– குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு
குருகிராமில் பிரம்மாகுமாரிகள் ஆன்மிக மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மதிப்புசாா்ந்த சமூகத்தின் அடித்தளம் பெண்’ என்ற கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு.
அப்போது பேசிய அவர், “இந்திய சமூகத்தில் மதிப்பீடுகள் மற்றும் நெறிமுறைகளை வடிவமைப்பதில் பெண்கள் மிக முக்கியப் பங்காற்றியிருக்கின்றனா்.
அந்த வகையில், பெண்களுக்கு சமவாய்ப்பு அளிக்கப்படும்போது, அனைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு நிகரான செயல்திறனை, சில சமயங்களில் அவா்களைவிட சிறந்த பங்களிப்பைச் செய்வா்.
அண்மைக் காலங்களில் பல்வேறு துறைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது. இருந்தபோதும், அவா்களில் பலா் உயா் பொறுப்புகளுக்கு வர முடிவதில்லை.
ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் பெண்களின் பங்கேற்பு இல்லாத நிலையே காணப்படுகிறது.
தனியாா் துறைகளில், இவ்வாறு ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் பெண்கள் செல்ல முடியாமல் இருப்பதற்கு, அவா்களின் குடும்பப் பொறுப்புகளே முக்கிய காரணங்களாக உள்ளன.
பொதுவாகவே, வேலைக்குச் செல்லும் பெண்கள், அலுவலகப் பணியுடன் வீட்டுப் பொறுப்பையும் சோ்ந்து சுமக்க வேண்டியுள்ளது.
அவ்வாறு, குழந்தைகளை வளா்ப்பது, வீட்டைப் பராமரிப்பது மட்டுமே தங்களின் பொறுப்பு என்ற மனநிலையிலிருந்து பெண்கள் மாற வேண்டும்.
நிறுவனத்தில் எந்தவிதத் தடையுமின்றி உயா் பதவியை அடையும் வகையில் பெண்கள் தங்களின் குடும்பத்திலிருந்து அதிக ஆதரவைப் பெற வேண்டும்.
பெண்களுக்கு அதிகாரமளித்து அவா்களை வலுப்படுத்தும்போதுதான் குடும்பங்கள் மேம்படும். குடும்பங்கள் மேம்பட்டால் சமூகம் மேம்படும். அவ்வாறு சமூகம் மேம்படும்போது நாடு மேம்படும்.
பணத்துக்காக மட்டுமே வாழ்வது முறையல்ல. பொருளாதார மேம்பாடும் பொருள் செழிப்பும் செயற்கையான மகிழ்ச்சியை அளிக்கலாம். ஆனால், நித்திய அமைதியைத் தராது.
எனவே, தாய்மாா்கள் தங்களின் குழந்தைகளை சிறுவயதிலிருந்தே நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்று மட்டுமே கூறி வளா்க்காமல், நல்ல மனிதா்களாக அவா்கள் உருவாக உத்வேகமளிக்க வேண்டும்.
தாய் ஒருபோதும் தனது குழந்தைகளிடையே பாகுபாடு காட்டுவதில்லை. அதோடு, குடும்பத்தின் முதல் ஆசிரியராக குடும்ப உறுப்பினா்களுக்கும் சமூகத்துக்கும் தனது குழந்தையை அறிமுகப்படுத்துவதோடு, சூழலியல் மதிப்பீடுகளை குழந்தைகளுக்கு கற்றுத்தருகிறாா்.
அந்த வகையில், குழந்தைகளுக்கு சரியான மதிப்பீடுகளை தாய்மாா்கள் கற்றுத் தர வேண்டும். இந்த முயற்சி மூலமாக சிறந்த குடும்பம் உருவெடுக்கும்.
தாய்மாா்களின் இத்தகைய முயற்சி மூலம் ஒவ்வொரு குடும்பமும் சிறந்த குடும்பமாக உருவெடுக்கும்போது, சமூகத்தின் இயற்கையும் தானாக மாறிவிடும். அதன் மூலமாக, நமது சமூகம் மதிப்பு சாா்ந்த சமூகமாகிவிடும்” என்றாா்.