-தமிழ்நாடு அரசு
கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் முதன்மைச் செயலாளரும் தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் தலைமையில் மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பேசிய அதுல் ஆனந்த், 2021-ன்படி கொத்தடிமைத் தொழிலாளர் முறை உறுதி செய்யப்படும் பட்சத்தில் ஆண் பயனாளிகளுக்கு ரூ.1 லட்சமும்,
சிறப்பு பிரிவு பயனாளிகள் அதாவது பிச்சை எடுக்கும் தொழிலிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட குழந்தைகள், அனாதைக் குழந்தைகள், கட்டாய குழந்தைத் தொழிலாளர்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு ரூ.2 லட்சமும்,
திருநங்கைகள், ஆள் கடத்தல் மற்றும் பாலியல் வன் கொடுமைகளில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு ரூ. 3 லட்சமும் மறுவாழ்வு நிவாரணத் தொகையாக வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
தொழிலாளர் துறையின் சீரிய முயற்சியால், 2017 ஏப்ரல் முதல் 2022 டிசம்பர் வரை 1,444 கொத்தடிமைத் தொழிலாளர்கள் கொத்தடிமை முறையிலிருந்து மீட்கப்பட்டு அவர்களுக்கு விடுதலைச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன என்றும், அவர்களுக்கு ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அதோடு கொத்தடிமைத் தொழிலாளர்களை பணியமர்த்துவோர் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதுல் ஆனந்த் குறிப்பிட்டார்.