தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு – பாரதி!

பரண் :
#

‘’தம்பி, நான் ஏது செய்வேனடா!

தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது.

தமிழனை விட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது.

தம்பி- உள்ளமே உலகம்.

ஏறு ! ஏறு ! ஏறு ! மேலே.மேலே.மேலே.

நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டி வைத்துக் கொண்டு பிழைக்க முயற்சி பண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிரி.

உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ.
பற ! பற ! மேலே.மேலே.மேலே.
தம்பி – தமிழ்நாடு வாழ்க என்றெழுது.
தமிழ்நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது.

தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது.
அந்தத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களிலே நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது.

தமிழ்நாட்டில் ஒரே ஜாதி தான் உண்டு.
அதன் பெயர் தமிழ் ஜாதி.’’

– தனது நண்பரான நெல்லையப்பருக்கு பாரதி புதுச்சேரியிலிருந்து எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி.

எழுதிய நாள் 1915 ஜூலை 19 ஆம் தேதி.

Comments (0)
Add Comment