பாலினப் பாகுபாடு அகற்றும் சமத்துவக் காதல்!

காதலர் தினம் காதலர்களுக்கு மட்டுமானதா? 2கே கிட்ஸ்களை கேட்டால், இல்லவே இல்லை என்பார்கள்.

காதல் திருமணமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கணவன் மனைவியான பிறகு காதலைப் பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும் என்பார்கள்? காதலைப் பகிர்வது சரிதான்; அதே அளவுக்கு வீட்டு வேலைகளையும் ஆளுக்குப் பாதியாக பகிர்கிறார்களா என்ற கேள்வியை நோக்கித்தான் நாம் நகர வேண்டியிருக்கிறது.

கனவு வாழ்க்கை!

காதலர் தினம் நெருங்கும்போதெல்லாம் காதல் பற்றிப் பேசுவதைத் தவிர்க்க முடியாதது. காதல் பேச்சு எழும்போதெல்லாம் சமத்துவம் பற்றி குறிப்பிட வேண்டியதாகிறது.

ஆண் பெண் வேறுபாடுகளை உடைக்கும் விதமான சமத்துவக் காதல் குறித்த கனவுகள் எப்போதும் தன் சிறகுகளை விரித்தபடியே இருக்கிறது.

எப்போதும் அவை கனவுதானோ என்று எண்ண வைத்திருக்கிறது அகமதாபாதிலுள்ள இந்திய மேலாண்மை நிறுவனம் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வு.

ஐஐஎம்மை சேர்ந்த பேராசிரியர் நம்ரதா சிந்தர்கர், தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் காலப் பயன்பாட்டு சர்வேயினை அடிப்படையாக்க் கொண்டு இந்த ஆய்வைச் செய்துள்ளார்.

அதில், வீட்டு வேலைகளைச் செய்வதற்காக மட்டும் 15 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 7.2 மணி நேரம் செலவழிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

அதேநேரத்தில், தம் வீட்டு வேலைகளில் ஆண்கள் 2.8 மணி நேரத்தை மட்டுமே செலவழிப்பதாகக் கூறப்பட்டிருப்பது, கணவன் மனைவிக்கு இடையிலான காதலில் பாலின சமத்துவம் அறவே இல்லை என்பதைக் காட்டுகிறது.

சமைப்பது, துவைப்பது முதல் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிப்பது வரை அத்தனை வேலைகளும் பெண்களின் தலையில் ஏறுவதை இது அப்பட்டமாகக் காட்டுகிறது.

வீட்டிலும் வேலைகளைப் பார்த்து முடித்துவிட்டு அலுவலகம் செல்லும் பெண்களின் நிலைமை இதைவிட மோசம்.

மேற்சொன்ன காரணங்களால் அலுவலகத்தில் ஆண்கள் கூடுதலாக இரண்டரை மணி நேரம் செலவழிப்பது தெரிய வந்திருக்கிறது.

விறகு அடுப்பு, மின்சார வசதியின்மை போன்றவற்றால் இதர பெண்களைக் காட்டிலும் அதிகமான நேரம் வேலை செய்வதோடு, மிகக்குறைவான ஓய்வு நேரத்தைப் பெறும் நிலைக்கு ஆளாகின்றனர் சில பெண்கள்.

கணவருக்கு பணியிடத்தில் வேலை, நமக்கு வீட்டில் பல வேலைகள் என்று ‘ஹவுஸ்வொய்ஃப்’கள் நினைத்தாலும், கிராமப்புறமானாலும் நகர்ப்புறமானாலும் வீட்டிலும் அலுவலகத்திலும் இரட்டைக்குதிரை சவாரி செய்யும் பெண்களின் நிலைமை கவலைக்கிடமானது தான்.

அவர்களைப் பொறுத்தவரை காதலர் தினக் கொண்டாட்டங்கள் எல்லாம் நிறைவேறாத கனவுகள் தாம்.

தினசரி வாழ்வில் காதல்!

காதலர் தினத்தில் வாழ்த்து அட்டை, பரிசுப்பொருள், நினைவில் நிற்கும் உணவு, புத்துணர்வூட்டும் கேளிக்கைகள் என்பதாகவே ஜோடிகளின் கொண்டாட்டம் இருக்கும்.

சரி, அடுத்த நாள் என்ன நடக்கும்? வெறுமனே காதலர்களாக மட்டும் இருந்தால், குறிப்பிட்ட நேரத்தில் மீண்டும் சந்திப்பார்கள்; ஒன்றாகப் பொழுதைச் செலவழிப்பார்கள்.

மனமொத்த காதலாக இருந்தால் மட்டுமே, அந்த தருணங்கள் நினைவில் வைக்கத்தக்க வரவாக இருக்குமென்பது தனிக்கதை.

காதலர் தினம் கொண்டாடிய கணவன் மனைவியர் தத்தமது தினசரி அலுவல்களில் மூழ்கிப் போவார்கள். அலுவலக நேரம் முடிந்து, வீடு திரும்பும்போதுதான் அந்த உலகம் நினைவுக்கு வரும்.

பெண்களும் அப்படித்தான் என்றாலும், அலுவலகத்தில் இருந்து திரும்பும்போதே அடுத்த நாளைக்கான வேலைகளைத் திட்டமிடுவதே பெரும்பாலானோரின் வழக்கமாய் பார்க்க முடிகிறது.

ஹவுஸ்வொய்ஃப்களாக இருந்தால், வீட்டு வேலைகளை முடித்துவிட்டு டிவி சீரியல், இண்டர்நெட், மொபைல் அரட்டை, அருகில் உள்ளவர்களிடம் பேச்சு, கோயில் மார்க்கெட் என்று வெளியிடங்களுக்குச் செல்வது என்றிருப்பார்கள்.

பள்ளிக்குக் குழந்தைகளை அனுப்புவதில் இருந்து சாயங்காலம் அவர்களை வீட்டுக்குத் திரும்ப அழைத்து வருவது, ட்யூஷன் உள்ளிட்ட இதர பயிற்சிகளில் ஈடுபடுத்தச் செய்வது என்று ஒரு நாள் பொழுது கழியும்.

இந்த வேலைகளைத் திரும்பத் திரும்பச் செய்வதனால் மனச்சோர்வுக்கு உள்ளாவதும் நிகழும். வேலை பார்க்கும் பெண்களுக்கு அலுவலகப் பணியே ஒரு மருந்தாக மாறும்; மனச்சோர்வைப் பாதியாகக் குறைக்கும்.

இப்படியொரு சூழலில், தம்பதியருக்குள் காதல் மங்கிப் போகும் என்ற தகவல் காலம்காலமாக வாய்மொழியாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அப்படியிருக்க, காதலில் சமத்துவத்தை எங்கே எதிர்பார்ப்பது?

சமத்துவக் காதலைப் பற்றிப் பேசக் கூட முடியாது என்பதுதான் யதார்த்தம். அதைச் செயல்படுத்த, ஒரு தம்பதி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

இன்றும் சில வீடுகளில் சமைப்பது முதல் குழந்தைகளைக் கவனிப்பது வரை பல வேலைகளை ஆண்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

அதிக சுமை அழுத்தம் தந்துவிடக் கூடாது என்ற முனைப்பே இதனைச் செய்ய வைக்கிறது. இந்த ஆண்களின் எண்ணிக்கை சொச்சம் என்பதுதான் இந்த விவாதத்தையே கிளப்பியிருக்கிறது.

இதனாலேயே, வேலைக்குச் செல்லும் பெண்கள் பலர் வீடு திரும்பும்போது ஹோட்டல்களில் உணவு வாங்குவதை விரும்புகின்றனர். குறைந்தபட்சமாக குழம்பு போன்றவற்றை வாங்கும் வழக்கம் நகரங்களில் பெருகியிருக்கிறது.

சமைப்பதை விட பாத்திரங்கள் கழுவுவதை எரிச்சலாகக் கருதுவதுதான் இதன் பின்னிருக்கும் விஷயம். வார இறுதியில் சமைத்து, ரெஃப்ரிஜிரேட்டர் முழுவதும் அடுக்கி வைக்கும் வழக்கமும் இதனாலேயே உண்டாகியிருக்கிறது.

துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தான் நடக்கும்.

அன்றுதான் கேளிக்கைகளுக்கும் நேரம் ஒதுக்க முடியும் என்ற காரணத்தால், பல ஹோட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் வாரத்தின் இறுதி நாட்களில் களை கட்டுகின்றன.

வீட்டிலேயே உணவை டெலிவரி செய்யும் சேவைகளும் அந்நாட்களில் படுபிஸியாக இயங்கும். சாப்பாடு தவிர்த்து சலவை உட்பட இதர தேவைகளைப் பூர்த்தி செய்யும் வர்த்தகங்களும் அதேவீச்சில் செயல்படுகின்றன.

பணம் கொட்டிக் கிடந்தால் வீட்டு வேலைகளைச் செய்ய பணியாட்கள் கிடைப்பார்கள். ஓரளவுக்கு இருந்தால், தமது சுமையைக் குறைக்கும் அளவுக்குச் செலவழிக்கலாம்.

சுத்தமாக இல்லாதபோதுதான், வீட்டில் ரணகளமே நடக்கும். தினசரி வாழ்வில் காதலின் பங்கு எங்கிருக்கிறது என்று தேட வேண்டியிருக்கும்.

சமத்துவக் காதல் மலர..!

கணவன்மார்களிடத்தில் ஏற்படுத்த முடியாத மாற்றங்களைக் குழந்தைகளிடம் நிச்சயம் காண முடியும்.

அதற்கு எந்தக் குழந்தையானாலும் எல்லா வேலைகளையும் செய்யப் பழக்க வேண்டும். சமைப்பது பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய வேலையல்ல என்று புரிய வைக்க வேண்டும்.

‘தோசையம்மா தோசை’ பாடலில் அம்மாதான் சமைப்பார் என்று வரும் வரிகளை பாடிவிட்டு, அப்படித்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை என்றும் சொல்லித் தர வேண்டும்.

பெண்ணோ, ஆணோ ஒருவர் தடுமாறும் பட்சத்தில் இன்னொருவர் அந்தச் செயலில் துணை நிற்க வேண்டுமென்பதைப் புரிய வைக்க வேண்டும்.

இதன் மூலமாக அடுத்த தலைமுறைக்காவது காதலில் சமத்துவம் வேண்டும் என்பது பிடிபடும்.

காதல் திருமணங்கள்தான் என்றில்லை, நிச்சயிக்கப்பட்ட திருமணங்களிலும் சம்பந்தப்பட்ட ஜோடி மகிழ்ச்சிகரமாக வாழ தினசரி வாழ்வில் காதல் நிரம்புவது அவசியம்.

அதற்கு பொதுப்புத்தியில் பொதிந்துள்ள பாலினப் பாகுபாட்டை உடைத்தாக வேண்டும். காலம்தோறும் மாறிவரும் காதல் நியதி, இந்த மாற்றத்தையும் செயல்படுத்தும்!

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment