– ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், சீனா உட்பட சில நாடுகளில் மீண்டும் தொற்று அதிகரித்தது. உருமாறிய கொரோனா வைரஸ் பல நாடுகளில் பரவியது.
இதையடுத்து இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவுவதை தடுக்க சீனா, ஹாங்காங், கொரியா, தாய்லாந்து, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகள், கட்டாயமாக ‘கோவிட்-19’ பரிசோதனையை 72 மணி நேரத்துக்குள் செய்ய வேண்டும் என்றும் அதற்கான ஆவணத்தை ‘ஏர் சுவிதா’ என்ற இந்திய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கட்டுப்பாடு விதித்தது.
இந்நிலையில், இந்தக் கட்டுப்பாடுகளை ஒன்றிய சுகாதாரத்துறை தளர்த்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண், மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது எனவும் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 1,843 ஆக உள்ளது எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.