பிரபாகரன் குறித்த நெடுமாறன் அறிவிப்பும் பின்னணியும்!

“பிரபாகரன் நலமாக இருக்கிறார். அவருடைய குடும்பத்தினரின் அனுமதியோடு இந்தத் தகவலை வெளியிடுகிறேன். விரைவில் தமிழ் ஈழம் குறித்த அறிக்கையை அவர் வெளியிடுவார்”

– என்று தஞ்சையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் தமிழர் தேசிய இயக்கத் தலைவரான அவரோடு நீண்டகாலம் நெருங்கிய தொடர்பில் இருந்தவரான பழ.நெடுமாறன்.

தற்போதைக்கு இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பல்வேறு ஊடகங்கள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பலர் தங்களுடைய கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

பிரபாகரனுக்கு நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவரான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார். “விரைவில் மக்களுக்கு முன் அவர் தோன்றுவார்” என்றும் சொல்லியிருக்கிறார்.

இலங்கையில் முன்னாள் எம்.பி.யான சிவாஜிலிங்கமும் “பிரபகாரனின் உடல் கிடைத்ததாகச் சொன்ன இலங்கை அரசு அவருடைய உடலை என்ன செய்தது? எங்கு அடக்கம் செய்தது? அவருடைய அஸ்தியை ஏன் வெளியுலகிற்கு அறிவிக்கவில்லை?

பிரபாகரனின் பெற்றோரின் அஸ்தி சேகரிக்கப்பட்டுத் தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனால் பிரபாகரனின் அஸ்தியை இலங்கை அரசு தந்திருந்தால், அவருடைய பெற்றோரின் அஸ்தியுடன் ஒப்பிட்டு அது பிரபாகரனுடையது தானா என்பதை உறுதிப்படுத்தியிருக்க முடியும்.

ஆனால் இலங்கை அரசு இதுவரை அப்படிச் செய்யாத நிலையில் பழநெடுமாறன் தெரிவித்திருக்கிற தகவலை நம்புகிறோம்.

இந்தச் செய்தி உண்மை என்றால் இது இலங்கை அரசியலைத் தலைகீழாகப் புரட்டிப் போடும்.” என்றிருக்கிறார்.

பிரபகாரனை நேரில் சந்தித்திருக்கிறவரான கொளத்தூர் மணி போன்றவர்கள் நெடுமாறன் தெரிவித்திருக்கிற தகவலை மகிழ்வுடன் வரவேற்றிருக்கிறார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அண்மைக்காலத்தில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இலங்கையில் பல்வேறு அரசியல் மாற்றங்களும், மக்கள் கிளர்ச்சிகளும் தொடர்ந்த நிலையில் இப்படியொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் நெடுமாறன்.

பிரபாகரன் முன்பொருமுறை மறைந்ததாகச் செய்தி வெளியிட்ட போது, அவர் உயிருடன் இருப்பதாகச் செய்தி வெளியிட்டது நக்கீரன் இதழ்.

தற்போதும் அதைப் போன்று விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரன் நலமாக இருக்கிறார் என்கிற தகவலை வெளியிட்டிருக்கிறார் நெடுமாறன்.

கண்டிப்பாக இது உலகெங்கும் பரவியிருக்கிற ஈழத்ததமிழர்கள் மத்தியிலும், தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும் பெருத்த அதிர்வை ஏற்படுத்தும் என்றாலும், இலங்கை மற்றும் இந்திய அரசியல் இந்தச் செய்தி எந்தவிதமான அதிர்வுகளை ஏற்படுத்தும்?
அதற்கு முன் சில பின்னணித் தகவல்களை இங்கு மீண்டும் நினைவூட்ட வேண்டியதிருக்கிறது.

இலங்கை மண்ணில் தமிழர்களின் இனப்போராட்டம் நீண்டகாலமாக நீடித்து வந்திருக்கிறது. எம் தமிழர்கள் பலருடைய உயிர்களைக் காவு வாங்கியிருக்கிறது.

அதிலும் – 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் குவிக்கப்பட்ட தமிழர்கள் சுமார் நாற்பதாயிரம் பேரை இலங்கை அரசு கொன்று குவித்த பயங்கரத்தை மறக்க முடியுமா?

கொத்துக் கொத்தாக எத்தனை தமிழர்களின் உயிர்கள் பலியாயின?

நம்முடைய தமிழ்ப் பெண்களில் எத்தனையோ பேர் சொல்லவொண்ணாத பாலியல் வன்முறைகளையும், சித்திரவதைகளையும் அனுபவித்தார்கள்?

எவ்வளவு தமிழர்கள் காணாமல் போன பட்டியலில் சேர்ந்தார்கள்?

எத்தனை தமிழர்கள் வீடற்று, நாடு அற்றவர்களாக மாறினார்கள்?

பதுங்கு குழிகளும், ஷெல்களும், கொத்துக் குண்டுகளும், எந்நேரமும் மனதில் உறைந்திருக்கும் மரண பயமும், கலங்கடிக்கும் கதறல்களுமாக ஏன் தமிழர்களின் வாழ்க்கை மாறிப் போனது?

இந்த நூற்றாண்டில் நமக்குப் பக்கத்தில் உள்ள நாட்டில் இவ்வளவு உயிர்கள் – தமிழ் மொழி பேசுகிறவர்கள் என்கிற மொழியின வேறுபாட்டை மட்டும் முன்னிறுத்திக் கொல்லப்பட்டதைக் கேட்கும்போது, பன்னாட்டுத் துணையுடன் வேட்டையாடப்பட்டதை காட்சி ஊடகங்கள் அம்பலப்படுத்திய போது, நம்முடைய மனங்கள் பதைபதைத்தன. நெஞ்சுகள் விம்முகின்றன. நம் கண்கள் பனிக்கின்றன.

இதை முன்பே எதிரொலித்தவர் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரன்.
இனப்போராட்டம் துளிர் விட்டபோது “ஜெயவர்த்தனே உண்மையான பௌத்தராக இருந்திருந்தால், நான் ஆயுதம் ஏந்தியிருக்க நேர்ந்திருக்காது” என்று சொன்னவர் அவர் தான்.

“உலகின் எந்த ஒரு மூலையிலும் மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நிகழ்ந்த போதும், சிறிய தேசிய இனங்கள் நசுக்கப்படும்போதும், குரல் எழுப்பியும், தலையிட்டும் மனித தர்மத்தை வேண்டும் சர்வதேச சமூகம் ஈழத்தமிழரின் பேரவலத்தைக் கண்டும் மௌனம் சாதித்து வருவது எமக்கு வேதனையைத் தருகிறது” – இதைச் சொன்னவரும் பிரபாகரன் தான்.

எப்போதும் நம்பிக்கைத் துரோகத்தால் வீழ்ந்தவர்கள் அப்படியே சரிந்திருப்பதில்லை.
விழ வைத்த சூழல் மீண்டும் எழவும் வைக்கும்.

தற்போது இலங்கையில் அதற்கேற்ற சூழல் கனிந்திருக்கிறது. முன்பு தமிழர்கள் மட்டும் இலங்கை அரசுக்கு எதிராகப் போராடினார்கள்.

தற்போது சிங்கள மக்களும் எழுச்சியுடன் போராடுகிறார்கள். சிங்களத் தலைவர்கள் நாடு கடந்து போக வைத்திருக்கிறார்கள்.

போராட்டம் இனப்பாகுபாடுகளை மீறித் தற்போது கடந்திருக்கிற நிலையில் தான் பழ.நெடுமாறனின் பிரபகாரனின் இருப்பு குறித்த தகவல் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.

இலங்கை அரசியல் இனி எத்தகைய திசை நோக்கி நகரும்?

பிரபாகரனுக்கு மிக நெருக்கமான ஆலோசகராக இருந்தவரான ஆன்டன் பாலசிங்கம் பிரபாகரன் பற்றி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.

“இன்னல்களும், இடர்களும் எழுந்த நெருக்கடியான காலகட்டங்களில் தளராத நம்பிக்கையுடன் செயலாற்றுவது தான் பிரபாகரனின் ஆளுமையில் நான் கண்டு வியந்த அபூர்வமான குணாம்சம்”

சரி… பிரபாகரனே எதிர்பாராத சோதனைகளைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கலாமா?

“அழிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொழுதும் நாம் கொண்ட கொள்கையைக் கைவிடவில்லை”

“மக்களின் விடுதலை உணர்வை அடக்குமுறையால் அழித்துவிட முடியாது. உலக வரலாறு பகரும் உண்மை இது”

“இழப்புகளுக்கு அஞ்சினால் போரை நடத்த முடியாது. இழப்புகளை வளர்ச்சியின் ஈன்றுகோலாகக் கருத வேண்டும்”

“இழப்புகளும், அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும், அழிவுகளையும் சந்தித்துள்ளோம்.

அழிவுகள் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கி விட முடியாது”

“நாம் ஒருவரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது எமக்குத் துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம்”.

“இயற்கை என் நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி”
*
– மணா

Comments (0)
Add Comment