழைப்பினால் காதல் உருவாவதன் பரிணாம வளர்ச்சியாகத்தான் இ-மெயில், வாட்ஸ்அப் காதல்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இவை தாண்டி வேறென்னவெல்லாம் இருக்கிறது என்று யோசித்ததன் பயனாக, இன்று பலப்பல காதல் களங்களை ரசிகர்களுக்குக் காட்டுகின்றனர் இயக்குனர்கள்.

நாளை விண்வெளிப் பயணத்தைப் பற்றிப் படமெடுக்கும்போது ராக்கெட் வேகத்தில் ஒரு காதல் கதையைச் சொல்லும் சாத்தியமும் அருகிலுண்டு.

அருகருகே ஒரு ஆணும் பெண்ணும் இருக்க நேரும்போது தானாக காதல் முளைப்பதாகச் சொல்கின்றன தமிழ் திரைப்படங்கள். நிஜ வாழ்வில் ஆணும் பெண்ணும் அணுக்கமாகப் பழக நேர்வது காதலாக கருதப்படுவதற்கும் இதுதான் காரணமோ?

சுவர் இருந்தால் தான் சித்திரம் என்பது போல காதல் பழக ஒரு களம் வேண்டும். தமிழ் சினிமாவில் அப்படிக் காட்டிய களங்களில் ஒரு சிலவற்றைத்தான் இங்கே சொல்ல முடிந்திருக்கிறது. விடுபட்டவற்றை நீங்கள் பட்டியலிடலாம்.

அவற்றில் இருந்து புத்துணர்வூட்டும் ஒரு காதல் கதையை அடுத்த காதலர் தினத்தில் வழங்க நம் படைப்பாளிகளுக்கு அதுவே களம் அமைத்துக் கொடுக்கும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment