ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய சில நொடிகளே போதும். குறிப்பாக, கமர்ஷியல் பார்முலாவில் அமையாத படங்களுக்கு இது முற்றிலுமாகப் பொருந்தும்.
அப்படியொரு முடிவை நாமும் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒட்டுமொத்த உழைப்பைக் குவித்திருக்கிறது சுகுமார் அழகர்சாமி இயக்கியுள்ள ‘வர்ணாஸ்ரமம்’.
சாதியும் ஆணவக் கொலைகளும்..!
தமிழ்நாட்டில் நிகழும் ஆணவக் கொலைகளைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக, ஒரு வெளிநாட்டுப் பெண் (சிந்தியா) சென்னைக்கு வருகிறார். ஆணவக் கொலைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் அதற்குக் காரணமானவர்களையும் தேடிச் செல்கிறார்.
அவருக்கு ஒரு இளம்பெண் (வைஷ்ணவி ராஜ்), அவரது சகோதரர் மற்றும் ஒரு ஆட்டோ ஓட்டுநர் (ராமகிருஷ்ணா) உதவிகரமாக இருக்கின்றனர்.
முதலாவது கதையில், ஐஏஎஸ் ஆக வேண்டுமென்ற கனவோடு பயிலும் ஒருவரை (ஸ்ரீராம் கார்த்திக்) இடைநிலைச் சாதியைச் சேர்ந்த பெண் (குஹாசினி) காதலிக்கிறார்.
அப்பெண்ணின் தந்தை அடியாட்களை ஏவிக் காதலரைக் கொல்கிறார். அதன்பின், காதலரின் பெற்றோரைப் பேணிக் காக்கிறார் அந்தப் பெண்.
இரண்டாவது கதையில், கல்லூரியில் பயிலும் ஒரு ஊரைச் சேர்ந்த ஆணும் (வாசுதேவன்) பெண்ணும் (நிமி மேனுவல்) காதலிக்கின்றனர்.
அப்பெண்ணின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய அவரது சகோதரர்கள் தயாராக இருந்தாலும், உறவினர்களும் சாதி அமைப்புகளும் அவர்களைத் தடுக்கின்றன.
இப்படியொரு சூழ்நிலையில், அந்த பெண்ணை எரித்துக் கொன்ற குற்றத்திற்காகவே அவரது சகோதரர் சிறையிலடைக்கப்படுகிறார்.
உண்மையில், தன் சகோதரிக்கு என்ன நிகழ்ந்தது என்று அவர் சொல்வது சாதீயத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துகிறது.
மூன்றாவது கதையில், சம்பந்தமேயில்லாமல் ஒரு இளைஞனுடன் (விஷ்ணு பாலா) தனது மகளைச் (வந்தனா) சம்பந்தப்படுத்திப் பேசும் தாயின் ஆத்திரமே காதலுக்கு வித்திடுகிறது.
அவர்களது காதல் விஸ்வரூபமெடுக்க, இருவரையும் கொல்ல முயல்கின்றனர் பெண் குடும்பத்தினர்.
உயிருக்கு உத்தரவாதமில்லை எனும் நிலையில் அந்த ஜோடிக்கு அடைக்கலம் தருகிறது ஆவணப்படக் குழு. அவர்கள் இருக்குமிடம் தேடி வரும் பெண்ணின் தந்தை, உண்மை நிலையை அறிந்து சமாதானத்துடன் அவர்களை ஊருக்கு அழைத்துச் செல்கிறார்.
செல்லும் வழியில், மதுரை வீரன் கோயிலில் சாமி கும்பிடுகிறார். அப்பெண்ணின் தாய்க்கு அந்த தகவல் தெரியவரும்போது, அவர் மனதில் ரௌத்திரம் தாண்டவமாடுகிறது.
நான்காவது கதையில், பொதுவுடைமை பேசும் ஆட்டோகாரர், தான் ஏன் இப்படியிருக்கிறேன் என்று தன் வாழ்வை விவரிக்கிறார்.
தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என்று மூர்க்கத்தனம் காட்டும் ஒருவரால் ஒரு காதல் இணையின் வாழ்க்கை நாசமாகிறது.
காதலரின் கண் முன்னே அந்த காதலி பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார். அந்த நபரே தன் தந்தை என்கிறார். அந்த காதலர்கள் என்னவானார்கள் என்றும் சொல்கிறார்.
மேற்சொன்ன நான்கு ஜோடிகளையும் பற்றிய உண்மைகளை அறிந்தபிறகு, தனது படைப்பு மூலமாக சாதீய அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற அந்த வெளிநாட்டுப் பெண்ணின் நம்பிக்கை உறுதிப்பட்டதா அல்லது குலைந்ததா என்பதோடு படம் முடிவடைகிறது.
சாதி அமைப்பின் உக்கிரத்தையும் ஆணவக் கொலைகளுக்கான அடித்தளத்தையும் ஆவணப்படுத்தும் நோக்கில் முதலிரண்டு கதைகளும் திரையில் விரிகின்றன.
மூன்றாவது சமகாலப்போக்கைச் சித்தரிப்பதாகவும் நான்காவது சாதீய வன்மத்தின் எதிர்காலம் என்னவென்றும் சொல்கிறது.
அற்புதமான காட்சியாக்கம்!
வாசுதேவன் – நிமி மேனுவல், ஸ்ரீராம் கார்த்திக் – குஹாசினி, விஷ்ணு பாலா – வந்தனா, பிக்பாஸ் புகழ் அமீர் – உமா மகேஸ்வரி ஜோடிகளுடன் ராமகிருஷ்ணா, வைஷ்ணவி ராஜ், சிவ விஜய், தயாரிப்பாளர் சிந்தியா லூர்தே உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
சில காட்சிகள் மட்டும் மீண்டும் படம் பிடித்திருக்கலாமே என்று சொல்லத்தக்க வகையில் இருக்கின்றன.
அவசர கதியில் ஆக்கப்பட்டது அதற்குக் காரணமாக இருக்கலாம். அதையும் மீறி, இதில் நடித்துள்ள அனைவருமே சிரத்தையைக் காட்டியிருப்பது திரையில் தெரிகிறது.
ஏற்கனவே சொன்னது போல, நேர்த்தியான காட்சியாக்கமே ஓரிரு நிமிடங்களுக்குள் நம்மைப் படத்துடன் ஒன்றச் செய்துவிடுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் போல, ஒவ்வொரு பிரேமையும் செதுக்கியிருக்கிறது பிரவீணாவின் ஒளிப்பதிவு.
அதேநேரத்தில், காட்சியின் தன்மையைக் கொஞ்சம் கூட சிதைக்கவில்லை.
கா.சரத்குமாரின் படத்தொகுப்பு உத்திகள் சில காட்சிகளில் வெகு இலகுவாகச் சூழலைப் புரிய வைக்க உதவியிருக்கிறது.
ஆனால், சம்பந்தமேயில்லாமல் ராமகிருஷ்ணா சம்பந்தப்பட்ட காட்சியை இடைவேளைக்கு முன்னதாக ஏன் வைத்தார் என்றுதான் தெரியவில்லை.
புத்தமித்திரனின் கலை வடிவமைப்பு பல இடங்களில் பிரேமை அழகுபடுத்த உதவியிருக்கிறது. அதே நேரத்தில், கதையின் அடிப்படைத்தன்மையைக் காக்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.
ஒளிப்பதிவைப் போலவே இந்தப் படத்தில் ரசிகர்களைக் கவரும் இன்னொரு நுட்பம் இசையமைப்பு. மௌனத்திற்கு வழிவிட்டு மிகச்சில இடங்களில் மட்டும் பின்னணி இசையை வழங்கியிருக்கிறார் தீபன் சக்கரவர்த்தி.
‘கம்பு 30 டயரு 30’ பாடல் பறை இசையைத் தாங்கிவந்து ஆட்டம் போட வைக்கிறது. ‘மழைக்கால வெயிலாக’, ‘உனக்கும் எனக்கும் உறவை’, ’கொலை விழும் களம் இது’ என்று மிகச்சிறப்பான மெலடிகளை தந்து நம்மை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் தீபன். தொடர்ந்து இதே போன்ற வாய்ப்புகள் அவருக்குக் கிட்ட வேண்டும்.
நல்ல முயற்சி!
இயக்குனர் சுகுமார் அழகர்சாமி பொறுமையாகக் காத்திருந்து, தன்னையும் தன் படைப்பையும் கவனிக்கும்விதமாக ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்.
சாதீயத்தின் வேரைப் பிடித்து உலுக்கும் ஒரு படைப்பைக் காட்சிரீதியாகக் கவரும் விதமாகத் தர வேண்டுமென்பதிலும் உறுதியாக நின்றிருக்கிறார்.
‘இங்க பச்சரிசி புழுங்கரிசி காபி டீ எல்லாத்துலயும் சாதி இருக்கு’, ‘வேண்டாம்னு சொல்ற வெளிநாட்டுக்காரங்களை வீட்டுக்குள்ள கூப்பிட்டு சாப்பாடு போடுவீங்க, ஆனா எங்களை வீட்டுக்கு வெளியில நிக்க வைப்பீங்க’, ‘கல்யாணம் ஒருநாள் கூத்துன்னா காதல்ல தினமும் திருவிழா’, ‘உன்னோட கோயில்னு சொல்றியே, உன்னால கோயில் கருவறைக்குள்ள போக முடியுமா’ என்பது போன்ற வசனங்களில் கவனம் ஈர்த்திருக்கிறது இப்படம்.
திரைக்கதை வசனத்தில் டி.அருள் எழிலனின் பங்களிப்பு, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் பேச்சு என்று சாதீயம் குறித்த பார்வையை நாலாபுறமிருந்தும் தருவிப்பதில் முனைப்பு காட்டியிருக்கிறார் இயக்குனர்.
வழக்கமாக, இதுபோன்ற கதைகளில் காதலியை ஆதிக்கச் சாதியினராகக் காட்டினால் அதனை பேலன்ஸ் செய்யும்விதமாக இன்னொரு ஜோடியில் காதலன் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவராகக் காட்டப்படுவார். இதில் அப்படி எதுவும் நிகழவில்லை.
‘இங்க சாதிங்கறது பெண்ணோட கருப்பையில வைக்கப்பட்டிருக்கு’ என்றொரு வசனமே படத்தில் வரும் பெண் பாத்திரங்களை ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவர்களாகக் காட்ட உதவியிருக்கிறது.
ஒரு காட்சியில், குளத்திற்குள் இருந்து புத்தர் சிலையை எடுத்து வரும் சிறுவர்கள் அதனை வணங்கப் போவதாகச் சொல்கின்றனர்.
அதற்கு ‘சிலையைக் கும்பிடப் போறாங்க’ என்று காதலி சொல்ல, ‘விளையாட்டா பண்ணாலும் பசங்க சரியாத்தான் செய்றாங்க’ என்கிறார் காதலன்.
இது போன்ற இடங்களே படத்தை வெகுவாக ரசிக்கச் செய்கிறது.
நான்கு கதைகளும் தமிழ்நாட்டின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் நிகழ்வதாகக் காட்டியிருப்பது அழகு.
கூடவே, ‘சிட்டியில எல்லாம் யார் சாதி பார்க்குறா’ என்ற வார்த்தைகளுக்குப் பதிலடி தரும் வகையில் சென்னை மாநகரில் நிலவும் சாதீயத்தையும் சொல்லியிருப்பது அருமை.
இப்படியொரு படத்தில் கார்ல் மார்க்ஸ் ஓவியத்தை ‘மங்கலாக’ காட்டியிருப்பதோடு, சாதி வேறுபாடு தொடர்பான வசனங்களை வாக்கியம் வாக்கியமாக ‘ம்யூட்’ செய்யவும் வைத்திருக்கிறது சென்சார் போர்டு.
ஓடிடி வெளியீடு அல்லது அன்கட் வெர்ஷன் வெளியீடு நிகழ்ந்தால் இக்குறைகளைத் தவிர்க்க முடியுமா என்று தெரியவில்லை.
முடிந்தவரை எவ்விதச் சார்பும் இல்லாமல் கதை சொல்லியிருந்தாலும், ஊராரின் கண்களுக்கு அகப்படாமல் அல்லது அவர்களால் கூர்மையாக நோக்கப்படாமல் காதலர்கள் கைகோர்த்துச் சுற்றுவதாகக் காட்டியிருப்பது மட்டுமே செயற்கையாகத் தெரிகிறது.
கூடவே ஆடை வடிவமைப்பிலும் ஒப்பனையிலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாமே என்று யோசிக்க வைத்திருக்கிறது.
வன்மம் கக்கும் சாதீயத்தை, ஆணவக் கொலைகளை வேரோடு பிடுங்கி எறிய வேண்டுமென்ற வேட்கை இயக்குனர் சுகுமார் அழகர்சாமியின் படைப்பாக்கத்தில் தெரிகிறது.
அதேநேரத்தில் அந்த மாற்றம் நொடியில் நிகழ்ந்துவிடும் என்றோ, தனிநபர்களால் அது சாத்தியப்படும் என்றோ காட்டாதது ஆறுதல்.
சென்னை உட்லண்ட்ஸ் சிம்பொனியில் இப்படம் பார்த்தபோது, மொத்த 3 பேர் மட்டுமே அரங்கில் இருந்தோம்.
எங்களது வருகையைத் திரையரங்கம் மதித்தது போற்றுதலுக்குரியது.
பல நேரங்களில் இது போன்ற படங்கள் பார்வையாளர்கள் வராமல், ஒருமுறை கூட திரையிடப்படாமல் புறந்தள்ளப்படுகின்றன.
அந்த நிலைமை ‘வர்ணாஸ்ரமம்’ படத்திற்கு நேராமல் இருக்க வேண்டும். அதுவே அழகியலுடன் கூடிய நேர்த்தியான படைப்பொன்றைத் தந்த படைப்பாளிகளுக்குச் செய்யும் மரியாதை!
– உதய் பாடகலிங்கம்